முதலாம் அர்பன் (திருத்தந்தை)

முதலாம் அர்பன்
Urban I
17ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்222
ஆட்சி முடிவு230
முன்னிருந்தவர்முதலாம் கலிஸ்டஸ்
பின்வந்தவர்போன்தியன்
பிற தகவல்கள்
இயற்பெயர்அர்பன்
பிறப்புதெரியவில்லை;
உரோமை, உரோமைப் பேரரசு
இறப்புமே 19, 230
உரோமை, உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாமே 25
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை முதலாம் அர்பன் (Pope Urban I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 222இலிருந்து 230 மே 19ஆம் நாள்வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ் ஆவார். திருத்தந்தை முதலாம் அர்பன் கத்தோலிக்க திருச்சபையின் 17ஆம் திருத்தந்தை ஆவார். இவரது திருவிழா மே 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

திருத்தந்தை அர்பன் உரோமை நகரத்தில் பிறந்தவர். அவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ் என்பவரைப் போல இவரும் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டது. ஆயினும், அண்மைக் காலத்தில் கிடைத்த வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அர்பன் கொலைசெய்யப்படவில்லை என்றும், இயல்பான முறையிலேயே இறந்தார் என்றும் தெரிகிறது.

திருத்தந்தை அர்பன் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும், அவர் ஆட்சி செய்த காலம் யாதென்று உறுதியாகத் தெரிகிறது. அதற்கு இரு முக்கிய ஆதாரங்கள் உள்ளன. பண்டைக்கால திருச்சபை வரலாற்று ஆசிரியர் யூசேபியஸ் எழுதிய நூலில் திருத்தந்தை அர்பன் பற்றிய குறிப்பு உள்ளது. மேலும் புனித கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை அர்பன் அடக்கம் செய்யப்பட்டது குறித்து ஒரு கல்வெட்டு உள்ளது.

உரோமை மன்னர் எலகாபலுஸ் (Elagabalus) கொலைசெய்யப்பட்ட ஆண்டில் திருத்தந்தை அர்பன் திருச்சபையின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். உரோமை மன்னர் அலெக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus)என்பவரின் ஆட்சிக் காலத்தில் திருத்தந்தை அர்பனும் பணிப்பொறுப்பில் இருந்தார். மன்னர் செவேருஸ் திருச்சபையைத் துன்புறுத்தவில்லை. எனவே, திருத்தந்தை அர்பனின் ஆட்சிக்காலத்தில் திருச்சபை அமைதியில் செயல்பட இயன்றது.

அர்பன் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழித் திருச்சபையாலும் புனிதராகப் போற்றப்படுகிறார்.

உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் அர்பனின் எதிரிகளுள் ஒருவர். அவர் எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்டதால் திருச்சபையின் ஒற்றுமைக்கு ஊறு ஏற்பட்டது.

வரலாற்று ஆதாரம்

"அர்பன்" என்னும் பெயர் கொண்ட ஆயர் ஒருவரின் உடல் உரோமையில் இரண்டு வெவ்வேறு கல்லறைத் தோட்டங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி உள்ளது. அவற்றுள் எந்த கல்லறை திருத்தந்தை அர்பனுடையது என்பது குறித்து வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

திருத்தந்தை அர்பனுக்கு முன் ஆட்சியிலிருந்த திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ் ஆவார். அவருடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் இன்று "புனித கலிஸ்டஸ் கல்லறைப் புதைநிலம்" (Catacomb of St. Callixtus) என்று அழைக்கப்படுகின்றது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒன்பது திருத்தந்தையர் அப்புதைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் "திருத்தந்தையரின் சிறுகோவில்" என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை கலிஸ்டஸ் அவருடைய பெயர்கொண்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கப்படவில்லை.

பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த அக்கல்லறைத் தோட்டப் பகுதி 1849இல் ஜொவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி (Giovanni Battista de Rossi) என்னும் அகழ்வாய்வு வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கே Urbanos Episkopos என்னும் சொற்கள் அடங்கிய ஒரு கல்வெட்டை தெ ரோஸ்ஸி அடையாளம் கண்டார். அக்கல்வெட்டு குறிப்பது திருத்தந்தை அர்பனையே என்று அவர் முடிவு செய்தார்.

வேறு பல அறிஞர் கருத்துப்படி, அக்கல்லறை வேறொரு ஆயருடையது. திருத்தந்தையின் கல்லறை ஆப்பியா நெடுஞ்சாலையில் (Via Appia) உள்ள Coemetarium Praetextati என்னும் "ப்ரேடெக்ஸ்டாட்டி கல்லறைத் தோட்டத்தில்" "ஆயரும் துதியருமான அர்பன்" என்றொரு கல்வெட்டு குறிப்பதே என்று இந்த அறிஞர்கள் கருதுகின்றனர். இதுவே பெரும்பான்மைக் கருத்தாகவும் உள்ளது.

புனித அர்பனின் அடையாளங்கள்

புனித அர்பன் திராட்சைத் தோட்டம் பயிரிடுவோரின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். ஓவியங்களில் அவர் திருத்தந்தை உடைகளை அணிந்து, மகுடம் சூடி, கையில் தரையை நோக்கியிருக்கும் ஒரு வாளையும் திராட்சைக் கொடிகளையும் பிடித்திருப்பார்.

ஆதாரங்கள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

222–230
பின்னர்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!