திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் (Pope Marcellus I) உரோமை ஆயராகவும்திருத்தந்தையாகவும் 308 மே (அல்லது சூன்) மாதத்திலிருந்து 309ஆம் ஆண்டு சனவரி 16ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் மர்செல்லீனுஸ் என்பவர். திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 30ஆம் திருத்தந்தை ஆவார்.
மர்செல்லுஸ் (இலத்தீன்: Marcellus) என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.
நீண்ட இடைவெளி
திருத்தந்தை மர்செல்லீனுஸ் இறந்த வேளையில் கிறித்தவ சபை உரோமை மன்னனாகிய தியோக்ளேசியனால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டது. எனவே, அமைதி குறைந்த அக்காலத்தில் புதிய திருத்தந்தையாக மர்செல்லீனுஸ் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெயரில் குழப்பம்
சில பண்டைய ஏடுகள் முதலாம் மர்செல்லுஸ் என்பவரை, அவருக்கு முன் பதவியிலிருந்த மர்செல்லீனுஸ் என்னும் திருத்தந்தையோடு குழப்பிவிட்டன. இதனால் மர்செல்லுஸ் ஆட்சிக்காலம் நவம்பர்/டிசம்பர் 306 முதல் சனவரி 16, 308 வரை என்றொரு கணிப்பும், அவர் மே/சூன் 308இலிருந்து சனவரி 16, 309 வரை திருத்தந்தையாக ஆட்சிசெய்தார் என்று மற்றொரு கணிப்பும் உள்ளன.
திருத்தந்தையாகத் தேர்வு
மர்செல்லீனுஸ் என்னும் திருத்தந்தை இறந்தபோது கிறித்தவ திருச்சபை துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அதைத் துன்புறுத்திய தியோக்ளேசியன் மன்னன் 305இல் பதவி நீங்கினார். 306 அக்டோபரில் மாக்சேன்சியுசு என்பவர் உரோமை மன்னரானார். திருச்சபையைத் துன்புறுத்திய செயலும் ஓரளவு குறைந்தது. ஆயினும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கும் வகையில் அமைதி திரும்பியது.
வத்திக்கானிலிருந்து வெளியாகின்ற "திருத்தந்தை ஆண்டுக் குறிப்புகள்" (Annuario Pontificio) என்னும் ஏட்டின்படி, மர்செல்லுஸ் மே 27/சூன் 26, 308ஆம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2];[3]
திருச்சபையை விட்டு விலகியோரை மீண்டும் ஏற்றல்
அந்த வேளையில் கிறித்தவர்கள் ஒன்றுகூடிய இடங்கள் பறிக்கப்பட்டிருந்தன; அவர்களுடைய கல்லறைத் தோட்டங்கள் அகற்றப்பட்டிருந்தன. திருச்சபையின் வழக்கமான வாழ்க்கைமுறை குலைக்கப்பட்டிருந்தது.
திருச்சபைக்கு உள்ளேயும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. தியோக்ளேசியன் திருச்சபையைத் துன்புறுத்திய காலத்தில் சாவுக்கு அஞ்சிய பல கிறித்தவர்கள் தங்கள் மதத்தை மறுதலித்திருந்தனர். அவர்கள் மனம் வருந்தி மீண்டும் திருச்சபையோடு சேர விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் மன வருத்தம் தெரிவிக்காவிட்டாலும் அவர்களை மீண்டும் ஏற்கவேண்டும் என்று ஒரு கலகக்காரர் வற்புறுத்தி வன்முறையிலும் இறங்கினார்.
ஆனால் திருத்தந்தை மர்செல்லுஸ் திருச்சபையை விட்டுச் சென்றவர்களைத் திரும்பவும் ஏற்க மிகக் கடுமையான நிபந்தனைகள் விதித்தார். இவ்வாறு நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட மாகென்சியுஸ் மன்னன் திருத்தந்தையை உரோமையிலிருந்து நாடுகடத்தினான்.
திருச்சபைச் சீரமைப்பு
திருத்தந்தையர் நூல் என்னும் பண்டைய ஏட்டின்படி, மர்செல்லுஸ். திருச்சபையின் நிர்வாகத்தை 25 மாவட்டங்களாகப் பிரித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மூப்பரைத் தலைவராக ஆக்கினார். பொது நோன்புகளைக் கடைப்பிடிப்பது பற்றி வழிமுறைகள் கொடுத்து, மக்களுக்குத் திருமுழுக்கு வழங்குவது மூப்பரின் பொறுப்பு. அவர் இறந்தோரை அடக்கம் செய்வதோடு, மறைச்சாட்சிகளாக உயிர்துறந்தோரின் நினைவுக் கொண்டாட்டத்துக்கும் ஏற்பாடு செய்யும் பொறுப்புக் கொண்டிருந்தார்.
புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்துக்கு எதிர்ப்புறத்தில், சலாரியா சாலை ஓரத்தில் புதியதொரு கல்லறைத் தோட்டம் அமைக்க மர்செல்லுஸ் ஏற்பாடு செய்தார்.[4]
இறப்பும் திருவிழாவும்
மர்செல்லுஸ் மாக்சென்சியுஸ் மன்னனால் வெளியேற்றப்பட்ட சில மாதங்களுக்குள் இறந்தார். அவருடைய திருவிழா சனவரி 16ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அது அவர் இறந்த நாளா, அல்லது அவர் நாடுகடத்தப்பட்டு இறந்த இடத்திலிருந்து அவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் கல்லறையில் முறையாக அடக்கம் செய்யப்பட்ட நாளா என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. அவருடைய உடல் புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: "Pope Marcellus I". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.