ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஓர் மறைமுகத் தேர்தல்முறை ஆகும்; குடிமக்கள் வாக்காளர் குழுவிற்கான உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்கின்றனர்.[1] இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை (1972 முதல்), நவம்பர் மாதம் 2இலிருந்து 8க்குள் வரும் செவ்வாயில் (தேர்தல் நாள்) நடத்தப்படுகின்றன.[2] இதேநாளில் பல்வேறு கூட்டரசு, மாநில மற்றும் உள்ளூர் பொதுத்தேர்தல்களும் நடைபெறுகின்றன. அண்மையில் நடைபெற்ற 2008 குடியரசுத் தலைவர்தேர்தல் அந்தாண்டு நவம்பர் 4 அன்று நடைபெற்றது. அடுத்த 2012 தேர்தல் நவம்பர் 6 அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கானச் செயல்முறை கூட்டாக கூட்டரசு மற்றும் மாநில சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அமெரிக்க காங்கிரசில் அம்மாநிலத்திற்கு உள்ள மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சரிசமமாக வாக்காளர் குழுவிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.[3] தவிரவும், மிகச்சிறிய மாநிலத்திற்கு உண்டான வாக்காளர் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை வாசிங்டன், டி. சி.க்கு வழங்கப்படுகிறது.[4] மாநிலங்கள் அமைக்கப்படாது நேரடியாக கூட்டரசால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த வாக்காளர் குழுவில் உறுப்பினர்கள் இல்லை.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் இந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை வகுத்துக்கொள்ளலாம்.[3] எனவே, தேர்தல் நாளன்று பொதுத்தேர்தலை பல்வேறு மாநில அரசுகளே நடத்துகின்றன; கூட்டரசு நேரடியாக நடத்துவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர் குழு உறுப்பினர்கள் யாருக்கும் வாக்களிக்கலாம் என்றபோதும் வெகு அரிதாகவே தாங்கள் உறுதியளித்ததிற்கு மாறாக வாக்களிப்பர். இவர்களது வாக்குகள் சனவரியின் துவக்கத்தில் அமெரிக்க காங்கிரசால் ஆய்வு செய்யப்பட்டு சான்றளிக்கப்படும். அமெரிக்க காங்கிரசே இந்தத் தேர்தலில் அறுதி முடிவெடுக்கும்; குடியரசுத் தலைவர் தேர்தலில் கடைசியாக சிக்கல் எழுந்தது 2000 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆகும்.
முதல்நிலை தேர்தல்கள் மற்றும் நியமிக்கும் கருத்தரங்குகள் உட்பட, குடியரசுத் தலைவர் வேட்பாளரை நியமிக்கும் முறைமை அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை; இவை மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் தாமாகவே உருவானவை. இவையும் மறைமுகத் தேர்தல்களே; வாக்காளர்கள் வாக்கெடுப்பில் அரசியல் கட்சியின் நியமிக்கும் கருத்தரங்கிற்கான பேராளர்களை தேர்ந்தெடுக்க அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தங்கள் கட்சிக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்