ஃபிளிப்பர் நடவடிக்கை (Operation Flipper) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியக் கமாண்டோ அதிரடிப்படைப் பிரிவுகள் ஜெர்மானியப் படைத் தளபதி ரோம்மலைப் படுகொலை செய்வதற்காக அவரது தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தின். தாக்குதலின் போது அங்கு இல்லாத ரோம்மல் உயிர்தப்பினார்.
1941ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தோற்கும் நிலையிலிருந்த இத்தாலியப் படைகள் ரோம்மலின் தலைமையிலான ஜெர்மானிய ஆப்பிரிக்கா கோரின் வருகையால் தப்பினர். நேச நாட்டுப் படைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கிய ரோம்மல் விரைவில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி விட்டார். பலம் வாய்ந்த டோப்ருக் கோட்டையை முற்றுகையிட்டார். டோபுருக்கை மீட்டு லிபியாவிலிருந்து ரோம்மலை விரட்ட நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கை, பேட்டில்ஆக்சு நடவடிக்கை போன்றவை தோல்வியில் முடிவடைந்தன. ரோம்மலின் போர்த்திறன் பற்றி உருவான பிம்பம் நேச நாட்டுப் படை வீரர்களின் மன உறுதியைப் பாதிக்கும் அளவு வளர்ந்தது. இதனால் அடுத்த பெரும் தாக்குதல் நிகழும் முன்னர் அவரைப் படுகொலை செய்ய நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். அவரைக் கொலை செய்தால் ஏற்படும் பெரும் குழப்பத்தில் அச்சுப் படைகள் ஆழ்ந்துவிடும், எளிதில் வென்று விடலாம் என்பது அவர்களது கணிப்பு.
குரூசேடர் நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு ரோம்மலைப் படுகொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டானிய கமாண்டோ வீரர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் வழியாக ரகசியமாக அச்சு நாட்டுக் கட்டுப்பாட்டுக் கடற்கரையில் தரையிறங்கினர். பின் போர்களத்திலிருந்து 250 கிமீ அச்சுநாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்பிரிக்கா கோர் போர்த் தலைமையகத்தை நவம்பர் 15, 1941ல் தாக்க முயன்றனர். ஆனால அவர்கள் எதிர்பார்த்தபடி அக்கட்டடத்தில் ரோம்மல் இல்லை. இரு வாரங்கள் முன்னரே போர்முனைக்கு சென்று விட்டார். இதனால் மொத்த திட்டமும் படுதோல்வி அடைந்தது. தாக்குதலில் ஈடுபட்ட கமாண்டோ வீரர்களில் பலர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாம் உலகப் போரில் அச்சு நாட்டு படைத் தளபதிகளை நேரடியாகப் படுகொலை செய்ய நேச நாடுகள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. (மற்றொன்று பசிபிக் போர்க்களத்தில் ஜப்பானிய கடற்படைத் தளபதி இசோருக்கு யமாமாட்டோவின் படுகொலை).
வெளி இணைப்புகள்