சோங்கிங் (Chongqing,முந்தைய எழுத்தாக்கம்:Chungking, எளிய சீனம்: 重庆) சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். இது சீனாவின் ஐந்து தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. நிர்வாக நோக்கில் சீன மக்கள் குடியரசினால் நேரடியாக ஆட்சி செய்யப்படும் நான்கு நகராட்சிகளில் (மற்ற மூன்று நகராட்சிகள்:பெய்ஜிங், சாங்காய்,தியான்ஜின்) உள்நாட்டில் அமைந்துள்ள ஒரே நகராட்சியாகும்.
சிசுவான் மாநிலத்தின் பங்காக இருந்த இந்த நகரம் தனியான நகராட்சியாக மார்ச் 14, 1997 அன்று உருவாக்கப்படது. 2007ஆம் ஆண்டில் சோங்கிங் நகராட்சியின் மக்கள்தொகை 31.4 மில்லியனாக இருந்தது.[1] இதன் ஆட்சிப்பகுதியில் 19 மாவட்டங்கள், 17 கௌன்டிகள் மற்றும் நான்கு தன்னாட்சி பெற்ற கௌன்டிகள் உள்ளன. 82,300 கிமீ² (31,800 மைல்²) பரப்பளவுள்ள இந்த நகராட்சி ஹைனன் மாநிலத்தை விடப் பெரியது. மக்கள்தொகையின்படி உலகின் மிகப்பெரும் நகராட்சியாகவும் இருக்கலாம்; பரப்பளவின்படியும் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கலாம்.