பீர் ஹக்கீம் சண்டை
பீர் அக்கீம் சண்டை (Battle of Bir Hakeim) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். கசாலா சண்டையின் போது நிகழ்ந்த இந்த மோதலில் எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சு நாட்டுப் படைகளிடமிருந்து பீர் அக்கீம் பாலைவனச்சோலைப் பகுதியை விடுதலை பிரெஞ்சுப் படைகள் பாதுகாத்தன.
மே 26, 1942ல் ஜெர்மானியத் தளபதி ரோம்மலின் படைகள் கசாலா-பீர் ஹக்கீம் அரண்கோட்டினைத் தாக்கின. இந்த அரண்கோடு வடக்கு-தெற்காக நேச நாட்டு பிரிகேட் படைப்பிரிவுகளை வரிசையாக பெட்டி வடிவில் நிறுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. பலமான இந்த அரண்கோட்டினை நேரடியாகத் தாக்காமல் ரோம்மல் தெற்குப் பகுதியில் சுற்றி வளைத்துப் பின்புறம் தாக்க முயன்றார். கசாலா அரண்கோட்டின் தெற்கு முனையில் பீர் ஹக்கீம் பாலைவனச் சோலை பகுதி இருந்தது. இதனை விடுதலை பிரெஞ்சுப் படைகள் பாதுகாத்து வந்தன. 26 அன்று இரவு அச்சுப் படைகள் பீர் ஹக்கீமுக்குத் தெற்கில் சென்று கசாலா அரண்கோட்டைத் தாண்டிய பின் மீண்டும் வடக்கு நோக்கித்திரும்பின. வெற்றிகரமாக கசாலா அரண்கோட்டை சுற்றி வளைத்த பின்னர் அதனைப் பின் பகுதியிலிருந்து தாக்கின. பிற பகுதிகளில் அவற்றுக்கு வெற்றி கிட்டினாலும் பீர் ஹக்கீமை தாக்கிய இத்தாலியப் படைப்பிரிவுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. பிரெஞ்சுப் படைகளின் திறமையான தாக்குதலால், இத்தாலியப் படைகள் நிலை குலைந்து போயின. ஜூன் 2ம் தேதி பீர் ஹக்கீம் அரண்நிலையைக் கைப்பற்ற அச்சுப்படைகள் மீண்டும் முயன்றன. அடுத்த ஆறு நாட்கள் இப்பகுதியில் கடுமையான சண்டை நடந்தது. சுற்றி வளைக்கப்பட்டிருந்தாலும் சரணடைய மறுத்த பிரெஞ்சுப் படைகள் கடுமையாக சண்டையிட்டனார். ஆனால் ஜூன் 9ம் தேதி துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்குமான குண்டுகள் தீர்ந்து போனதாலும், கசாலா அரண்கோட்டின் பிற பகுதிகள் அச்சுப்படைகளால் ஏற்கனவே கைப்பற்றப்பட்டதாலும், அவை பீர் ஹக்கீமை விட்டு பின் வாங்க முடிவு செய்தன. அடுத்த இரு நாட்கள் இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுக்கிடையே பெரும்பாலான பிரெஞ்சுப் படைவீரர்கள் பீர் ஹக்கீமை விட்டு பின்வாங்கினர். இவ்வாறு பதினாறு நாட்கள் அச்சுத் தாக்குதல்களைச் சமாளித்ததால், கசாலா சண்டையில் தோற்கடிக்கப்பட்டு பின் வாங்கிய பிரிட்டானிய 8வது ஆர்மிக்கு அடுத்த கட்ட மோதலான முதலாம் எல் அலாமீன் சண்டைக்குத் தயார் செய்ய அவகாசம் கிட்டியது.
குறிப்புகள்
- ↑ Ford (2008), p. 64
- ↑ 2.0 2.1 Buffetaut (1992), p. 150
மேற்கோள்கள்
- Jean-Louis Crémieux-Brilhac, La France Libre, NRF, பாரிஸ், 1996.
- Erwan Bergot, La Légion au combat, Narvik, Bir-Hakeim, Dièn Bièn Phu, Presses de la Cité, 1975
- Bimberg, Edward L. (2002), Tricolor Over the Sahara, Greenwood Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313316548
- Buffetaut, Yves. La guerre du desert II: Bir-Hakeim. Armes Militaria Magazine HS 06. Paris, 1992
- Ford, Ken. Gazala 1942: Rommel's greatest victory. Osprey Publishing. Oxford, 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846032646
- Général Kœnig, Bir Hakeim, Ed. Robert Laffont, பாரிஸ், 1971.
- Dominique Lormier, Rommel: La fin d'un mythe, Ed. Le Cherche midi, பாரிஸ், 2003.
- Pierre Messmer, La bataille de Bir Hakeim, Revue Espoir, Paris, September 1986.
- Raphaël Onana, Un homme blindé à Bir-Hakeim, Ed. L'Harmattan.
- Field Marshal Rommel, Archives Rommel, Herrlingen-Blaustein.
- Daniel Rondeau and Roger Stephane, Des hommes libres: La France Libre par ceux qui l'ont faite (Testimonies: Chapter 16, p. 243 and s.), Ed. Bernard Grasset, பாரிஸ், 1997.
|
|