சோல்செனிட்சின் ரஷ்யாவின்கிஸ்லவோத்ஸ்க் நகரில் "தாய்சியா சோல்செனிட்சின்" என்ற ஓர் இளம் விதவைக்குப் பிறந்தார். தந்தை இளம் வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்[1]. சொல்செனிசினின் இளமைக் காலம் ரஷ்ய உள்நாட்டுப் போர்க் காலமாகும். 1930 இல் இவரது குடும்ப நிலம் அரசினரால் எடுக்கப்பட்டு கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. மிகவும் ஏழ்மையான நிலையிலும் தாயார் இவரை இலக்கிய, அறிவியல் துறையில் இவரைப் படிக்கத் தூண்டினார். பழமைவாத கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை வைத்து அதன்படியே இவரும் வளர்ந்தார்[2]. ரஸ்தோவ் அரச பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தாயார் இறந்தார். ஏப்ரல் 7, 1940 இல் சோல்செனிட்சின் "நத்தாலியா ரெஷெதோவ்ஸ்கயா" என்ற வேதியியல் மாணவியைத் திருமணம் புரிந்து கொண்டார்[3]. இவரைப் பின்னர் 1952 இல் மணமுறிவு செய்து கொண்டு மீண்டும் 1957 இல் இவரை மீள மணம் புரிந்து 1972 இல் திரும்பவும் மணமுறிவு பெற்றார். 1973 இல் "நத்தாலியா ஸ்வெத்லோவா" என்ற கணிதவியலாளரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்[4].
இரண்டாம் உலகப் போரின் போது செம்படையில் இணைந்து முக்கிய களங்களில் போரிட்டார். போர்ப் பங்களிப்புகளுக்காக இரண்டு தடவைகள் பதக்கங்களும் பெற்றுக் கொண்டார். பெப்ரவரி1945 இல் கிழக்கு புருசியாவில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஜோசப் ஸ்டாலினின் போர் முறை குறித்து தாக்கி தனது நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்[5]. சோவியத்துக்கு எதிராக கருத்துகள் பரப்பிய குற்றம் சாட்டப்பட்டு மாஸ்கோவின் "லுபியான்கா" சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். ஜூலை 7, 1945 இல் இவர் எட்டாண்டுகள் கட்டாய தொழில் பண்ணைக்கு அனுப்பப்பட்டார்.