கடிகாரச்சுற்றில் மேலிருந்து கீழாக-போரின் போது ஒரு சோவியத் வீரர் (1988); குனார் பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் முகாசிதீன் வீரர்கள் (1987); அமெரிக்க சனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முகாசிதீன் தலைவர்கள்; தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபடும் செப்ட்னாசு (சோவியத் சிறப்பு படையணி) வீரர்கள் (1988)
நாள்
திசம்பர் 24, 1979 – பெப்ரவரி 15, 1989 (9 ஆண்டு-கள், 1 மாதம், 3 வாரம்-கள் and 1 நாள்)
ஆப்கான் சோவியத் போர் (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற முகாசிதீன் எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுண்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரணமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான முகாசிதீகளுக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் ஐக்கிய இராச்சியம், சவுதி அரேபியா, பாக்கித்தான், எகிப்து, சீனா ஆகிய நாடுகளும் முகாசிதீன்களை ஆதரித்தன.[2][3][4][8][23] பணம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கான் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.
15 பெப்ரவரி 1989ல், மிக்கைல் கொர்பசோவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் காரணமாக 8,50,000 முதல் 15,00,000 வரையிலான ஆப்கானிய குடிமக்கள் உயிரினந்தனர். 20,00,000 அதிகமானோர் காணாமல் போனதுடன், 10 மில்லியன் மக்கள் பாக்கித்தான் மற்றும் இரான் நாடுகளில் அகதிகளாகக் குடிபெயர்ந்தனர். போர் முடிவுக்கு வந்தபிறகும் கூட ஆப்கான் அரசுக்கும் முசாகிதீன் அமைப்பினருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சரிவைச் சந்தித்தது.
பின்னணி
சவூர் புரட்சி
ஆப்கானிய முடியாட்சியின் கடைசி அரசரான முகம்மது சகீர் சாவின் ஆட்சி 1933 முதல் 1973 வரை நடைபெற்றது. அந்தக் காலத்தின் அரசரின் ஒன்றுவிட்ட சகோதரரான முகம்மது தாவுத் கான் ஆப்கானித்தானின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் 1954 முதல் 1963 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1964ல் மன்னர் கொண்டுவந்த ஒரு அரசியல் சீர்திருத்தத்தை அடுத்து அரசின் மந்திரி சபையில் இருந்த அரசரின் அனைத்து உறவினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்த அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த தாவுத், 1973 சூலை 17ல் அரசுக்கெதிரான ஒரு இராணுவப் புரட்சியை முன்னெடுத்ததன் மூலம் ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து முடியாட்சி முறையை ஆப்கானித்தானிலிருந்து தடை செய்த தாவுத், தன்னை அடுத்த அதிபராகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். இவரது ஆட்சியில் ஆப்கானித்தானை நவீனமயமாக்கும் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அரசாட்சியில் இவரது இரத்த சொந்தங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
இவரது காலத்தில்தான் ஆப்கானிய மக்கள் சனநாயகக் கட்சி, ஆப்கானியர்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெறத் தொடங்கியது. கம்யூனிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கட்சி, தாவுத் கானின் குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராடத்தொடங்கியது. இதனிடையே அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மீர் அக்பர் கைபர் என்வர் 1978 ஏப்ரல் 17ல் படுகொலை செய்யப்பட்டார்[24]. இதையடுத்து தாவுத்துக்கு எதிரான போராட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின[25]. தொடர்ந்த கலகங்களை அடுத்து ஏப்ரல் 27ல் புரட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட தாவுத்தும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர். சவூர் புரட்சி என அழைக்கப்படும் இந்தக் கலகத்தை அடுத்து ஆப்கானிய குடியரசானது, ஆப்கானித்தான் சனநாயக குடியரசு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆப்கானிய மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவரான நூர் முகம்மது தரக்கி, புரட்சிக் குழுவின் அதிபராகவும் ஆப்கானித்தான் சனநாயக குடியரசின் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.
கம்யூனிச ஆட்சி
சவூர் புரட்சியை அடுத்து அமைந்த நூர் முகம்மது தரக்கியின் ஆட்சி, ஆப்கானித்தானில் கம்யூனிச வாழ்வியல் முறையைக் கொண்டுவருவதில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு நில பங்களிப்பு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[26]. திருமணச் சட்டங்கள் நவீனமயமாக்கப்பட்டன. மேலும் அரசால் முன்னெடுக்கப்பட்ட பல சீர்திருத்தங்கள், இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தன[27]. இதையடுத்து அரசுக்கு எதிராகச் செயல்படத்தொடங்கிய பல அடிப்படைவதிகள் மற்றும் மத குருமார்கள் நாடு கடத்தப்பட்டனர். சிலர் கொலை செய்யப்பட்டனர். இவை ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்தது.
மேலும் ஆட்சியமைத்த 18 மாதங்களுக்குள்ளாகவே, உட்கட்சி பூசல்களும் அதிகமாகத் தொடங்கின. பிரதமர் நூர் முகம்மது தரக்கியின் தலைமையில் ஒரு குழுவும், பாரக் கமால் தலைமையில் மற்றொரு குழுவுமாகப் பிரிந்து செயல்படத்தொடங்கினர். இந்தப் பிரிவானது ஆள்கடத்தல், பதவி பறிப்பு, கொலை வரை சென்றது[28]. இதன் உச்சமாக, செப்டம்பர் 1979ல் பிரதமர் தரக்கி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலையை அடுத்து, துணைப் பிரதமரான ஹஃபிசுல்லா அமீன், புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது காலத்தில் உள்நாட்டு குழப்பங்கள் அதிகரித்ததுடன், உட்கட்சி பூசலும் தீவிரமடையத் தொடங்கின.
ஆப்கானித்தானின் மீதான ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்தே சோவியத் ஒன்றியத்துக்கும், அதற்கும் சுமூகமான உறவு இருந்து வந்தது. மூன்றாம் ஆப்கன்-ஆங்கிலேயர் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஆப்கானித்தான் தேசிய அரசை அங்கிகரித்த முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான். அதன் பிறகும் கூட ஆப்கானித்தானில் ஆட்சியமைத்த அனைத்து ஆட்சியாளர்களும் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவாகவே இருந்தனர். மேலும் பாக்கித்தான் புதிதாக அமைக்கப்பட்டபோது, பதானியர்கள் அதிகமாக வசிக்கும் அதன் தென்மேற்கு மாகானங்களை தங்களுடன் இணைக்க வேண்டுமென ஆப்கானித்தான் கோரியது. இதற்கு பாக்கித்தான் மற்றும் இங்கிலாந்து அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சோவியத் ஒன்றியம் ஆதரவளித்தது. இதன் மூலம் ஆப்கன் வழியாக அரபிக்கடல் பிராந்தியத்தில் தங்களின் மேலாண்மையை நிறுவ முடியும் எனச் சோவியத் யூனியன் கருதியது.
இதையடுத்து, தெற்காசியாவில் சோவியத் யூனியனின் மேலாண்மையை முறியடுக்கும் பனிப்போரின் ஒரு பகுதியாக, பாக்கித்தானுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கத்தொடங்கியது. மேலும் பாக்கித்தானின் உளவுத்துறை மூலமாக, ஆப்கானிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்களும், பொருளாதார உதவிகளும் வழங்கத் தொடங்கியது. தொடந்து ஆப்கன்-பாக்கித்தான் எல்லைகளில் இருந்த பயிற்சி முகாம்களில் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
சோவியத் படையமர்த்தல்
கிளர்ச்சிக் குழுவினருக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கத்தொடங்கியதை அடுத்து, 1978ல் ஆப்கானிய அரசுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இதன்படி அவசர காலங்களில் ஆப்கன் அரசு கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் தனது படைகளை அனுப்ப சோவியத் ஒன்றியம் ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், அமீனின் ஆட்சியின் மீதும் சோவியத் ஒன்றியம் அதிருப்தி கொண்டிருந்தது. அவரின் ஆட்சி ஆப்கனில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடுமென அது அச்சம் கொண்டது. முன்னதாக அதன் இரகசிய உளவு நிறுவனமான கேஜிபியும், பிரதமர் நூர் முகம்மது தரக்கி கொலை செய்யப்பட்டதற்கு அமீனை குற்றம்சாட்டி தனது கடுமையான ஆட்சேபங்களை அரசுக்குத் தெரிவித்திருந்தது[29]. எனவே இதைப் பற்றி விசாரிக்க ஒரு உயர்மட்ட ஆணையத்தைச் சோவியத் ஒன்றியம் அமைத்தது. இதில் கேஜிபியின் தலைவர் யூரி அந்ரோபோவ், அதன் மத்தியக் கமிட்டி உறுப்பினர் போரிசு போனோமாரவ், பாதுகாப்பு அமைச்சர் திமித்ரி உதினோவ் ஆகியோரும் அடக்கம். 1978 ஏப்ரல் இறுதியில் தனது அறிக்கையை வெளியிட்ட இந்த ஆணையம், பிரதமர் அமீன் தனக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்வதாகவும், அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படுபவர்களின் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவாலர்களும் அடக்கம் எனவும் குற்றம்சாட்டியது. மேலும் அமீன் சோவியத் ஒன்றியத்தை விடவும் பாக்கித்தான் மற்றும் சீனாவுடம் அதிக அனுதாபம் காட்டுவதாகவும், அமெரிக்க உளவாளிகளுடன் இரகசிய சந்திப்புகள் நடத்துவதாகவும், ஆகக்கூடியதாக அவர் ஒரு சிஐஏ உளவாளியாகவும் இருக்கலாம் எனவும் தனது சந்தேகத்தைத் தெரிவித்திருந்தது.
இதனிடையே முகாசிதீன் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, ஆப்கானிய அரசு 1978 ஒப்பந்தத்தை முன்னிருத்தி சோவியத் ஒன்றியத்தின் இராணுவ ஆதரவைக் கோரியது[30]. தொடந்த கோரிக்கைகளை அடுத்து, 1979 யூன் 16ல் தனது முதல் பீரங்கிப் படையைச் சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுக்கு அனுப்பியது. இவை பர்காம் மற்றும் சிந்தாத் நகரங்களில் இருந்த விமானத் தளங்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்டன. மேலும் பல சிறப்புப் படையணிகளும் காபூல் நகர பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஒரு மாத இடைவெளியில் பாதுகாப்புப் படையணிகளை தவிர்த்த போர்ப் படைகளையும் மிகப் பெரும் எண்ணிக்கையில் அனுப்புமாறு மீண்டும் ஆப்கன் அரசு சோவியத் ஒன்றியத்தைக் கேட்டுக்கொண்டது.
ஆனால் கேஜிபியின் அறிக்கையின் படி பாதுகாப்புப் படைகளை மட்டும் ஆப்கனுக்கு அனுப்பிய சோவியத் ஒன்றியம், போர் படைகளை அனுப்ப தாமதம் செய்தது. அதே காலகட்டத்தில், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கிடையேயான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கான கூட்டங்களும் இரு நாட்டு தலைவர்களுக்கிடையே நடந்துகொண்டிருந்தன. அதுவும் தாமதத்திற்கு ஒரு காரனமாக இருந்தது. இறுதியில் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் சபை ஏற்க மறுத்ததை தொடர்ந்து, பேச்சுவார்த்தை முறிந்தது. இதைத் தொடர்ந்து தனது இராணுவ நடவடிக்கைகளை ஆப்கனில் தொடர்வதற்கு சோவியத் ஒன்றியம் முடிவெடுத்தது.
சோவியத் படைகளின் ஊடுருவல்
1979 அக்டோபர் 31ல் சோவியத் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆப்கன் படையனிகளுக்கு, தாக்குதல்களுக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டது. காபூலுக்கு வெளியே உள்ள தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, காபூல் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பெரும் அளவிலான சோவியத் வான் படைகள் திசம்பர் 25ல் காபூல் நகரில் தரையிறங்கின. முன்னதாகத் தாக்குதல் திட்டங்களைச் செயல்படுத்தும் முன்பு பிரதமர் அமீனை கொலை செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அமீன் சோவியத் படைகளின் வருகையை ஒட்டித் தனது இருப்பிடத்தை பிரதமர் இல்லத்திலிருந்து தச்பெக் மாளிகைக்கு மாற்றிக்கொண்டார். அங்கு அவருக்கு ஆதரவான ஒரு ஆப்கானிய படை காவலுக்கு வைக்கப்பட்டது.
இதையடுத்து திசம்பர் 24ல் சோவியத் ஒன்றியத்தின் இரு படைபிரிவுகள் காபூல் மற்றும் சிந்தாத் நகரங்களுக்கு வந்திறங்கின. அதே நேரத்தில் உசுபெசுகித்தான் எல்கை முழுவதிலும் சோவியத் படைகள் குவிக்கப்பட்டன. இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, தச்பெக் மாளிகையில் பதுங்கியிருந்த பிரதமர் ஹஃபிசுல்லா அமீன் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பதில் மற்றொரு ஆப்கானிய மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவரான பாரக் கர்மால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து "புயல் 333" என அழைக்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆப்கானித்தானின் முக்கிய இடங்களைச் சோவியத் ரானுவத்தின் 40வது படைப்பிரிவு கைப்பற்றியது. இதற்காக உசுபெக்கிசுத்தான் தலைநகரான தாசுகந்து இருந்து ஆப்கனின் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்களின் மூலம், 10000 பாராசூட் படை வீரர்கள் காபுலுக்குள் புகுந்தனர். மற்றும் பலர் தரை வழித் தாக்குதல்களுக்காக மேற்கு மற்றும் கிழக்கு ஆப்கனிய எல்லைகளில் உள்ள குசுகா மற்றும் தெற்மசு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதன்படி மார்சல் செர்கே சோகொலோவ் தலைமையில் சோவியத் தரைப்படைகள் திசம்பர் 27ல் ஆப்கானித்தானுக்குள் நுழைந்தன. இந்த 40வது தரைப்படைப் பிரிவில், பல்வேறு படைப்பிரிவுகளை உள்ளடக்கிய 80000 படைவீரர்களும், 1800 பீரங்கிகளும், 2000 இராணுவ தாக்குதல் வாகனங்களும் இருந்தன. இரண்டு வாரங்களுக்குப் பின்பு 4000 விமானங்களில் காபுல் நகருக்கு அனுப்பப்பட்ட வீரர்களையும் சேர்த்து மொத்தம் 100000 சோவியத் வீரர்கள் ஆப்கானித்தான் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முகாசிதீன்களின் எதிர்ப்பு
ஆப்கனில் கம்யூனிச அரசை எதிர்த்துப் பல கிளர்ச்சிக் குழுக்கள் தோன்றின. பிரதேசவாரியாக வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டவையாக இவை இருந்த போதிலும், இசுலாமிய எழுச்சி மற்றும் கம்யூனிச எதிர்ப்பு என்பனவற்றில் இவை அனைத்தும் ஒத்திருந்தன. இவர்களுக்குப் பல உலக நாடுகளும் மறைமுகமாக உதவி செய்தன. அவற்றுள் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டும் அதிக அளவில் பொருளாதார உதவிகளைச் செய்தவை[2][3][4][10][31]. கூடவே எகிப்து, துருக்கி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆகியவற்றை கொடுத்து உதவின. சீனாவும்கரந்தடிப் போர் முறைக்கு உதவுக்கூடிய பல ஆயுதங்களைக் கொடுத்தது[23]. இவ்வாறு கொடுக்கப்பட்ட உதவிகள் அனைத்தும் பாக்கித்தானின் உளவு அமைப்பான ஐஎசுஐ மூலமாக பல்வேறு முகாசிதீன் அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அமெரிக்கா அரசால் இவர்களுக்குச் செலவுசெய்யப்பட்ட தொகையானது, சிஐஏ வரலாற்றிலேயே ஆகக் கூடியதாக இருந்தது[32]. மேலும் சோவியத் ஒன்றியத்தின் இருந்த எல்லைப் பிரச்சனை காரணமாக, சீனாவும் இவர்களுக்கு உதவியது. ஆரம்பத்தில் பாக்கித்தானில் வைத்துக் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்த சீனா, பின்பு சீனாவுக்கே அதன் முக்கிய வீரர்களை அழைத்துப் பயிற்சி கொடுத்தது[33].
போரின் போக்கு
1979 - 1980
போரின் ஆரம்பத்தில், இரண்டு தடங்களின் வழியாகச் சோவியத் படைகள் ஆப்கனுக்குள் ஊடுருவின. முதலாவது தடம், குசுகா நகரிலிருந்து ஆரம்பித்துச் சிந்தாத் வழியக கந்தகாரை வந்தடைந்தது. மற்றொரு தடம் தெற்மசில் ஆரம்பித்துக் குன்றுப்பகுதிகள் நிறைந்த பைசாபாத் நகருக்கும், தலைநகர் காபூலுக்கும் சென்றது. இவை இரண்டு தடங்களைத் தவித்து, மூன்றாவதாக வான் வழித்தடம் வழியாகவும் சோவியத் படைகள் ஆப்கனுக்குள் நுழைந்தன. மேலும் இவ்வழித்தடங்களின் முன்னேறிய சோவியத் படைகள், தங்கள் பாதைகளில் இருந்த கிளர்ச்சிக் குழுக்களின் படைகளை நிர்மூலம் செய்ததுடன், அப்பகுதிகளில் இராணுவ கூடாரங்கள் அமைத்துப் பாதுகாப்பு பனிகளிலும் ஈடுபட்டன. இதன் மூலம் ஆப்கனின் முக்கிய நகரங்களைச் சோவியத் படைகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன.
1980 - 1985
போர் ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே, ஆப்கனின் 20% நிலப்பரப்பை சோவியத் படைகள் பிடித்துவிட்ட போதிலும் மீதம் இருந்த 80% இடங்கள் பல்வேறு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது[34]. குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களின் கையே ஓங்கி இருந்தது. மேற்கு ஆப்கானிய பகுதிகள் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், அங்கு ஈரானிய புரட்சிக் குழுக்கள் ஊடுருவும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் அதையும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சோவியத் படைகள் தள்ளப்பட்டன. மேலும் சோவியத் படைகளின் நேரடித் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் கரந்தடிப் போர் முறையில் இறங்கின. ஆப்கனின் இயற்கையான குன்றுகளும் மலைகளும் நிறைந்த நில அமைப்பு கிளர்ச்சிக்குழுவினருக்கு மிகவும் சாதகமாக அமைந்தன. அதே நேரத்தில், சரியான சாலை வசதிகள் இல்லாத இந்தக் குன்றுகளை அடைய முடியாமல் சோவியத் பீரங்கிப் படைகளும் தடுமாறின. இது குறிப்பிடத் தக்க அளவு கிளர்ச்சியாளர்களுக்கு வெற்றியைப் பெற்று தந்தன.
குறிப்பாகப் பஞ்சிர் பள்ளத்தாக்கு பகுதிகளிலிருந்து கிளர்ச்சிக் குழுக்களை விரட்ட, 1980 முதல் 1985 வரை மொத்தம் ஒன்பது முறை சோவியத் படைகள் போரிட்டன. இந்தத் தாக்குதல்களில் அதிக அளவிலான விமானங்களும், போர் வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இவற்றில் சோவியத் படைகள் குறிப்பிடத் தக்க அளவில் வெற்றி பெற்ற போதும், அதைத் தக்க வைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை வீழ்த்தப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் குழு பள்ளத்தாக்கு பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன. மேலும் பாக்கித்தான் எல்லைப் பகுதிகளில் இருந்த அனேக நகரங்களும், பாதுகாப்பு படைகளின் சோதனைச் சாவடிகளும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகின. ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சோவியத் படைகளுக்கு ஆதரவு இருந்த போதிலும், தொடர்ந்த காலங்களில் பெருவாரியானவர்கள் கிளர்ச்சிக்குழுக்களில் இணையத் தொடங்கினர். மேலும் ஆப்கன் இராணுவத்தில் இருந்த சில வீரர்களும் கூடச் சோவியத் படைகளுக்கு எதிராகச் செயல்படத்தொடங்கினர். இது சோவியத் இராணுவத்துக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்தது.
மேலும் இந்தப் படையெடுப்பு உலக இசுலாமியர்கள் மத்தியில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய இளைஞர்கள் பாக்கித்தான் வழியாக ஆப்கானித்தானுக்கு போரிட வந்தனர். இவர்களுக்குப் பல நாடுகளைச் சேர்ந்த உளவு நிறுவனங்களும் உதவி செய்தன. இதன் மூலம் உத்வேகம் பெற்ற முகாசிதீன் குழுக்கள், மே 1985ல் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தன. இதன் படி அனைத்துக் குழுக்களும் இணைந்து ஏழு முகாசிதீன் குழுக்களின் கூட்டமைப்பை உருவாக்கியதோடு, தொடர்ந்து தங்களுக்குள் இணைந்தே சோவியத் படைகளை எதிர்க்கப் போவதாக அறிவித்தன. இதன் மூலம் படைபலம் அதிகம் பெற்ற முகாசிதீன் குழுக்கள் அதே ஆண்டு இறுதிக்குள் காபூல் நகர சுற்று வட்டாரப் பகுதிகளைக் கைப்பற்றும் அளவிற்கு முன்னேறின. மேலும் காபூல் நகர் மீதிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கின.
உலக நாடுகளின் எதிர்ப்பு
சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானிய படையெடுப்புக்கு பல உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 34 இசுலாமிய நாடுகளைச் சேர்ந்த வெளியுரவுத்துறை மந்திரிகளின் கூட்டரிக்கை ஒன்று சோவியத் ஒன்றியத்துக்குத் தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், ஆப்கானித்தானிலிருந்து உடனடியாக வெளியேறுமாரும் கேட்டுக்கொண்டது[35]. மேலும் ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டுவரப்பட்ட சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான தீர்மானம் ஒன்று 104-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாக்கல் செய்யப்பட்டது[36]. இதைக் காரணம் காட்டி 1980ல் மாசுகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 60 நாடுகள் மறுத்துவிட்டன.
இவ்வாறு பல நாடுகளின் அழுத்தம் காரனமாகவும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாலும் சோவியத் ஒன்றியம், பல்வேறு நாடுகளில் இருந்த படைகளைத் திரும்பப் பெற்றது. முதலாவதாக அங்கோலாவில் இருந்த தனது கூப தோழமைப் படைகளைத் திரும்பப் பெற்றது[37]. மேலும் மங்கோலியா மற்றும் வியட்நாமில் இருந்த படைகளும் சோவியத் திரும்பின[38]. தொடர்ந்து 1987 மத்தியில், அதிபர் கொர்பசோவ் ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் திரும்பப்பெறப்படும் எனும் அறிவிப்பை வெளியிட்டார்.
படைகளின் வெளியேற்றம்
அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, சோவியத் படைகள் தங்கள் தாக்குதல்களைக் குறைத்துக்கொண்டன. இரண்டு கட்டமாகப் படைகளை ஆப்கனிலிருந்து வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மே 15 முதல் ஆகத்து 16 வரை முதல் கட்டமான பாதி படைகள் வெளியேற்றப்பட்டன. மீதி படைகள் நவம்பர் 15 முதல் 1989 பெப்ரவரி 15 க்குள் வெளியேற்றப்பட்டன. முன்னதாகத் திரும்பப்பெரும் படைகளின் மேல் தாக்குதல் நடத்தப்பெறாமல் இருக்க, சோவியத் ஒன்றியம் முகாசிதீன் குழுக்களுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்துகொண்டிருந்தது. இதன் படி அமைதியான முறையில் சோவியத் தனது படைகளைத் திரும்பப்பெற்றுக் கொண்டது.
பின்விளைவுகள்
இந்தப் போரின் மூலம் ஆப்கானித்தான் சமூக பொருளாதார அளவில் மிகுந்த பின்னடைவை சந்தித்தது. 850000 முதல் 1500000 வரையிலான ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்[20][21]. 20,00,000 அதிகமானோர் காணாமல் போனதுடன் 30,00,000 மக்கள் ஊனமடைந்தனர். மேலும் ஆப்கானித்தானின் முக்கிய தொழிலான விவசாயம் நலிவடைந்தது. வான்வழித்தாக்குதல் காரணமாக ஆப்கனின் அநேக நீர்பாசன கால்வாய்கள் அழிவுக்குள்ளாகின. குறிப்பாக 1985ல் நடந்த தாக்குதலில் மட்டும் ஆப்கானிய விளைநிலங்களில் சரிபாதி குண்டு வீச்சுக்கு உள்ளானது. மூன்றில் ஒரு ஓங்கு நீர்பாசனத்திட்டங்கள் நாசமாக்கப்பட்டன. ஆப்கனின் இரண்டாவது பெரிய நகரமாகிய கந்தகாரின் மக்கள் தொகை 200000ல் இருந்து 25000மாக குறைந்தது. சோவியத் படைகளால் ஊன்றப்பட்ட மிதிவெடிகள் 25000 ஆப்கானிய குடிமக்களைக் கொன்றது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் சிறார்கள்[39]. மேலும் போருக்குப் பின்னால் நீக்கப்படாமல் விடப்பட்ட மிதிவெடிகள் மட்டும் 10 முதல் 15 மில்லியன் வரை இருக்கும்[40]. 1994ல் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கை இந்த மிதிவெடிகளை நீக்க இன்னும் 4300 ஆண்டுகள் ஆகுமென கருத்து தெரிவித்திருந்தது[41].
மேலும் 5 முதல் 10 மில்லியன் மக்கள் வரை அகதிகளாக ஆப்கனை விட்டு வெளியேறினர். இவ்வாறு வெளியேறிய மக்களின் தொகையானது மொத்த ஆப்கானிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி ஆகும். மேலும் 1980 கனக்கீட்டின்படி உலகின் மொத்த அகதிகளின் எண்ணிக்கையில் சரிபாதி அளவு ஆப்கானியர் இருந்தனர்[42].
சோவியத் படைகள் வெளியேறியபிறகும், ஆப்கன் இராணுவத்துக்கும் முகாசிதீன் குழுக்களுக்குமிடையேயான உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. இந்த யுத்தத்தின் காரனமாக மேலும் 400000 ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்[43]. தாலிபான்கள் எழுச்சி பெற்றதும் இந்தச் சமயத்தில்தான். தாயகம் திரும்பிய, சோவியத் படைகளுடன் போரிட்ட பிற நாட்டு வீரர்களால் அந்தந்த நாடுகளின் இசுலாமிய அடிப்படைவாத குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. பின்னர் இவை தீவிரவாத இயக்கங்களாகவும் உருப்பெற்றன. மேலும் ஆப்கானிலேயே தங்கிவிட்ட வீரர்களை இணைத்து அல் காயிதா இயக்கம் உசாமா பின் லாடனால் உருவாக்கப்பட்டது.
↑Nyrop, Richard F. (January 1986). Afghanistan: A Country Study(PDF). Washington, DC: United States Government Printing Office. pp. XVIII–XXV. Archived from the original(PDF) on 2001-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-05. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
↑Bradsher, Henry S. (1983). Afghanistan and the Soviet Union. Durham: Duke Press Policy Studies. pp. 72–73.
↑Hilali, A. Z. (2005). "The Soviet Penetration into Afghanistan and the Marxist Coup". The Journal of Slavic Military Studies18 (4): 709. doi:10.1080/13518040500354984.
↑Urban, Mark (1990). War in Afghanistan. St. Martin's Press. p. 300.
↑Maley, William and Saikal, Amin (1989). The Soviet Withdrawal from Afghanistan. Cambridge University Press. p. 132.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)