மாகி ஆறு (Mahi river) இந்தியாவின் மேற்கு பகுதியில் பாயும் ஓர் ஆறு ஆகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தோன்றி இராசத்தான் மாநிலத்திலுள்ள வாகாத் மண்டலத்தின் வழியாகச் சென்று குஜராத்தில் நுழைந்து [[அரபிக்கடல்| அரபிக்கடலில் கலக்கிறது. தபதி ஆறு, சபர்மதி ஆறு, லூனி நதி மற்றும் நருமதை போன்ற ஆறுகளைப் போல மேற்கு நோக்கி பாயும் இந்தியாவின் பல நதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவிலுள்ள பெரும்பாலான தீபகற்ப ஆறுகள் கிழக்கு திசை நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
பிரித்தானிய இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த காந்தா நிறுவனத்திற்கு மாகி காந்தா நிறுவனம் என்று மாகி ஆற்றின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. . இதே போல அராபிய புராணக் கதைகளில் பெரும்பாலும் குறிப்பிடப்படும் மாக்வாசிசு எனப்படும் மேட்டுக்குடி சூறையாடிகளைக் குறிக்கவும் இப்பெயர் பயன்பட்டது [2].
மத்தியப் பிரதேசத்திலுள்ள தார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிண்டா கிராமத்தில் மாகி நதி அசலாகத் தோன்றுகிறது. அங்கிருந்து வடமேற்கு திசையில் திரும்பி இராசத்தான் மாநிலத்திற்குள் நுழைந்து, பின்னர் தென்மேற்கு திசையில் குஜராத் மாநிலத்தின் வழியாக வடோதரா நகரத்தின் புறநகர்ப் பகுதி வழியாகப் பாய்கிறது. 360 மைல் (580 கி.மீ) தொலைவுக்கு நீளும் இவ்வாற்றின் பாதை கம்பாத்தைக் [2] கடந்து ஒரு பரந்த நதி முகத்துவாரம் வழியாகக் கடலுக்குள் நுழைகிறது. கம்பாத் வளைகுடாவின் ஆழமற்ற தன்மைக்கும், ஒரு காலத்தில் வளமான துறைமுகங்களை கொண்டிருந்தமைக்கும் மாகி நதி கொண்டு வந்த மண் பங்களித்தது. ஆற்றங்கரை நிலத்தின் உயரத்தைக் காட்டிலும் கனிசமான தாழ்வாக ஆற்றங்கரை உள்ளதால் பாசனத்திற்கு அதிக பயன் இல்லை.
மாகி நதி ஏராளமான மக்களால் வணங்கப்படுகிறது, மேலும் அதன் கரையோரத்தில் பல கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. ஆற்றின் பரந்த தன்மை காரணமாக மகிசாகர் என்று பிரபலமாக விவரிக்கப்படுகிறது. குசராத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மகிசாகர் மாவட்டம் இந்த புனிதமான நதியிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. மாகி நதி கடக ரேகையை இரண்டு முறை சந்திக்கிறது.
அணைகள்
பனசுவாரா அணை
மாகி பஜாஜ் சாகர் அணை மாகி நதியின் மீது கட்டப்பட்ட ஓர் அணை ஆகும். பனசுவாரா நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இராசத்தான் மாநிலத்தின் பனசுவாரா மாவட்டத்தில் மாகி சாகர் அணை உள்ளது. நீர் மின் உற்பத்தி மற்றும் நீர் விநியோகத்திற்காக இந்த அணை 1972 மற்றும் 1983 ஆம் ஆண்டிற்க்கு இடையில் கட்டப்பட்டது. இது இராசத்தான் மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய அணை ஆகும். இது இராசத்தான் மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய அணை ஆகும். சிரி ஜம்னாலா பஜாஜ் என்பவரின் நினைவாக அணைக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு பல முதலைகளும் ஆமைகளும் உள்ளன. மாகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பல தீவுகள் உள்ளன. இதனால் பனசுவாரா நூறு தீவுகளின் நகரம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. மாகி சாகர் அணையை சாலை வழியாக எளிதாக அணுகலாம். இதன் நிறுவப்பட்ட கொள்ளளவு 140 மெகாவாட் ஆகும். கம்பாத் வளைகுடாவில் பாயும் மாகி நதி மாசு மற்றும் உப்புத்தன்மை காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வதோதராவின் மீனவர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) இந்த நிலைமைக்கு வதோதரா மாநகராட்சி மாகி ஆற்றின் மீது பல அணைகளை கட்டியதே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். ”தண்ணீரைச் சேகரிக்க கட்டப்பட்ட அணைகள் ஆற்றின் மேற்பரப்பு நகர்வுகளை நிறுத்திவிட்டன” என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இதன் விளைவாக, குறைந்த அலைகளின் போது கடல் நீரை பின்னுக்குத் தள்ள மேற்பரப்பு ஓட்டம் இல்லாததால் நதி கடலில் இருந்து உப்புநீரின் ஊடுருவலை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறக்கூடும். கடந்த 2016 ஆம் ஆண்டில் நீரில் அதிகப்படியான உப்புத்தன்மை இருப்பதால் சுமார் 600-800 ஆமைகள் இறந்துவிட்டன. மாகி நதி இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கதானா அணை
குசராத்திலுள்ள மகிசாகர் மாவட்டத்தில் கதானா என்ற கிராமத்தில் 1979 ஆம் ஆண்டு கதானா அணை கட்டப்பட்டது இது நீர்ப்பாசனம், நீர் மின்சாரம் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக கட்டப்பட்டது [3].
வனக்போரி அணை
வனக்போரி அணை (வீயர்) வனக்போரி கிராமத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. வனக்போரி அனல் மின் நிலையம் மாகி நதியின் நீரைப் பயன்படுத்துகிறது. இங்கு மின்சாரம் உற்பத்தி செய்ய 7 அலகுகள் உள்ளன.