சில்ஹெட் கோட்டம் (Sylhet Division) (வங்காள மொழி: সিলেট বিভাগ, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு வளர்ச்சிக் கோட்டங்களில் ஒன்றாகும்.[2] வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்த இக்கோட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் சில்ஹெட் நகரம் ஒரு பெருநகர மாநகராட்சியும் ஆகும். இக்கோட்டத்தின் பெரிய மாவட்டமாக சுனாம்கஞ்ச் மாவட்டமும் (3,747.18 சதுர கிமீ), சிறிய மாவட்டமாக ஹபிகஞ்ச் மாவட்டமும் (2,636.59 சதுர கீமீ) உள்ளது. இக்கோட்டம் 19 வங்கதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது.
1995-இல் வங்காளதேசத்தின் ஆறாவது கோட்டமாக சில்ஹெட் கோட்டம் துவங்கியது. இக்கோட்டம் ஹபிகஞ்ச், மௌலிபஜார், சுனாம்கஞ்ச் மற்றும் சில்ஹெட் என நான்கு மாவட்டங்களையும், 35 துணை மாவட்டங்களையும், 333 கிராம ஒன்றியக் குழுக்களையும், 10,250 கிராமங்களையும், ஒரு மாநகராட்சியும், 19 நகராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.[3] இக்கோட்டத்தின் மக்கள் தொகை சராசரி பத்து மில்லியன் அளவில் உள்ளது. இது வங்காளதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் ஏழு விழுக்காடாகும்.
இக்கோட்டத்தின் சில்ஹெட் தொடருந்து நிலையம் மற்றும் சில்ஹெட் வானூர்தி நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. மேலும் நெடுஞ்சாலைகள் தேசியத் தலைநகரம் டாக்காவுடன் இணைக்கிறது.
மக்கள் தொகையியல்
3452.07 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை ஆக 99,10,219 உள்ளது. அதில் ஆண்கள் 49,33,390 ஆகவும், பெண்கள் 49,76,829 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.21% ஆக உள்ளது. பாலின விகிதம் 99 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 995 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 51.2% ஆக உள்ளது.
[5] இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
பொருளாதாரம்
சில்ஹெட் கோட்டத்தின் சுர்மா பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வெப்ப மண்டலக் காடுகள் கொண்டது. இக்கோட்டத்தின் சிறீமங்கள் நகரம் வங்காளதேசத்தின் தேயிலை தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள 150 தேயிலைத் தோட்டங்களில் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு தேயிலை, நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.
சமயம் மற்றும் மக்களினங்கள்
இக்கோட்டத்தில் வங்காளி மக்களுடன் பதினைந்திற்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.
பழங்குடி மக்களில் முராங், பாவ்ம், கியாங், திரிபுரி, மிசோ, குமி, சக், சக்மா மற்றும் ரியாங், ஊசுய், பாங்கோ இன மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.
சில்ஹெட் நகரம் இசுலாமியர்களுக்கும், இந்துக்களுக்குமான புனித தலங்களை கொண்டுள்ளது. ஐம்பத்தி ஒன்று சக்தி பீடங்களில் ஒன்று சில்ஹெட் நகரத்தின் வெளிப்புறத்தில் ஜெயந்தி எனும் கிராமத்தில் பாயும் சுர்மா ஆற்றின் கரையில் உள்ளது.[6] இக்கோட்டத்தில் இசுலாமியர்கள்81.16% ஆகவும், இந்துக்கள் 17.80% ஆகவும், கிறித்தவர்கள் 0.06% ஆகவும், பௌத்தர்கள் 0.02% ஆகவும், மற்றும் பிற சமய நம்பிக்கையாளர்கள் 0.96% ஆக உள்ளனர்.
கல்வி
வங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, சில்ஹெட் கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
↑এক নজরে সিলেট বিভাগ. sylhetdiv.gov.bd (in Bengali). Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2017-01-26. {{cite web}}: Invalid |script-title=: missing prefix (help)