மைக்கேல் ஜெரார்டு டைசன் (Michael Gerard Tyson, பிறப்பு: சூன் 30, 1966) 1985 முதல் 2005 வரை போட்டியிட்ட ஓர் அமெரிக்க முன்னாள் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவரது ஆரம்பகால வாழ்க்கையில் " அயர்ன் மைக் " [4] மற்றும் " கிட் டைனமைட் " ஆகிய புனைப்பெயர் பெற்றார். பின்னர் " தி பேடஸ்ட் மேன் ஆன் தி பிளானட் " என்று அழைக்கப்பட்டார்.[5] டைசன் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மிகுஎடை குத்துச் சண்டை வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 1987 முதல் 1990 வரை தோல்வியே பெறாது வாகையாளராக இருந்தார். இதில் 19 போட்டிகளில் நாக் அவுட்டில் வெற்றி பெற்றார். 20 வயது, நான்கு மாதங்கள் மற்றும் 22 நாட்களில் தனது முதல் வாகையாளர் பட்டத்தை வென்றதன் மூலம் மிகுஎடை பட்டத்தை வென்ற இளைய குத்துச்சண்டை வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.[6]டபிள்யு பி ஏ , டபிள்யு பி சி மற்றும் ஐ பிஎ எப் பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்ற முதல் மிகுஎடைக் குத்துச்சண்டை வீரர் ஆவார். 1990இல் பஸ்ட்டர் டக்ளசிடம் நாக் அவுட்டில் இவர் தோல்வியுற்றது குத்துச்சண்டை வரலாற்றில் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[7]
டைசனுக்கு 10 வயதாக இருந்தபோது பொருளாதாரச் சுமைகள் காரணமாக பிரவுன்ஸ்வில்லுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் வரை குடும்பம் பெட்ஃபோர்ட்-ஸ்டுவசண்டில் வசித்து வந்தது.[5] டைசனின் தாயார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார். 16 வயதான டைசன், குத்துச்சண்டை மேலாளரும் பயிற்சியாளருமான கஸ் டி அமடோவின் பராமரிப்பில் வாழ்ந்தார். பின்னர் இவர் சட்டப்பூர்வ பாதுகாவலராக ஆனார். டைசன், "என் அம்மா என்னுடன் மகிழ்ச்சியாக இருப்பதையும், நான் எதையாவது செய்ததற்காக பெருமைப்படுவதையும் நான் பார்த்ததில்லை: அவர் என்னை தெருக்களில் ஓடும் காட்டுக் குழந்தையாக மட்டுமே அறிந்திருந்தார், நான் அணிந்துவரும் புதிய ஆடைகளுக்கு என்னால் பணம் செலுத்த இயலவில்லை என்பதனையும் அறிந்திருந்தார். அவருடன் பேசவோ, அவரைப் பற்றி அறியவோ எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில் ரீதியாக, இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஆனால் அது உணர்ச்சி ரீதியாக என்னை மிகவும் பாதிக்கிறது" என தனது தாயினைப் பற்றி கூறினார்.[8]
ஆரம்பகால வாழ்க்கை
மைக்கேல் ஜெரார்டு டைசன் சூன் 30, 1966 அன்று நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள ஃபோர்ட் கிரீனில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.[5][9] இவருக்கு ரோட்னி (பிறப்பு: 1961) [4][4] எனும் மூத்த சகோதரரும் டெனிஸ் என்ற மூத்த சகோதரியும் உள்ளனர். டைசனின் தாயார், வர்ஜீனியாவின் சார்லட்டசுவில்லில் பிறந்தவர்.[10] இவரது தாய் ஒரு விபச்சாரி என்று விவரிக்கப்பட்டார்.[11] டைசனின் பிறப்புச் சான்றிதழின்படி, அவரின் தந்தை "பர்செல் டைசன்" என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[4][4] ஜிம்மி கிர்க்பாட்ரிக் என்ற பிம்ப் என்பவரையே டைசன் தனது தந்தையாகக் கருதினார். இவர் வட கரோலினாவின் கிரியர் நகரைச் சேர்ந்தவர் ஆவார். இது சார்லட் நகரத்தால் இணைக்கப்பட்டது. பெரும்பாலும் இது கருப்பர்கள் வாழும் பகுதியாகும்.[12]
தொழில்முறைஞர் அல்லாத வாழ்க்கை
டைசன் 1981 மற்றும் 1982 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். 1981இல் ஜோ கோர்டெசைத் தோற்கடித்தார். 1982இல் கெல்டன் பிரவுனைத் தோற்கடித்தார். 1984 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற தங்கக் கையுறைப் போட்டியில் ஜொனாதன் லிட்டில்சை வீழ்த்தி டைசன் தங்கப் பதக்கம் வென்றார்.[13] ஹென்றி டில்மேனுடன் போட்டியிட்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தார். 1984 லாஸ் ஏஞ்சல்ஸில்நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் மிகுஎடை வாகையாளர் பட்டத்தை வென்றார்.[14]
வன்கலவி விசாரணை மற்றும் சிறை
டைசன் சூலை 1991இல் விடுதி அறையில் 18 வயதான டிசைரி வாசிங்டனை வன்கலவி செய்ததற்காக இண்டியானாபொலிசால் கைது செய்யப்பட்டார். மரியன் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் டைசனின் வன்கலவி வழக்கு சனவரி 26 முதல் பிப்ரவரி, 1992 வரை நடந்தது.[15]
வாசிங்டனின் அதிர்ச்சி நிலை டைசனின் ஓட்டுநரின் சாட்சியம் மூலம் உறுதியானது. நிகழ்வு நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையில் வாசிங்டன் வன்கலவியுடன் ஒத்துப்போனதை உறுதி செய்தது.[16]
முன்னணி வழக்கறிஞர் வின்சென்ட் ஜே. ஃபுல்லரின் நேரடி விசாரணையில், வாசிங்டனின் முழு ஒப்புதலுடன் தான் இது நடந்ததாக டைசன் கூறினார். மேலும் அவர் வாசிங்டனைக் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறினார். அவரை முன்னணி வழக்கறிஞர் கிரிகோரி கேரிசன் குறுக்கு விசாரணை செய்தபோது, டைசன் வாசிங்டனை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படுவதை மறுத்தார். மேலும் அவர் அவருடன் உடலுறவு கொள்ள விரும்புவதாக வலியுறுத்தினார்.[5] 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி, நடுவர் மன்றம் சுமார் 10 மணிநேரம் விவாதித்த பிறகு, டைசன் வன்கலவி குற்றச்சாட்டிற்காகத் தண்டிக்கப்பட்டார்.[17]
சொந்த வாழ்க்கை
டைசன் செவன் ஹில்ஸ், நெவாடாவில் வசிக்கிறார்.[19] இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். தனக்குப் பிறந்த குழந்தைகளோடு கூடுதலாக, தனது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த ஒரு மகள் உள்ளார்.[20]
இந்தத் திருமண வாழ்க்கையில் குடும்ப வன்முறை மற்றும் மன உறுதியற்ற தன்மை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்தன.[4]