குறிக்கோளுரை: «Fui sobre agua edificada, mis muros de fuego son. Esta es mi insignia y blasón» ("நீரின் மேல் நான் கட்டப்பட்டேன், எனது சுவர்கள் நெருப்பால் ஆனவை. இது எனது பதாகை மற்றும் கேடயம்")
மத்ரித் (எசுப்பானியம்: Madrid) எசுப்பானிய நாட்டின் தலைநகரமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும் (முதல் இரண்டு இலண்டன் மற்றும் பெர்லின்). மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது (முதல் இரண்டு இலண்டன் மற்றும் பாரிசு)[4]. நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள்[5]. மக்கள் தொகை 3.3 மில்லியன்[6]. பெருநகர மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்த்து 6.5 மில்லியன். மத்ரித் நகரம், மத்ரித் மாகாணத்தின் உள்ள மன்சனரே நதியின் கரையில் அமைதுள்ளது. இந்த மாகாணங்களின் எல்லைகளாக கேசுடைல் லியான் மற்றும் கேசுடிலா மான்சா ஆகிய சுயாட்சி மாகானங்கள் உள்ளன.
எசுப்பானியத்தின் தலைநகரம் என்ற முறையில், எசுப்பானிய நாடாளுமன்றம் மற்றும் எசுப்பானிய அரச குடும்பத்தின் இல்லம் ஆகியவை இங்கே அமையப்பட்டிருக்கின்றன. மேலும் எசுப்பானியத்தின் பொருளாதார, கலாச்சார மற்றும் பண்பாட்டு மையமாகவும் மத்ரித் விளங்குகின்றது. பெருநகர மொத்த உற்பத்தியின் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும், உலக அளவில் 27வது பெரிய நகரமாகவும் இது இருக்கின்றது[7]. அதிக பொருளாதார வாய்ப்புகள், சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது தென் ஐரோப்பாவின் முதன்மையான பொருளாதார மையமாகவும் விளங்குகின்றது[8][9].
ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் இயங்கும் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளைப் பெறும் நகரங்கள் வரிசையில் மத்ரித் ஏழாவது இடத்தில் உள்ளது[10]. ஐரோப்பிய அளவில் இதற்கு நான்காவது இடம்[10]. மோனோகில் பத்திரிக்கை 2010ல் மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி, மக்கள் வாழத்தகுந்த நகரங்களின் அடிப்படையில் பத்தாவது இடத்தை மத்ரித்துக்கு கொடுத்திருந்தது.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மத்ரித்தில் குடியேற்றங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன[11][12]. இருப்பினும் மத்ரித் பற்றிய ஆகப் பழைய குறிப்புகள் கிடைப்பது, எசுப்பானிய முசுலிம் ஆட்சி காலத்தில்தான்[13]. குர்துபா கலீபகத்தின் முதலாம் முகம்மதினால் இன்றைய மத்ரித்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது[14]. இது லியான் மற்றும் கேசுடிலே பேரரசுகளின் தாக்குதல்களில் இருந்து இசுலாமிய அல்-அந்தூசு பகுதியை காக்கும் வண்ணம் கட்டப்பட்டது. குர்துபா கலீபகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1085ல் இது கிறித்தவ அரசுகளால் கைப்பற்றப்பட்டு கேசுடிலே பேரரசுடன் இனைக்கப்பட்டது[15]. இதனைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த முசுலிம் மற்றும் யூதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மத்ரித்தின் புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
இதன் பிறகான காலகட்டத்திலும், மத்ரித் பல முறை முற்றுகைக்கு உள்ளானது. போர்த்துக்கீசியர் மற்றும் நெப்போலியன் ஆகியோரது கட்டுப்பாட்டுலும் சிறிது காலம் இருந்தது. 1931ம் ஆண்டின் எசுப்பானிய சட்ட வரைவின் படி மாநில தலைநகரமாக அறிவிக்கப்பது. கூடவே 1936 முதல் 1939 வரையிலான உள்நாட்டு போரில் மிகவும் பாதிக்கப்படது. இருப்பினும் 1960களில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரணமாக மிக விரைவாக வளரத்தொடங்கியது. 1978ல் அதிகாரப்பூர்வமாக எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
நிர்வாகம்
மத்ரித் பெருநகர மன்றம் 52 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் மத்ரித் நகராட்சிப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களிலிருந்து ஒரு நகரத் தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் எட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சி சபை அமைக்கப்படுகின்றது[16].
அனா பொடெல்லா, தற்போதைய மத்ரித் மாநகரத்தின் தலைவர் ஆவார். இவரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநகரத் தலைவரான அல்பர்டோ ரூசு கல்லாடன், 2011ல் எசுப்பானிய சட்ட அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, இவர் இந்த பதவியில் இருந்து வருகின்றார்.
16ம் நூற்றாண்டின் மத்தியில் மத்ரித், எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் மக்கள் நெருக்கம் அதிகமாகத் தொடங்கியகியது. இது அதிகபட்சமாக 1970களில் 3 மில்லியனைத்தொட்டது. ஆனால் 1990 களின் மத்தியில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, மக்கள்தொகை கணிசமான அளவு குறையத் தொடங்கியது. சிறு மற்றும் குறு நகரங்களிலும் வேலைவாய்ப்பு வசதிகள் பெருகியதன் காரனமாகவே இந்த மக்கள் தொகை குறைவு ஏற்பட்டதாகவும் கூறுவர்.
இருப்பினும் 1990களின் முடிவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய மத்ரித் மக்கள் தொகை 21ம் நூற்றாண்டில் அதன் உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக 2001 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் மட்டும் இதன் மக்கள் தொகை 271,856 வரை உயர்ந்தது.
மேலும் இதன் பொருளாதார வனப்புகளைக் கணக்கில்கொண்டு, பிற நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளும் இங்கு அதிகம். இவ்வாறு இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்றவற்றில் இருந்து இங்கு குடியேறிய மக்களின் தொகை, மொத்த மத்ரித் மக்கள் தொகையில் 16.2% ஆகும்.
↑Ocupaciones achelenses en el valle del Jarama (Arganda, Madrid);Santonja, Manuel; López Martínez, Nieves y Pérez-González, Alfredo;1980;Diputación provincial de Madrid;பன்னாட்டுத் தரப்புத்தக எண்84-500-3554-6
↑It was recorded in the 15th century by the Arab geographer al-Himyari, who his book "The Perfurmed Garden book about the news of the countrie"s (Kitab al Rawd to mi'tar) describes: "Madrid, remarkable city of Al-Andalus, which was built by Amir Muhammad ibn Abd ar-Rahman..."