மாறன் வழுதி சங்ககால பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான்.குறுந்தொகையில் உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான்.
பாண்டியன் மாறன் வழுதி அரசனாகவும், புலவராகவும் விளங்கியவன். இவனது பாடல்கள் இரண்டு உள்ளன. இவன் அரசனாகவும் புலவனாகவும் விளங்கியவன். [1]
பூக்காரி மேல் காதல்
ஆறாமல் இருக்கும் புண்ணில் வேல் பாய்ந்தது போல ஆற்றங்கரையில் ஆண்குயிலும் பெண்குயிலும் மாறி மாறிக் கூவுவதுதான் கொடிது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். “குருக்கத்திப் பூவும், பித்திகைப் பூவும் விரவித் தொடுத்த பூ வாங்குகிறீர்களா” (பூவோ பூ) என்று தெருவில் திரிந்து கூவுவாள் குரல் அதனினும் கொடிதாக உள்ளது. (என் நெஞ்சில் பேசிக்கொண்டே இருக்கிறது) – பூக்காரி மேல் காதல் கொண்ட அவன் இவ்வாறு பாங்கனிடம் சொல்கிறான். [2]
அவள் அழகு
குறிஞ்சிப் பூ போன்ற மேனி, கருங்குவளை மலர் போன்ற கண், மயில் போன்ற சாயல், கிளி போன்ற மொழி, பாவை போன்ற வனப்பு, இப்படியெல்லாம் அவளது தாயும், அவளது தேயமும் அவளைப் பாராட்டுகின்றன. எனக்கோ அவள் கூந்தல் மணம் நெஞ்சில் மணந்துகொண்டே இருக்கிறது. அவளோடு கிடந்தவன் இப்படிப் பேசுகிறான். [3]
அடிக்குறிப்பு
- ↑
இவனது பாடல்கள்: நற்றிணை 97, 301.
- ↑
நற்றிணை 97.
- ↑ நற்றிணை 301