மதுரை மாவட்டம் (Madura District) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இது தற்போதைய தமிழ்நாட்டின் மாவட்டங்களான மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் (விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதிகளையும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
மதுரை மாவட்டமானது பாண்டியப் பேரரசின் மையமாக இருந்தது. இதன் தலைநகராக மதுரை நகரானது சங்க காலத்திலிருந்து இருந்து வந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இப்பகுதியானது சோழப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் மேலாதிக்கத்தில் பாண்டியர்கள் இருந்தனர். சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் தங்கள் பேரசை நிலைநாட்டினர். குறுகிய கால தனி ஆட்சிக் காலத்துக்குப் பின்னர், பாண்டியர்கள் அலாவுதீன் கில்சியினால் ஆளப்பட்ட தில்லி சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன்பிறகு மதுரைப் பகுதியானது விசயநகரப் பேரரசால் வெற்றி கொள்ளப்படும்வரை மதுரை சுல்தானகத்தால் ஆளப்பட்டது. விஜயநகரப் பேரரசின் வெற்றிக்குப் பிறகு மதுரை நயக்கர் அசின் ஆட்சி நிலைகொண்டது. 1736 இல் மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியது. இதனால் சிறிதுகாலம் உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டன. முடிவில் மதுரையை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றி மதுரை மாவட்டமானது உருவாக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பதிமூன்று வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இதில் இராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட 5 சமீந்தாரி வட்டங்களும், சிவகங்கைச் சீமைக்கு உட்பட்ட 3 சமீந்தாரி வட்டங்களும் அடங்கும்.
1901 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டமானது நிர்வாக வசதிக்காக, நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.