பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (Patna Collectorate) பட்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமை அலுவலகமாகும். கங்கையாற்றின் கரையில் காந்தி மைதானத்திற்கு அருகில் இவ்வலுவலகம் அமைந்துள்ளது.
டச்சு கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியக் கட்டிடக்கலை [1] பாணியில் பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இது 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஒரு கட்டிட வளாகமாகும். 2008 ஆம் ஆண்டு , பீகார் அரசாங்கம் பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாரம்பரியக் கட்டடமாக பட்டியலிட்டது. [2]
டச்சுக்காரர்கள் முதன்முதலில் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பட்னாவுக்கு வந்தனர். இந்த கட்டிடம் டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு ஒரு பண்டகசாலையாக பயன்படுத்தப்பட்டது. [3] பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் , ஆங்கிலேயர்கள் இந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகப் பயன்படுத்தினர். [4] 1857 ஆம் ஆண்டு முதல் தற்போதைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. 1938 ஆம் ஆண்டில், மாவட்ட வாரிய கட்டிடமும் இதனோடு சேர்க்கப்பட்டது, இக்கட்டிடம் பிரித்தானியக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. [5]
இந்திய குடிமைப் பணி அலுவலர் பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நிர்வகிக்கிறார். குற்றவியல் நீதிபதி என்றும் பொதுவாக இவர் அழைக்கப்படுவதுண்டு. துணை ஆட்சியர் (பொது), துணை ஆட்சியர் (நிலம் கையகப்படுத்தல்), துணை ஆட்சியர் (வருவாய் மீட்பு), துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை), துணை ஆட்சியர் (தேர்தல்), துணை ஆட்சியர் (நில சீர்திருத்தங்கள்) மற்றும் மூத்த நிதி அலுவலர் முதலானவர்கள் இவ்வலுவலகக் கட்டிடத்தில் அமர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
2016 ஆம் ஆண்டில் பீகார் அரசு பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு அவற்றுக்குப் பதிலாக ஒரு புதிய வளாகத்தை கட்ட முடிவு செய்தது. வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பரவலான எதிர்ப்புக்கும் விமர்சனங்களுக்கும் இது வழிவகுத்தது, [5] புது தில்லியை தளமாகக் கொண்ட கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையும்[6] இலண்டனை தளமாகக் கொண்ட காந்தி அறக்கட்டளையும்[7] எதிர்ப்புக் குரல் எழுப்பிய அமைப்புகளில் முக்கியமானவைகள் ஆகும். ஏப்ரல் 2016 இல் இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் அல்போன்சசு சுடோலிங்கா பீகார் முதல்வர் நிதீசு குமாருக்கு எழுதிய கடிதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை இடிப்பைத் தவிர்க்குமாறு முறையிட்டார். [2]
{{cite book}}