இலங்கையில்பிரதேச செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1] இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அல்லது கிராம அலுவலர் பிரிவுகள் எனப்படுகின்றன. பிரதேச செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேச செயலாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்றது. இப் பிரதேச செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான அரசாங்க அதிபர்களுக்குப் பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.
வரலாறு
1989ல் பதவியேற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்படுத்திய முறையே பிரதேச செயலக முறையாகும்.
ரணசிங்க பிரமதாசவின் அரசாங்கம் வறுமை ஒழிப்பு, கிராமியமட்ட விருத்தி ஆகியவற்றை ஒரு புதியமட்டத்தில் ஏற்படுத்தி வந்தது. சனசக்தித் திட்டத்தை வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகவும், பிரதேச நிர்வாக முறையை கிராமிய அபிவிருத்தி நடவடிக்கையாகவும் அரசாங்கம் செயற்படுத்தி வந்தது. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1656–1796) ஏற்படுத்தப்பட்ட கச்சேரி முறையை (மாவட்ட செயலகம்) மாற்றி, பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையை நோக்காகக் கொண்டு ஏற்கனவே உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக (A.G.A.Division) இருந்த நிறுவனங்கள் பிரதேச செயலகங்களாக மாற்றியமைக்கப்பட்டன. இதன் கீழ் முன்பு அமைச்சுக்கள், திணைக்களங்கள், கச்சேரிகள் என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட அலுவல்கள் பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.
பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை
இலங்கையில் மொத்தம் கிட்டத்தட்ட 331 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன.[2]பரப்பளவு, மக்கட்தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தளவு தொடக்கம் கூடியளவு வரையான பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குருநாகல் மாவட்டம் மிகக்கூடிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
மாவட்ட அடிப்படையில் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் தமது தேவைகளை விரைவாகவும், பணவிரயமின்றியும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குவதுடன், துரித முன்னேற்றத்தை அடைவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்க்கையாகும்.
பணிகள்
சமூகநலவிருத்தி (சுகாதாரம், நீர் விநியோகம்)
பொருளாதார விருத்தி (விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய முன்னேற்றத் திட்டங்கள், பாதை முன்னேற்றம், கைத்தொழில்)
திட்டமிடல் நடவடிக்கைகள் (ஆண்டுத்திட்டங்கள்)
பிறப்பு, இறப்பு விவாகப் பதிவு நடவடிக்கைகள்
ஓய்வூதியம் வழங்கல்
இணக்க சபைகள் மூலம் குடும்ப, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்தல்
பிரதேச செயலகங்களின் நோக்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
நிர்வாகத்தைப் பன்முகப்படுத்துவதன் மூலம் கிராமிய மட்ட முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தல்
பிரதேச முனெனேற்றத்தில் மக்கள் பங்குபற்றலை அதிகரித்தல்.
மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்து கொடுப்பதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல்
மக்களின் வாழ்க்கைச் செலவு, நேர விரயம், போக்குவரத்துச் செலவு என்பவற்றைக் குறைத்து வாழ்க்கைத்தரத்தைக் கூட்டுதல்.
தேசிய முன்னேற்றத்தை எய்துவதற்கு கிராமிய முன்னேற்றம் அவசியம் என்பதால் கிராமிய மட்டத்தை விருத்தி செய்தல்
கிராமிய மட்டத்திலான சமூக, பொருளாதார, கலாசார தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்தல்
வினைத்திறனான துரித தீர்மானங்களை எடுத்தல்
முக்கியத்துவம்
பிரதேச செயலகங்கள் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை சமூக. பொருளாதார முக்கியத்துவம், நிர்வாக, அரசியல் முக்கியத்துவமென இரு கட்டங்களாக வகுக்கலாம்:
சமூக, பொருளாதார முக்கியத்துவம்
மக்களின் தேவைகள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பூர்த்தி செய்யப்படுவதால் காலதாமதம், நேரவிரயம், போக்குவரத்துச் செலவு என்பன குறைவடையும். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயரும்.
மக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படும் போது அவர்களிடம் காணப்படும் விரக்தி அமைதியின்மை என்பன நீங்கி நாடு வளம் பெறும்.
கிராமிய மட்ட முன்னேற்றம் ஏற்படும். இதனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் சம அளவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மக்கள் முன்னேற்றப்பணிகளில் சமூகச் செயற்றிட்டங்களில் பங்குபற்ற வாய்ப்புண்டாக்கிக் கொடுக்கப்படும். இதனால் மக்களின் பங்கு பற்றல் அதிகரிக்கும்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசத்தையும் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடியுமானதாக இருப்பதினால் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.
நிர்வாக அரசியல் முக்கியத்துவம்
முன்பு கச்சேரிகள், உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் என்பவற்றை நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பிரதேச செயலகங்களை மட்டுமே நிர்வகிக்க வேண்டி உள்ளன. இதனால் நிர்வகிப்பதும் இலகு, கட்டுப்படுத்துவதும் இலகு, தீர்மானங்களைத் துரிதமாக மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ நோக்கில் கட்டுப்படுத்துவது இலகுவாகவும், ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், தீர்மானங்கள் என்பவற்றை உடனுக்குடன் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பிவைக்க முடியும்.
மக்களின் பங்குபற்றல் அதிகரிப்பதனால் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்துடன் ஜனநாயக முறைக்கு மேலும் வலுவூட்டப்படும்.