முகமது ஜில்லூர் ரஹ்மான் (Mohammed Zillur Rahman, வங்காள மொழி: মোঃ জিল্লুর রহমান) (9 மார்ச்சு 1929 – 20 மார்ச்சு 2013) வங்காள தேசத்தின் 19வது[2] குடியரசுத் தலைவராக 2009 முதல் 2013 வரை பதவியில் இருந்தவர். அவாமி லீக் கட்சியின் தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[3][4][5] 2009ஆம் ஆண்டில் இரகுமான் வங்காளதேச குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்ப்பாளர் யாருமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அவாமி லீக் கட்சி முன்னதாக 2008 பொதுத்தேர்தல்களில் மிகப் பெரும்பான்மையான இடங்களில் வென்றது.[6] வங்காளதேசத்தில் சேக் முஜிபுர் ரகுமான், ஜியாயுர் இரகுமானை அடுத்து பதவியில் இருந்தபோதே இறந்த மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
இளமையும் கல்வியும்
ஜில்லூர் ரகுமான் கிசோர்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைரப் உபவட்டத்தில் மார்ச்சு 9, 1929இல் பிறந்தார்.[1] இவரது தந்தை மெகர் அலி மியான் ஓர் வழக்கறிஞராகவும் உள்ளாட்சி அமைப்பான மாவட்ட வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.[5] 1945இல் பைரப் கே. பி. உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1947இல் இடைநிலைக் கலைப் பட்டமும்[7] 1954இல் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் பட்டப்படிப்பும் தாக்கா பல்கலைகழகத்தில் முடித்தார்.[8]
அரசியல் பணிவாழ்வு
ரகுமான் 1952ஆம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவாமி லீக் கட்சி சார்பில் 1970இல் நடந்த பாக்கித்தான் தேசியப் பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்காளதேச விடுதலைப் போரின் போது சேயக அரசில் பங்கேற்றார். போருக்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு அவாமி லீக்கின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1973இல் வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சேக் முசிபுர் இரகுமானின் கொலைக்குப் பிறகு படைத்துறை ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு நான்காண்டுகள் சிறையில் கழித்தார். 1996க்கும் 2001க்கும் இடையிலான அவாமி லீக் அரசில் அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.[5]
ரகுமான் பெப்ரவரி 12, 2009இல் வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.[9] அவர் பதவியில் இருக்கும்போது 21 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.[2] இதற்கு எதிராக 1972ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையிலான காலகட்டத்தில் இவருக்கு முந்தைய குடியரசுத் தலைவர்கள் நான்கு பேருக்கே மன்னிப்பு வழங்கியுள்ளது குறிக்கத் தக்கது.
தனி வாழ்வு
ரகுமான் தம்முடைய கட்சியில் மகளிரணி செயலாளராக விளங்கிய ஐவி ரகுமானை திருமணம் செய்து கொண்டார். 2004ஆம் ஆண்டில் தாக்காவில் நடந்த கைக்குண்டுவீச்சு தாக்குதலில் ஐவி கொல்லப்பட்டார்.[10] இருவருக்கும் ஒரு மகனும் – நசுமல் அசன் பாப்போன் - இரு மகள்களும் - தானியா பக்த் மற்றும் தானிமா பக்த்.[9] பாப்போன் வங்காளதேச துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்; பெக்சிம்கோ பார்மா என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[5][11]
நோயும் இறப்பும்
மார்ச்சு 10, 2013 அன்று தமது நாட்டிலிருந்து நெருக்கடியான நுரையீரல் தொற்றுடன் நோயாளி வானூர்தியில் சிங்கப்பூர் சென்ற ரகுமான் அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.[12] முன்னதாக தாக்காவிலுள்ள ஒருங்கிணைந்த படைத்துறை மருத்துவமனையில் முதல்நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.[13] சிங்கப்பூரில் சிறுநீரகம் மற்றும் சுவாசச் சிக்கல்களுக்காக மார்ச்சு 11 முதல் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தார்.[14][15][16] இவரது விடுப்பின்போது தற்காலிக குடியரசுத் தலைவராக நாடாளுமன்ற அவைத்தலைவர் அப்துல் அமீது மார்ச்சு 14 அன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ரகுமானின் மறைவை ஒட்டி மூன்று நாட்கள் அலுவல்முறை தேசியளவிலான துக்கம் அனுட்டிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.[17]
மேற்சான்றுகள்