மேற்கு ஏரி (West Lake; சீனம்: 西湖, Xī Hú) என்பது கிழக்கு சீனவின் கங்சூவிலுள்ள நன்னீர் ஏரி ஆகும். இது மூன்று ஆற்றிடைப் பாதைகளினால் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் பல கோயில்களும் கோபுரங்களும் தோட்டங்களும் செயற்கைத் தீவுகளும் காணப்படுகின்றன.
மேற்கு ஏரி அதனுடைய இயற்கை அழகு, வரலாற்றுப் பழமை என்பவற்றால் சீன வரலாற்றில் புலவர்கள், ஓவியர்கள் ஆகியோரின் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், சீனத் தோட்ட வடிவமைப்பாளர்களின் உணர்வின் முக்கிய மூலமாகவும் இது இருந்துள்ளது.[1]
இது ஒரு உலகப் பாரம்பரியக் களம் என 2011 இல் அறிவிக்கப்பட்டு, "பல நூற்றாண்டுகளாக சீனாவில் மட்டுமல்லாது சப்பானிலும் கொரியாவிலும் தோட்ட வடிவமைப்பில் செல்வாக்குச் செலுத்தியது"[2] எனவும் "மனிதனுக்கும் இயற்கைக்குமிடையில் கருத்தியல் உருகுதலின்" பிரதிபலிப்பு எனவும் விபரிக்கப்பட்டது.[2]
வரலாறு
ஆரம்பப் பதிவுகள் மேற்கு ஏரியின் பெயர் "கியன்டாங் ஏரி" அல்லது "வு வன ஏரி" என்று இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கான் நூல் "கியன்டாங் மேற்கு ஆளுனருடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், வு வன மலை ("வுலின்சன்") வு வன ஏரியின் மூலம் எனவும், கிழக்காக ஒடிக் கடலில் கலக்கும் இது 830 லி (தேராயமாக, 350 km or 220 mi) அளவுள்ளதாகக் குறிப்பிடுகிறது.
இதன் ஏனைய பெயர்களாக "கியன்டாங் ஆறு", "கியன்டாங் வாவி", "மிங்செங் ஏரி", "ஜினியு ஏரி", "சிகான் ஏரி", "சாங் ஏரி", "லியான்யன் ஏரி", "பங்செங் குளம்", "சிசி ஏரி", "கொசி ஏரி", "சிலிங் ஏரி", "மெய்ரென் ஏரி", "சியான்சி ஏரி", "மிங்யு ஏரி" ஆகியன உள்ளன. ஆனாலும் இரு பெயர்கள் மாத்திரம் பரவலாக வரலாற்றிலும், வரலாற்று ஆவணப் பதிவுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கங்சூ "கியன்டாங்" என அழைக்கப்பட்டதால் "கியன்டாங் ஆறு" என்ற பெயரும், நகரத்தின் மேற்கில் இது அமைந்துள்ளதால் மேற்கு ஏரி என்ற பெயரும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களாகும். மேற்கு ஏரி என்ற பெயர் முதலில் இரு கவிதைகளில் காணப்பட்டது. தென் சொங் அரசமரபு காலம் முதல் "மேற்கு ஏரி" என்ற பதம் பல கவிதைகளிலும் அறிஞர்களின் கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்ட போது "கியன்டாங் ஆறு" என்ற பதம் மெதுவாக கைவிடப்பட்டது. முதல் முறையாக அலுவலன ஆவணத்தில் சூசி என்ற அரசியல் வல்லுனரால் பயன்படுத்தப்பட்டது.
சூழலியல்
தாவரம்
மேற்கு ஏரி ஏராளமான இயற்கை, கலாச்சார வளங்களை மாத்திரம் கொண்டிராமல், அது பல்வேறு தாவர வளங்களையும் வழங்குகிறது. ஆண்டு முழுவதும், எல்லா வகையான பூக்களையும் தாவரங்களையும் மேற்கு ஏரியிலும் அதைச் சுற்றியுள்ள மலைகளிலும் உருவாக்குகிறது. இதன் மூலம் நகரின் சுற்றுச்சூழல் தரம் அதிகரிப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.
குழிப்பேரி மலர்தல்: அதிகளவில் குழிப்பேரி "வில்லோ" மரங்கள் ஏரிக்கரையில் நடப்பட்டுள்ளன. ஒரு வில்லோ மரத்துடன் ஒரு குழிப்பேரி மரம் என்ற அளவில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிற தோட்டக்கலை தாவரங்களான மாக்னோலியா, சேலா போன்றனவும் அங்குள்ளன. அப்பகுதியில் குழிப்பேரி பூக்கும் காலமாக வழக்கமாக ஏப்ரல் நடுப்பகுதி முதல் பெப்ரவரி இறுதியில் வரை உள்ளது.
தாமரை: இப்பகுதியிலுள்ள சில இடங்களுக்கு தாமரையின் பெயர்கள் இடப்பட்டுள்ளது. எ.கா: தாமரைத் தடாகம், தாரை ஒழுங்கை. பாரம்பரியமாக அங்கு "தாமரை அணிச்சல்" என்ற உணவு உள்ளது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தாமரையின் எச்சங்கள் குறைந்தது தாங் அரசமரபுக்கு முன் தாமரை பயிரிடப்பட்டுள்ளது எனக் காட்டுகின்றன. சொங் அரசமரபுக் கவிதை ஒன்றும் தாமரை பற்றிக் குறிப்பிட்டுள்ளமையும் தாமரை மேற்கு ஏரியில் தாமரைக்கு அதிக மதிப்பிருந்நது என்பதைக் காட்டுகிறது. தற்போது 14 வகை தாமரைகள் 130 சீன ஏக்கர் பகுதியில் பயிரிடப்படுகிறது. புள்ளிவிபரத்தின்படி, மேற்கு ஏரித் தாமரைகள் சூன் ஆரம்பத்தில் பூக்கத் தொடங்கி சூன் இறுதியில் உச்ச மலர்தலை அடைகியறது. இது ஆகத்து இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கம் வரையும் செல்வதுண்டு.