வங்க மொழியை அதிகாரப்பூர்வ மற்றும் தேசிய மொழியாக் கொண்டுள்ள பகுதி
உள்ளூர் மொழியுடன் வங்க மொழியையும் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ள பகுதி
பெங்காளி பேசுபவர்கள் பெருமளவு புலம்பெயர்ந்த இடம் (100,000+)
பெங்காளி பேசுபவர்கள் சிறிய அளவு புலம்பெயர்ந்த இடம் (10,000+)
தெற்காசியாவில் வங்க மொழி பேசும் பகுதி
வங்காள மொழிஇந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி இந்தியத் துணைக்கண்டத்தில்வங்காள தேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் வாழும் மக்கள் பேசுகின்றனர். இது வங்கதேச குடியரசின் தேசிய மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகும், மற்றும் இந்திய குடியரசின் சில கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் (பாரக் பள்ளத்தாக்கு) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. மேலும் இது இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும் இது மொத்தம் 250 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, உலகிலேயே மிகுதியான மக்கள் பேசும் மொழிகளில் ஏழாவது இடத்தைவகிக்கிறது. இது பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியது. இது தெற்காசியாவில் பரவலாக உள்ள மற்ற மொழிக் குடும்பங்களான, குறிப்பாக திராவிட மொழிகள், ஆசுத்ரோ-ஆசிய மொழிகள், திபெத்திய-பர்மிய மொழிகள் ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளது, இவை அனைத்தும் வங்காள சொல்வளத்திற்கும் பங்களிப்புச் செய்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மொழியின் சொற்களில் வங்க மொழிச் சொற்கள் பாதிக்கும் மேலானதாகவும் (அதாவது, சமஸ்கிருத சொற்களின் உள்ளூர் திரிபுகள், சமஸ்கிருத சொற்களின் சிதைந்த வடிவங்கள் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இருந்து கடனாக பெற்றவை), 30 சதவிகிதம் சமஸ்கிருத சொற்களாகவும், மேலும் மீதமுள்ளவை வெளிநாட்டு சொற்களாகும். [3] கடைசியாக கலந்த சொற்களில் மேலாதிக்கமானவை பாரசீகமாக இருந்தது, இது சில இலக்கண வடிவங்களின் ஆதாரமாக இருந்தது. மேலும் சமீபத்திய ஆய்வுகளில் இம்மொழியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சொற்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, முக்கியமாக வங்க மொழியை பேசுபவர்களின் பாணியாலும் விருப்பம் காரணமாகவும். [3] இன்று, வங்கதேசத்தில் வங்காளமொழி மிகுதியானவர் பேசும் மொழியாக உள்ளதாகவும், இந்தியாவில் பரவலாக பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் உள்ளது.[4][5][6]
வங்காள மொழியானது ஆயிரமாண்டு நீண்ட, பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். வங்காள மறுமலர்ச்சிக்குப் பிறகு பரவலாக வளர்ந்திருக்கிறது மேலும் இது ஆசியாவில் மிக முக்கியமான மற்றும் வேறுபட்ட இலக்கிய மரபுகளில் ஒன்றாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. தமிழில் உள்ள செந்தமிழ், கொடுந்தமிழ் போலவே இரட்டை வழக்கு வங்காளத்திலும் உண்டு. வங்காள மொழியின் இலக்கிய வழக்கும், வட்டார வழக்குகளும் பெருமளவில் வேறுபடுகின்றன. இரண்டு நாடுகளின் நாட்டுப்பண்கள் இந்தியா ஜன கண மன, வங்காள தேசம் (அமர் சோனர் பங்களா), வங்காள மொழியில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டின் பாக்கிஸ்தானின் ஆட்சி மொழி நிலைப்பாடானது வங்காள மொழி இயக்கம் துவக்கப்பட காரணமாயிற்று. 1999 ஆம் ஆண்டில், கிழக்கு பாக்கிஸ்தானின் (இன்றைய வங்கதேசம்) மொழி இயக்கத்தை அங்கீகரிக்கும்விதமாக பன்னாட்டு தாய் மொழி நாளாக பெப்ரவரி 21-ஐ யுனெஸ்கோ அங்கீகரித்தது.
மொழி பேசப்படும் பகுதி
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காளம் ஆகும். வங்காளம் என்பது பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதியை குறிக்கிறது இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது).[7] இது இந்தியாவில் இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும்.
வங்காளத்தின் அருகில் உள்ள அசாம், திரிபுரா பகுதிகளிலும் வங்காள மொழி
பேசப்படுகிறது. இவைதவிர அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் வங்காள மொழி பேசுவோர் உள்ளனர்.[5][6]
ஆட்சி மொழி
பெங்காலி, வங்காளதேசத்தின் ஆட்சி மொழியும், தேசிய மொழியும் ஆகும். இது இந்தியாவின் அலுவல் மொழிகளான 23 மொழிகளில் ஒன்று.[8] இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா ஆகியவற்றில் ஆட்சி மொழியாகவும் உள்ளது. அசாம் மாநிலத்தில் துணை ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலமான சார்க்கண்டிலும், பாக்கிஸ்தானின்கராச்சியிலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது [9] கராச்சி பல்கலைக்கழகத்தில் வங்காள மொழிப் படிப்புகள் உண்டு.
1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது, உருது ஆட்சி மொழியாக்கப்பட்டது. வங்காளத்தில் பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசிய போதிலும், உருது மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. தங்கள் மொழியைக் காக்கவும், தனித்துவத்தை நிலைநிறுத்தவும் வங்காள மொழி இயக்கம் தோன்றியது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விளைவாக பெப்ரவரி 21 ல் பல வங்காளதேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த நாளை நினைவுகூரும்விதமாக, இது சர்வதேச தாய்மொழி நாளாக ஏற்கப்பட்டுள்ளது.[10]
சொற்கள்
பெங்காளியில் 100,000 வேற்று மொழிச் சொற்கள் உள்ளன. இவற்றில் 50,000 சொற்கள், சமசுகிருதத்திடம் இருந்து கடனாகப் பெற்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 21,100 சொற்கள், சமசுகிருதத்துடன் தொடர்புடைய வங்காள மொழிச் சொற்கள், மற்றவை ஐரோப்பிய மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. வேற்று மொழிச் சொற்கள் அதிகளவில் பெறப்பட்டாலும், இவை அனைத்து தொழில்நுட்பம் தொடர்பானவை. எனவே, பொதுவழக்கில் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவு. தற்கால இலக்கியங்களில் இவற்றின் பயன்பாடு குறைந்தளவே காணப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களுடனான கொண்டிருந்த தொடர்பினால், வேற்று மொழிச் சொற்கள் பல வங்காளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சில இந்தி, அசாமியச் சொற்கள் பாவனையில் உள்ளன. ஈரான், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியோரின் படையெடுப்பால் பாரசீக, அரபு, துருக்கிய, பஷ்தூ மொழிச் சொற்கள் வங்காளத்தில் சேர்க்கப்பட்டன. போர்த்துகேய மொழி, டச்சு மொழி, ஆங்கிலச் சொற்களும் காலனி ஆதிக்கக் காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
எழுத்துமுறை
வங்காள மொழியை வங்காள எழுத்துமுறையில் எழுதுவர். இது அபுகிடா என்ற எழுத்துவகையைச் சேர்ந்தது. இதில் உயிர், மெய் எழுத்துகள் இணையும் போது குறிகள் இட்டு எழுதப்படும். இந்த எழுத்துமுறை வங்காள மொழிக்கு மட்டுமில்லாமல், அசாமிய மொழிக்கும், பிற உள்ளூர் மொழிகளை எழுதவும் பயன்படுகிறது. இது பிராமி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒரிய எழுத்துமுறை, நேபாளிய எழுத்துமுறை ஆகியனவும் இதனுடன் தொடர்புடையன.
உயிரொலிகளுக்கு பதினோரு வரிவடிவங்கள் உள்ளன. மெய்யொலிகளுக்கு 39 எழுத்துவடிவங்களும் உள்ளன. இது இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கத்தில் எழுதப்படும். பெரிய, சிறிய எழுத்து வடிவங்கள் கிடையாது. மெய் எழுத்துகளுடன் சேரும்பொழுது உயிர் எழுத்துகள் குறிகளாக மாற்றி எழுதப்படும். சில எழுத்துகள் சேரும்பொழுது, அவை அடியில் குறியிட்டு எழுதப்படுவதும் உண்டு. மெய் எழுத்தை தனித்து எழுத புள்ளி பயன்படுத்தப்படும்.
இந்த குறியீடுகள் இணைவதன் மூலம் 285 வடிவங்கள் உண்டாகின்றன.
வட்டார வழக்குகள்
வங்காளத்தின் பேச்சு வழக்குகள் நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ரார், பங்கா, காமரூபா, வரேந்திரா ஆகியன இவை.
வட்டார வழக்குகளில் திபெத்திய-பர்மிய மொழிகள் தந்த சொற்களும், ஒலிகளும் குறிப்பிடத்தக்கவை.
வங்காளம் இரட்டை வழக்குகளைக் கொண்டது. பேச்சுவழக்குகள் எழுத்துவழக்கில் இருந்து பெரிதும் மாறுபட்டது. எழுத்துவழக்கில் பெரிய வினைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. பேச்சுவழக்கில் இவை சுருங்கிவிடுகின்றன.
வந்தே மாதரம், ஜனகணமன ஆகிய பாடல்கள் எழுத்துவழக்கான செம்மையான வங்காளத்தில்
எழுதப்பட்டவை.
பேச்சு வழக்குகளிலும், இந்து, முஸ்லிம்கள் பேச்சுகளில் சமயம் சார்ந்த சொற்கள் இருப்பதைக் காணலாம்.
வரலாறு
மற்ற இந்திய ஆரிய மொழிகளைப் போன்றே, இதுவும் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றியதே.
வங்காள மொழியின் வரலாறைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.
பழைய வங்காளம் (900/1000–1400) - பழங்கால வங்காள மொழி. இந்த காலத்தில் அசாமிய மொழி பிரியத் தொடங்கியது.
இடைக்கால வங்காளம் (1400–1800) — பாரசீக ஆதிக்கத்திற்கு உட்பட்டது.
புதிய வங்காளம் (1800 முதல்) — புதிய முறைக்கேற்ப மாற்றங்கள்
பழங்காலத்தில் இருந்தே பாளி, பிராகிருதம், சமசுகிருதம் ஆகிய மொழிகளின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை, வங்காள இலக்கணம் ஆவணப்படுத்தப்படவில்லை. போர்த்துகேயர் ஒருவரின் முயற்சியால், வொகாபுலரியோ எம் இடியமோ பெங்காள்ளா என்ற நூல் எழுதப்பட்டது.
பிற்காலத்தில், இலக்கிய வழக்கத்தில் இருந்து எளிய வழக்கம் கொண்டுவரப்பட்டது.
1951 ஆம் ஆண்டில், வங்காள மொழி இயக்கம் இந்த மொழியைக் காக்கத் தோன்றியது.
இந்திய தேசிய கீதமான ஜன கண மன, வங்காளதேசத்தின் தேசிய கீதமான அமர் சோனர் பங்களா ஆகிய இரண்டும் வங்காள மொழியில் எழுதப்பட்டவை.
↑Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Bengali". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.