ஒநாப, இ20ப உடை
ஐக்கிய அமெரிக்க தேசியத் துடுப்பாட்ட அணி (United States men's national cricket team) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 1965 ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) இணை உறுப்பினரான ஐக்கிய அமெரிக்கத் துடுப்பாட்டக் கழகம் மூலம் இந்த அணி முன்பு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.[6] சூன் 2017 இல், இக்கழகத்தின் நிர்வாகம், நிதிச் சிக்கல்கள் காரணமாக ஐசிசியால் வெளியேற்றப்பட்டது, புதிய அனுமதி வழங்கும் அமைப்பு நிறுவப்படும் வரை அமெரிக்கத் துடுப்பாட்டச் சங்கத்தினால் அமெரிக்க அணி தற்காலிகமாக மேற்பார்வையிடப்பட்டது.[7] சனவரி 2019 இல், "ஐக்கிய அமெரிக்கத் துடுப்பாட்டம்" என்ற அமைப்புக்கு இணை உறுப்பினர் தகுதி அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.[8]
1844 இல் கனடாவுக்கு எதிராக விளையாடிய முதல் பன்னாட்டுப் போட்டியில் அமெரிக்கக் குழு பங்கேற்றது. ஒன்றரை நூற்றாண்டுகளாக, அமெரிக்கத் தேசிய அணி ஏனைய தேசிய அணிகளுக்கு எதிராக அரிதாகவே விளையாடியது. இது பெரும்பாலும் கனடாவுக்கு எதிராக (ஆண்டுதோறும் ஆட்டி கிண்ணப் போட்டிகளில்) அல்லது பிற நாடுகளில் இருந்து வரும் அணிகளுக்கு எதிராக விளையாடியது.
1979 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி பதக்கப் போட்டியில் அமெரிக்கா தனது பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானது; அதன் பின் இப்போட்டியின் இரண்டு பதிப்புகளை மட்டுமே அது தவறவிட்டது (இது இப்போது "உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று" என அழைக்கப்படுகிறது). 2004 ஐசிசி ஆறு நாடுகளின் சவாலை வென்ற பிறகு, இவ்வணி தனது முதல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி 2004 ஐசிசி வாகையாளர் பதக்கத்திற்குத் தகுதி பெற்றது. ஏப்ரல் 2018 இல், ஐசிசி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு பன்னாட்டு இருபது20 (இ20ப) தகுதியை வழங்க முடிவு செய்தது. எனவே, 2019 சனவரி 1 இற்குப் பிறகு ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஏனைய ஐசிசி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெறும் அனைத்து இருபது20 போட்டிகளும் இ20ப தகுதியைப் பெற்றுள்ளன.[9] அமீரகத்திற்கு எதிராக மார்ச் 2019 இல் அமெரிக்கா தனது முதல் இ20ப போட்டியில் விளையாடியது.[10]
உலகத் துடுப்பாட்ட சங்கப் போட்டிகளில், அமெரிக்கா 2019 இரண்டாம் பிரிவுப் போட்டியில் பப்புவா நியூ கினியிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது. இது ஒரு பன்னாட்டு ஒருநாள் போட்டியாக அறிவிக்கப்பட்டது. (இதனால் இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் மூன்றாவது பன்னாட்டு ஒருநாள் போட்டி ஆனது). 2019-22 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 இல் இடம்பெறுவதற்கு இந்த நான்காவது இடம் போதுமானதாக இருந்தது, இதில் அனைத்து அணியின் போட்டிகளும் பன்னாட்டு ஒருநாள் தகுதியைப் பெறும். அணியின் முதல் உள்நாட்டு ஒநாப தொடர் 2019 செப்டம்பர் 13 அன்று பப்புவா நியூ கினி, நமீபியா ஆகியவற்றுடன் தொடங்கியது.[11]