இத்தாலியின் எகிப்து படையெடுப்பு (Italian invasion of Egypt) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு நிகழ்வு. இதில் முசோலினி தலைமையிலான பாசிச இத்தாலியின் படைகள் எகிப்திலிருந்த பிரிட்டானிய, பொதுநலவாய, சுதந்திர பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தின. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும்.
1940ல் நாசி ஜெர்மனிக்கு ஆதரவாக இத்தாலி பிரிட்டன், பிரான்சு முதலான நேச நாடுகளின் மீது போர் சாற்றியது. ஐரோப்பிய கண்டத்தில் நிகழ்ந்து வந்த போர் ஆப்பிரிக்காவிற்கும் பரவியது. எகிப்து பிரிட்டனுடன் நட்புறவுடன் இருந்து வந்தது. அதன் அண்டை நாடான லிபியா இத்தாலியின் காலனியாக இருந்தது. போர் மூண்ட பின்னர் இத்தாலியின் தலைவர் முசோலினி எகிப்திலுள்ள சுயஸ் கால்வாயைக் கைப்பற்ற விரும்பினார். இதன் மூலம் பிரிட்டனின் கிழக்காசியக் காலனிகளை ஐரோப்பாவிலிருந்து துண்டித்து விடலாம் என்பது அச்சு நாடுகளின் உத்தி. ஐரோப்பாவில் பிரித்தானியச் சண்டை நடந்து கொண்டிருந்த போதே இதனை செய்து முடிக்க லிபியாவிலிருந்த தனது படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டார். எண்ணிக்கையில் இத்தாலியப் படைகள் அதிகமாக இருந்தாலும் பயிற்சி, போர்த்திறன், ஆயுத பலம், தளவாட வழங்கல் ஆகியவற்றில் பிரிட்டானியப் படையினை விட வெகு பின்தங்கி இருந்தன. இதனால் உடனடியாக அதனால் படையெடுப்பை மேற்கொள்ளமுடியவில்லை. சில மாதகால தாமத்துக்க்குப்பினர் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த படையெடுப்பு செப்டம்பர் 9ம் தேதி தொடங்கியது. இத்தாலியப் படைப்பிரிவுகள் மெல்ல எகிப்துள் முன்னேறின. எண்ணிக்கையில் குறைவாக இருந்த பிரிட்டானியப் படைகள் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை. சூயசு கால்வாயின் பாதுகாவலுக்கு இன்றியமையாத இடங்களை இத்தாலியர்கள் நெருங்கினால் மட்டும் திருப்பித் தாக்க திட்டமிட்டிருந்தனர். 7 நாட்களில் எதிர்ப்பின்றி 65 மைல்கள் முன்னேறிய இத்தாலியப் படைப்பிரிவுகள் தளவாடப் பற்றாக்குறையால் முன்னேற்றத்தை நிறுத்திக் கொண்டன. இவ்வாறு இந்த படையெடுப்பில் பெரிய அளவு மோதல்கள் நிகழவில்லை.
எகிப்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்குத் இத்தாலியப் படைகள் தயாராகிக் கொண்டிருந்த போதே முசோலினி கிரீசு மீது படையெடுத்தார். இதனால் எகிப்து படையெடுப்புக்கு முக்கியத்துவம் குறைந்து போனது. அடுத்த கட்ட முன்னேற்றத்தை மேற்கொள்ளாமல் எகிப்திலிருந்த இத்தாலியப் படைகள் காலம் தாழ்த்தி வந்தன. இந்த இடைவெளியினையும் மெத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டானியப் படைகள் டிசம்பர் 1940ல் காம்ப்பசு நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. அதனைச் சமாளிக்க முடியாமல் இத்தாலியப் படைகள் லிபியாவுக்குப் பின்வாங்கின.
மேற்கோள்கள்