திருவாடானை (Tiruvadanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள திருவாடானை வட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவாடானை ஊராட்சியின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.
இவ்விடத்தில் புகழ்பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தொண்டி மற்றும் ஓரியூர் உள்ளது.
அமைவிடம்
மதுரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவகோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், இராமநாதபுரம் நகரத்திற்கு வடக்கே 53 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
இந்த ஊரின் சங்ககாலப் பெயர் அட்டவாயில்.
சொற்பிறப்பியல்: திரு+ஆடு+ஆனை திரு, சொற்பொருளியல்: மேன்மை, தெய்வீகம் மற்றும் ஆடு +ஆனை(யானை) திரிந்து திருவாடானை ஆகியது.
பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை பின்வருமாறு: வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து சிவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார். ஊரும் அதே பெயரில் அழைக்கபடலாயிற்று.[4] திருவாடனை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருவாடானையில் 2,426 வீடுகளும், 9,702 மக்கள் தொகையும் உள்ளது. மக்கள் தொகையில் 4916 ஆண்கள், 4786 பெண்கள் ஆவார்கள். திருவாடானை மக்களின் சராசரி கல்வியறிவு 84.60% ஆகும், இதில் ஆண்களின் சராசரி எழுத்தறிவு 91.55% மற்றும் பெண்களின் எழுத்தறிவு 77.43% ஆகும். திருவாடானை மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 957 ஆவார்கள். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,907 மற்றும்
15 ஆகவுள்ளனர்.[5]
சிறப்புக்கள்
சூரியனால் வழிபடப்பட்டதாக கருதப்படும் ஆடானை நாதர் கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில் இங்கு உண்டு. திருவாடானை பல கிராமங்களை உள்ளடக்கியது அதில் ஆதியூர் மிகவும் சிறப்புடையது. இந்த ஊருக்கு பல புராணங்கள் உள்ளன. ஆதியூர் பெயர்க்காரணம் ஆதி மனிதர்கள் இங்கேதான் தோன்றினார்கள் என சொல்வதும் உண்டு. அதனால் ஆதியூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள ஆதிரத்தினேசுவரர் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தல வரலாறு பரணிடப்பட்டது 2011-11-18 at the வந்தவழி இயந்திரம்