இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு (ஆங்கில மொழி: Islamic State in Iraq and the Levant, அரபி மொழி: الدولة الاسلامية في العراق والشام) சுருக்கமாக ISIL அல்லது ஐசிஸ் (ISIS) என்று அழைக்கப்படுகிறது. இசிஸ் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கிலும்வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா[1] போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. இசிஸ் இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும்.[2] இக்குழுவானது ஈராக் போரின் போது உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் இசிஸ் இயக்கம் அல் காயிதாவுடன் இணைந்து செயல்பட்டது. இது சுன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல் காயிதாஇசிஸ் உடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டது.[3] இக்குழுவானது அல் காயிதாவை விடவும் அபாயகரமான குழு என நிபுணர்கள் கருதுகின்றனர்.[4] மேலும் இவ்வமைப்பிற்கு ஆதரவாக இருப்போம் என போகோ அராம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.[5]
வெற்றிகள்
ஈராக்கியப் போரின் உச்சத்தின் போது இக்குழுவானது ஈராக்கின் அல் அன்பார் (Al Anbar), நைனவா (Ninawa), கிர்குக் (Kirkuk) மற்றும் சலாஹுத்தீன் (Salah ad Din) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும் பாபில் (Babil), தியாலா (Diyala), பக்தாதின் பெரும்பான்மையான பகுதிகள் என்பவற்றிலும் தாக்குதலில் ஈடுபட்டது. இது பகுபாவைத் தனது தலைநகராக அறிவித்துக் கொண்டது.[6][7][8][9]சிரிய மக்கள் போர் தொடக்க காலத்தில் இக்குழுவானது சிரியாவின் அர்-ரக்கா (Ar-Raqqa), அலெப்போ (Aleppo) ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.[10][11] அரசு இராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்களைக் கொன்றதாகவும் இசிஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[12] அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பகுதியில் இருந்த காலகட்டதில் இக்குழுவானது பின்னடைவைச் சந்தித்தது. 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இக்குழு தனது உறுப்பினர்களின் எண்ணிகையை 2,500 என இரட்டிப்பாக்கியது.[13] சிரியாவின் வட பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இக்குழு பெற்றுள்ளது.
பாலியல் அடிமைகள்
இக்குழுவானது யாசிடி மதப்பிரிவுப் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். பன்னிரெண்டு அமெரிக்க டாலர்களுக்குப் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். மேலும் இந்த அமைப்பானது "கிறுஸ்தவ மற்றும் யாசிடி பெண்கள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது" எனும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். பூப்பெய்தாதப் பெண்களுடன்கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிக்கிக் கொண்டவர்களில் சிலர் மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயலுகின்றனர்.[14][15]
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்
இராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் மிகக் கொடூரமான வகையிலான செயல்களை செய்துள்ளனர் என்று தி ஹேகிலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அரச வழக்கறிஞரான ஃபதௌ பென்சௌடா கூறியுள்ளார்.[16]
வெளிநாட்டைத் தாக்குதல்
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான (எப்.பி.ஐ) அதிகாரிகள் கூறிய தகவலின் படி ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் சமீபத்தில் இவர்கள் தாக்குதல் நடத்தியதுபோல் அமெரிக்காவிலும் தக்குதல் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.[17]
ஆக்கிரமிப்பு
இந்த அமைப்பு 2015 மே மாதம் வரையில் ஈராக்கின் பலபகுதிகளை பிடித்துள்ளது. மே மாதம் 19 ஆம் திகதி அன்று ஈராக்கின் முக்கிய நகரமான ரமாடி என்ற நகரைப்பிடித்துள்ளது இந்த தீவிரவாத அமைப்பு.[18] உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த அமைப்பு பாக்கிஸ்தானிடமிருந்து அணு ஆயுதத்தை வாங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.[19]
நினைவுச் சின்னங்களை அழித்தல்
சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி இசுலாமியத் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் பல்மைராவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.
[20][21][22]
பயணிகள் விமான அழிப்பு
எகிப்து நாட்டின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்திலிருந்து இரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு அந்தக் காட்சியை வீடியோவில் வெளியிட்டார்கள். இந்தத் தாக்குதலில் அதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர்.[23]
பாரிஸ் தாக்குதல்
2015 நவம்பர் 13 அன்று பிரான்சின் தலைநகர் பாரிசில்இசிஸ் இயக்கம் தாக்குதல் நடத்தினர். நவம்பர் 13 இரவு பாரிசின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை இடம்பெற்றன. தாக்குதல்கள் மஐநே இரவு 09:16 மணிக்கு,[24] பிரான்சு விளையாட்டரங்கம், மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும், 1வது, 10வது, 11வது மாவட்டங்களிலும் ஆரம்பமாயின.[24][25] மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு நிகவுகளும் இடம்பெற்றன.[25]