Failed to render property vessel class: vessel class property not found.
டிர்பிட்சு (டிர்பிட்ஸ், Tirpitz) இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனியின் கடற்படையான கிரீக்சுமரீனில் இடம்பெற்றிருந்த ஒரு பெரும் போர்க்கப்பல். கிரீக்சுமரீனுக்காகக் கட்டப்பட்ட பிசுமார்க் ரக போர்க்கப்பல்களுள் இது இரண்டாவது ஆகும். (முதலாவது பிசுமார்க்). இவை இரண்டும் கிரீக்சுமரீனின் மிக சக்தி வாய்ந்த கப்பல்களாக இருந்தன.
ஜெர்மானிய வேந்தியக் கடற்படையின் தந்தை என அறியப்படும் அட்மைர வோன் டிர்பிட்சின் நினைவாக இக்கப்பல் பெயரிடப்பட்டது. 1936ம் ஆண்டு வில்லெம்ஷேவன் ஜெர்மானிய கடற்படை கட்டுந்தளத்தில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 1939ல் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. பெப்ரவரி 1941ல் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கிரீக்சுமரீனில் பணிக்கமர்த்தப்பட்டது. தனது சகோதரிக் கப்பலான பிசுமார்க்கைப் போலவே இதன் முதன்மை பீரங்கிக் குழுமம் 8 X 38-செ.மீ (15”) பீரங்கிளைக் கொண்டிருந்தது. போர்க்காலத்தில் செய்யப்பட்ட சில மாறுதல்களால், டிர்பிட்சின் எடை பிசுமார்க்கைக் காட்டிலும் 2,000 டன் அதிகமாக இருந்தது.
1941ல் கடற் சோதனைகள் முடிந்து கிரீக்சுமரீனில் இணைந்த டிர்பிட்சு துவக்கத்தில் ஜெர்மானிய பால்டிக் கடற்படைப் பிரிவின் முதன்மைக் கப்பலாகப் பணிபுரிந்தது. சோவியத் பால்டிக் கடற்படைப் பிரிவு தப்பிவிடாமல் இருப்பது இதன் இலக்காக இருந்தது. பின் 1942ல் நார்வே நாட்டுக்கு அனுப்பப்பட்டது. நார்வே மீது நேச நாட்டுப் படைகள் படையெடுக்கா வண்ணம் காத்து வந்தது. நார்வேயில் இருந்த போதே, இங்கிலாந்திலிருந்து சோவியத் ஒன்றியத்துக்குச் செல்லும் தளவாட கப்பல் கூட்டங்களை சில முறை தாக்க முயன்றது. இம்முயற்சிகள் தோல்வியடைந்தாலும், டிரிபிட்சினால் விழையக் கூடிய ஆபத்தினை நேச நாட்டு கடற்படை தளபதிகள் உணர்ந்திருந்தனர். எனவே டிர்பிட்சை சமாளிக்கவென்றே பெரிய கடற்படைப் பிரிவுகளை உருவாக்கினர். இவ்வாறு, எவ்வித பெரிய தாக்குதல்களிலும் ஈடுபடாமலேயே, எதிரிப் படைகளை அச்சுறுத்தி வந்ததால், நடைமுறையில் டிர்பிட்சு ஒரு இயங்கா கடற்படையாக (fleet-in-being) விளங்கியது.
செப்டம்பர் 1943ல் டிர்பிட்சும் ஷார்ன்ஹோர்ஸ்ட்டும் நார்வேயில் இசுப்பிட்சுபேர்கன் தீவு மீது பீரங்கித் தாக்குதல் நடத்தின. டிர்பிட்சு நடைமுறையில் தனது முதன்மை பீரங்கிகளைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியது இதுவே முதல்முறை. டிரிபிட்சை அழிக்க பிரித்தானிய கடற்படை பெரும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. முதலில் பிரித்தானிய குறு நீர்மூழ்கிகள் டிர்பிட்சைத் தாக்கி சேதப்படுத்தின, பின்னர் பிரித்தானிய குண்டுவீசி வானூர்திகள் அதன் மீது குண்டுவீசி சேதப்படுத்தின. இச்சேதங்களால் டிர்பிட்சு நார்வேயில் கடலோர கடல்நீரேரிகளில் முடக்கப்பட்டது. நவம்பர் 12, 1944ல் பிரித்தானிய லங்காசுட்டர் ரக குண்டுவீசிகள் 5,400 கிலோ எடையுள்ள “டால் பாய்” ரக குண்டுகளை டிர்பிடிசின் மீது வீசித் தாக்கின. இரு குண்டுகள் டிர்பிட்சு மீது விழுந்தன, இன்னொன்று மிக அருகில் விழுந்தது. இந்த குண்டுவீச்சால், டிர்பிட்சு பெரும் சேதமடைந்தது மூழ்கத் தொடங்கியது. அதன் மேற்தளத்தில் மூண்ட தீ, வேகமாக அதன் வெடிகுண்டு கிடங்குகளில் ஒன்றுக்குப் பரவியதால், ஒரு பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து டிர்பிட்சு மூழ்கியது. டிர்பிட்சு மூழ்கிய போது இறந்த மாலுமிகளின் எண்ணிக்கை 950 முதல் 1204 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
1948-1957ல் டிரிபிட்சின் இடிபாடு ஒரு ஜெர்மானிய-நார்வீஜிய கூட்டு முயற்சியால் கடலடியிலிருந்து மீட்கப்பட்டது.