உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும்.[1][2] அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.