மரபியல் (Genetics) அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும்.[1][2] நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில், தாவரங்களிலும், கால்நடைகளிலும் தேர்வு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிகோர் ஜோஹன் மெண்டல்(Gregor Johann Mendel) என்பவரின் மரபியல் சம்பந்தமான ஈடுபாட்டின் பின்னரே, நவீன மரபியலானது வளர்ச்சியுற்று, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது.[3] கிரீகர் மெண்டலுக்கு மரபியலின் அடிப்படை நுட்பங்கள் புரிந்திருக்காவிடினும், உயிரினங்களின் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம், பரம்பரையூடாகக் கடத்தப்படக் கூடிய ஏதோ சில அலகுகளே என்பதை அறிந்திருந்தார். அவையே பின்னர் மரபணு அல்லது பரம்பரை அலகு என அறியப்பட்டது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும், கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது. சந்ததிகளூடாகக் கடத்தப்படக்கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் டி.என்.ஏ யில் இருக்கும் மரபணுக்களில்நியூக்கிளியோட்டைடுக்கள் (Nucleotide) ஒழுங்குபடுத்தப்படும் வரிசை முறையில் தங்கியிருக்கும். டி.என்.ஏ யானது ஒன்றுக்கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது (டி.என்.ஏ யின் படத்தைப் பார்க்க). இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு புதிய துணை இழையைத் தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால், நகல் எடுக்கும் செயல்முறை மூலம், அவை சந்ததியூடாக இயல்புகளைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து கடத்த உதவும்.
ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும், அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம், இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:
↑Weiling F (1991). "Historical study: Johann Gregor Mendel 1822–1884". American Journal of Medical Genetics40 (1): 1–25; discussion 26. doi:10.1002/ajmg.1320400103. பப்மெட்:1887835.