நோய் எதிர்ப்பாற்றல் முறைமை

ஒரு அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியினால் அவதானிக்கப்படும்போது தெரியும் ஒரு தனி நடுவமைநாடியும் (மஞ்சள்), அதனால் விழுங்கப்படும் ஆந்த்ராக்ஸ் எனப்படும் பாக்டீரியாவும் (செம்மஞ்சள்)

நோய் எதிர்ப்பாற்றல் (Immune system) என்பது, நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் முதலானவற்றை அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நோய்களிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் உடலில் அமைந்த பொறிமுறைகளின் தொகுதி ஆகும். இத் தொகுதி, வைரசுகள் முதல் ஒட்டுண்ணிப் புழுக்கள் வரையிலான நோய்க்காரணிகளைக் கண்டுபிடிக்கின்றது. இத் தொகுதி முறையாகச் செயற்படுவதற்கு உயிரினங்களின் சொந்த ஆரோக்கியமான உயிரணுக்கள் அல்லது கலங்கள், திசுக்கள் (tissue) என்பவற்றிலிருந்து முன் சொன்ன நோய்க்காரணிகளைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் உயிரினங்களில் தொற்றிக்கொள்வதற்குப் புதுப்புது வழிகளை உருவாக்கிக் கொள்வதனால் இவ்வாறு கண்டறிதல் மிகவும் சிக்கலானது ஆகும்.

இவ்வாறான சவால்களிலிருந்து தப்புவதற்காகப் பலவகையான பொறிமுறைகள் உள்ளன. ஒரு கலத்தினாலான பக்டீரியா போன்ற உயிரினங்களில் கூட வைரசுத் தொற்றுக்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான நொதியத் (enzyme) தொகுதிகள் காணப்படுகின்றன. வேறு அடிப்படையான நோய் எதிர்ப்பு முறைமைகள் தொல்பழங்கால மெய்க்கருவுயிரிகளில் உருவாகி அவற்றின் வழிவந்தவைகளான தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பூச்சிகள் என்பவற்றில் இன்றும் உள்ளன. இப் பொறிமுறைகள், டிபென்சின்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பெப்டைட்டுகள், பகோசைட்டோசிசுகள் மற்றும் துணை முறைமைகளை உள்ளடக்குகின்றன.

மனிதன் போன்ற முள்ளந்தண்டு விலங்குகளில் இந்த நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் முன்னேற்றமடைந்த எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு பொறிமுறைகளைக் [1] கொண்டிருக்கும். இந்த பொறிமுறையானது பல்வேறு வகையான புரத மூலக் கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு இடையிலான இயக்க நிலையிலுள்ள வலைப் பின்னலை உள்ளடக்கியதாகும். இதனால் மனிதனிலுள்ள சிக்கலான எதிர்ப்பு விளைவானது, நீண்டகால தொடர் பயன்பாட்டால், குறிப்பிட்ட நோய்க்காரணிகளை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்ப்பு திறனை நினைவில் கொள்ளக் கூடிய ‘இசைவாக்கப்பட்ட எதிர்ப்பாற்றல்' ("adaptive immunity" or "acquired immunity") என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராக உருவாகும் முதலாம்தர எதிர் விளைவானது நினைவில் கொள்ளப்பட்டிருக்கையில், அதே நோய்க்காரணி மீண்டும் தாக்கும்போது, முன்னையதை விடவும் வீரியமான எதிர் விளைவானது உடலில் உருவாவதனால், அந்நோய்க்காரணிக்கு எதிராக உடல் தொழிற்பட்டு நோயை முற்றாக எதிர்க்கும் தன்மையை பெறுகின்றது. இதனடிப்படையிலேயே தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறான நோயெதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் குறைபாடும் ஒரு நோயாக இருக்கிறது. இது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோய் (immunodeficiency) என அழைக்கப்படுகிறது. மனிதரில் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியின் திறன் சாதாரண நிலையைவிட குறையும்போது, பல தொற்றுநோய்கள் மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவும், தொற்று நோய்களால் இறப்பு ஏற்படவும் ஏதுவாகின்றது. இவ்வகை குறைபாட்டு நோயானது, ஒருவரில் பாரம்பரிய முறையில் கடத்தப்படும் ஒரு நோயாகவோ, அல்லது எச்.ஐ.வீ (HIV) போன்ற வைரசு தொற்றினால் ஏற்படும் எய்ட்சு (AIDS) நோயாகவோ இருக்கலாம்.

அதேவேளை, சிலசமயம், இந்த எதிர்ப்பாற்றல் முறைமையின் அளவுக்கதிகமான தொழிற்பாட்டினால், சாதாரண இழையங்கள்கூட ஒரு வெளி உயிர்க் காரணியாக இனம் காணப்பட்டு தாக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இது தன்னுடல் தாக்குநோய் என அழைக்கப்படும்.[2]

நோய் எதிர்ப்பாற்றலின் கூறுகள்

நோய் எதிர்ப்பாற்றல் இரு வகைப்படும். முதலாம் வகையான தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றல் அனைத்து வகையான நோயாக்கிகளையும் தனித்துவமில்லாமல் தடுக்க பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமை தாவரங்கள், விலங்குகள் உட்பட மேலும் பல

உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. எனினும் பல நோயாக்கிகள் இம்முறைமையை முறியடித்து நோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. உதாரணமாக அம்மை நோய்க்கான நோய்க்காரணி உடலினுள் வந்த பின்னர் அதனை தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றலினால் அழிக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் மூலம் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றலில் நோயாக்கிகளின் செயற்பாட்டைத் தடுக்கும் பிரதான கூறாக பிறபொருளெதிரிகள் உள்ளன. ஒவ்வொரு பிறபொருளெதிரியும் குறிப்பிட்ட நோயாக்கியை மாத்திரமே இனங்கண்டு தாக்கக்கூடியன. ஏனையவற்றில் இவை ஆற்றலற்றவையாக உள்ளன. உதாரணமாக போலியோ வைரசுக்கான பிறபொருளெதிரி போலியோ வைரசுக்கு எதிராக மாத்திரமே வேலை செய்யும்; அம்மை நோய்க்கெதிராக இப்பிறபொருளெதிரி வேலை செய்யாது. அம்மை நோய்க்கென வேறு வகையான பிறபொருளெதிரி உருவாக்கப்பட வேண்டும். எனவே இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் குறிப்பிட்ட நோயாக்கிகளை மட்டும் எதிர்த்துச் செயற்படுவதால் இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் எனப்படும்.
நோயெதிர்ப்பாற்றல் முறைமையின் கூறுகள்
தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் தனித்திறனுடைய நோயெதிர்ப்பாற்றல்
பல வகை நோயாக்கிகளுக்கு எதிராகச் செயற்படும் ஒரு பிறபொருளெதிரி வகை குறிப்பிட்ட நோயாக்கியை மாத்திரம் தாக்கும்
நோயாக்கி தாக்கியவுடன் தூண்டற்பேறு கிடைக்கும் உயர் தூண்டற்பேறு கிடைக்க சிறிது காலம் செல்லும்
கலங்கள் மூலக்கூறுகள் இரண்டும் பங்குகொள்ளும் கலங்கள் மூலக்கூறுகள் இரண்டும் பங்குகொள்ளும்
நோய்த்தாக்கம் தொடர்பான நினைவகம் பேணப்படாது நோய்த்தாக்கம் மூலம் உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள் மீளுற்பத்தியாக்கக்கூடியவை
பல உயிரினங்களில் உள்ளது தாடையுள்ள முள்ளந்தண்டுளிகளில் மாத்திரம் உள்ளது.

தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை

அனைத்து வகையான நோயாக்கிகளுக்கு எதிராகவும் ஒரே முறையில் எதிர்ப்பாற்ரலை வெளிப்படுத்தும் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை எனப்படும். இம்முறைமை மூலம் பொதுவாக பக்டீரியாக்களும், பூஞ்சைகளும் அழிக்கப்படுகின்றன/ தடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வகை நோயெதிர்பாற்றலால் நோயாக்கிகளிடமிருந்து நீடித்து நிலைக்கும் நோயெதிர்ப்பாற்றலை வழங்க முடியாது. அதாவது இவ்வகை நோயெதிர்ப்பாற்றலால் தடுக்கப்படும் நோயாக்கி பின்னர் மீண்டும் நோயைத் தோற்றுவிக்கலாம்.

மேற்பரப்புத் தடுப்புகள்

எமது உடலில் நோயைத் தோற்றுவிக்கும் நுண்ணங்கிகளின் உட்பிரவேசத்தைத் தடுப்பதற்காக விசேடமாகத் திரிபடைந்த மேற்பரப்புக்கள் கூர்ப்படைந்துள்ளன. உடலைப் பாதுகாக்கும் முக்கிய தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் கூறாக தோல் உள்ளது. தோலின் வெளிமேற்பரப்பு இறந்த கலங்களாலானது; கெரெட்டினேற்றப்பட்டுள்ளது; தீங்கிழைக்காத பல நுண்ணங்கிகளைக் கொண்டுள்ளது; நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களுள்ள வியர்வைச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. தோலிலுள்ள தீங்கிழைக்காத நுண்ணங்கிகள் (Natural flora) தீங்கிழைக்கும் நுண்ணங்கிகளுக்குப் போட்டியாக அமைவதோடு அவற்றை அழிப்பதிலும் பங்கெடுக்கின்றன. இவ்வகைத் தடுப்புக்கள் எம் உடலை பல்வேறு நோயாக்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. மூக்குக் குழி, தொண்டைக் குழியிலுள்ள சீதமும், இரைப்பையிலுள்ள உதரச் சாறும் மேற்பரப்புத் தடுப்புக்களான மேலதிக உதாரணங்களாகும். அத்தோலில் சிறிய இடத்தில் (lysosme) என்ற ஒன்று தோலை பாதுகாக்கிறது.

அழற்சி

மேற்பரப்புத் தடுப்புக்களை மீறி நோயாக்கி உடலினுள் உள்நுளையும் போது அழற்சி ஏற்படும். அழற்சியேற்பட்ட பகுதியில் குருதி மையிர்த்துளைக் குழாய்களின் விட்டம் அதிகரிப்பதால் குருதிப் பாய்மமும் வெண்குருதிக் கலங்களும் அப்பகுதியில் செறிவடைந்து வீக்கம் ஏற்படும். இதனால் அதிக வலியும் ஏற்படலாம். அதிக அனுசேப வீதத்தால் அப்பகுதியின் வெப்பநிலையும் உயரும். இதன் போது நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களாலும், வெண்குருதிக் கலங்களாலும் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. அழற்சியைத் தூண்டுவதில் வெண் குருதிக்கலமான மூலநாடி முக்கிய பங்கு வகிக்கின்றது.

வெண்குருதிக் கலங்கள்

குருதியின் இலத்திரன் நுணுக்குக்காட்டிப் படம். இதில் பல செங்குருதிக் கலங்களுடன், வெண்குருதிக் கலங்கள் மற்றும் குருதிச் சிறுதட்டுக்களும் உள்ளன.

தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றலில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம், மூலநாடி, இயோசிநாடி ஆகிய வெண்குருதிக் கலங்கள் பங்களிக்கின்றன. இவற்றில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம் என்பன நோயாக்கிகளை விழுங்கி அழிக்கும் தின்குழியச் செயற்பாடு மூலம் நோயெதிர்ப்பாற்றலை வழங்குகின்றன. தனித்துவமற்ற நோயெதிர்ப்பாற்றலில் முக்கியமான வெண்குருதிக் கலம் நடுநிலைநாடி/ நடுவமைநாடி ஆகும். குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் இதுவே அதிகளவானதாக உள்ளது. குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் கிட்டத்தட்ட 50-60% ஆனவை நடுநிலை நாடிகளாகும். இவை அழற்சிச் செயற்பாட்டின் போது பாதிப்புக்குள்ளான கலங்களால் சுரக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு குருதியிலிருந்து பாதிக்கப்பட்ட இழையத்துக்குள் ஊடுருவிச் செல்லும். அங்கே தீங்கிழைக்கும் நோயாக்கிகளை தின்குழியச் செயற்பாடு மூலம் உள்ளெடுத்து எம்முடலை நடுநிலைநாடிகள் பாதுகாக்கின்றன.

தனித்திறனுடைய நோயெதிர்ப்பாற்றல்

பிறபொருளெதிரி ஒன்றின் எளிய கட்டமைப்பு

இது ஒவ்வொரு வகை நோயாக்கிக்கும் எதிராகத் தனித்துவமான முறையில் செயற்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமையில் பிறபொருளெதிரிகளும் அவற்றை உற்பத்தி செய்யும் வெண்குருதிக்கலமான நீணநீர்க் குழியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கூறியவாறு ஒரு வகைப் பிறபொருளெதிரி ஒரு வகை நுண்ணங்கியின் பிறபொருளை (அடையாளப்படுத்தியை) மாத்திரம் தாக்குகின்றமை இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நோயெதிர்ப்பாற்றல் குறிப்பாக வைரசுக்களை எதிர்க்கப் பரவலாக நடைமுறைப்படுத்தப்படும் முறைமையாகும்.

இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்

இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (Natural Killer Cells) அல்லது NK உயிரணுக்கள் என்றழைக்கப்படும் இவை நிணநீர்க்கலங்கள் ஆகும். உள்ளக நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றன, அவை நேரடியாக உட்புகும் நுண்ணுயிர்களை ஆக்கிரமித்து தாக்குவதில்லை.மாறாக, இயற்கையாகக் கொள்ளும் உயிரணுக்கள் குறையெதிர்ப்பு கொண்ட விருந்தோமபி செல்களான புற்றுநோய்க்கட்டி உயிரணுக்கள் அல்லது வைரஸ் பாதிக்கப்பட்ட செல்கள் போன்ற செல்களை "சுயாதீனமற்ற" அல்லது தன்னிலை மறந்த நிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் நாடி அழிக்கின்றன. இந்த காலப்பகுதி MHC I (பெரும் தசையொவ்வுமை சிக்கல்) என்று அழைக்கப்படுவதாகும்.இது விருந்தோம்பி செல்கள் வைரஸ் நோய்த்தொற்றுகளில் ஏற்படக்கூடிய சூழ்நிலையாகும்.பல வருடங்களாக இந்த என் கே செல்கள் என்றழைக்கப்படும் இயற்கையாக கொல்லும் உயிரணுக்கள் புற்று செல்களையும் பாதிக்கப்பட்ட உயிரணுக்களையும் எவ்வாறு அடையாளம் காண்கிறது என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தது.MHC I ஆனது பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் பரப்புகளில் செயல்படுவதால் தன்னிலை மறந்த நிலை மூலம் கொல்லும் உயிரணுக்கள் தூண்டப்படுகின்றன.கொல்லும் செல்களால் இயல்பான உடல அங்கீகரிக்கப்பட்டு, தாக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவை சுயமாக MHC பிறபொருளெதிரியாக்கியை (antigens) வெளிப்படுத்துகின்றன.அந்த MHC பிறபொருளெதிரியாக்கிகள் கொல்லும் உயிரணு நோயெதிர்ப்புப்புரத அறிமானிகள் (killing cell Immunoglobulin Receptors) (KIR) மூலமாக அங்கீகரிக்கப்படுகின்றன, அதன் அடிப்படையில் கொல்லும் செல்களில் தடைகளை உண்டாக்குகின்றன.

தகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு

தகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு பெறக்கட்ட நோய்த்தடுப்பாற்றல் என்று பரவலாகவும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு அமைப்பு என்று சில வேளைகளிலும் அறியப்படும் இந்நோய்த் தடுப்பாற்றலானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாகும்.

நிணநீர்க் குழியம்

தனியான ஒரு நிணநீர் செல்லை அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (SEM-scanning electron microscope) ஊடாகப் பார்க்கும்போதுள்ள தோற்றம்
ஒரு சாயமேற்றப்பட்ட நிணநீர்க் கலமும், அதனைச் சுற்றி செங்குருதியணு க்களும், ஒளி நுணுக்குக்காட்டியின் கீழ் வெளிப்படுத்தும் தோற்றம்

நிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

வகைகள்

இவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும்.

  • இயற்கையாக கொல்லும் கலங்கள்: பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை கட்டிகள், வைரசு தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்[3].
  • இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;

மனித நோயெதிர்ப்பு அமைப்பின் பிறழ்வுகள்

தன்னுடல் தாக்குநோய்

உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும்.[4][5] அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.

தன்னுடல் தாக்குமை (Autoimmunity) என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.

மிகையுணர்வூக்கம்

மிகையுணர்வூக்கம் (Hypersensitivity) (மிகையுணர்வூக்க வினைகள் அல்லது சகிப்புத் தன்மையற்ற நிலை) என்பது இயல்பான நோயெதிர்ப்பு அமைப்பின் விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, ஒவ்வாமை, தன்னெதிர்ப்பு வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் மரணத்தைத் விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். ஓம்புயிரின் முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[6].


மேற்கோள்கள்

  1. Beck, Gregory; Gail S. Habicht (November 1996). "Immunity and the Invertebrates" (பி.டி.எவ்). Scientific American: 60–66. http://www.scs.carleton.ca/~soma/biosec/readings/sharkimmu-sciam-Nov1996.pdf. பார்த்த நாள்: 2007-01-01. 
  2. "What is Autoimmunity?". Autoimmun Disease Research Centre. Johns Hopkins University School of Medicine & Johns Hopkins Health System. Archived from the original on 2011-06-28. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Janeway, Charles (2001). Immunobiology; Fifth Edition. New York and London: Garland Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-4101-6. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help).
  4. "Autoimmune disease". பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  5. Ananya Mandal. "What is Autoimmune Disease?". பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  6. Gell PGH, Coombs RRA, eds. Clinical Aspects of Immunology. 1st ed. Oxford, England: Blackwell; 1963.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!