பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்று நோய் (Colorectal cancer) என்பது பெருங்குடலின் பகுதிகளில் ஏற்படும் புற்று நோயைக் குறிக்கிறது. இதன் மற்றொரு பெயர் பெருங்குடல் புற்று நோய், அல்லது குடல் புற்று நோய் ஆகும். [1]இப்புற்றுநோய்க்கான காரணம், செல்களின் அசாதாரணமான வளர்ச்சியும் உடலின் மற்ற பகுதிகளை ஊடுருவிப் பரவக்கூடிய திறனும் ஆகும்.[2]
பெருங்குடல் புற்று நோய் வருவதற்கு, வாழ்க்கை முறைகளும், முதுமையடைவதும் பெரும்பாலான காரணங்களாக இருப்பினும், ஒரு சிறு எண்ணிக்கை நோயாளிகளுக்கு மரபணு மற்றும் மரபுவழி கோளாறுகளாலும் இந்நோய் ஏற்படுகிறது.[4][5]
குடற்திசு மாதிரியைக் கொண்டு குடலில் கட்டி உள்ளதா என்றறிய செய்யப்படும் சிக்மோய்டோஸ்கோபிச் சோதனை அல்லது கொலோனோஸ்கோபி வாயிலாக இப்புற்றுநோயைக் கண்டறியாலாம்.[3] அதனைத் தொடர்ந்து மருத்துவ இயல்நிலை படமாக்கல் செய்து நோய் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.[1] 50 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் குடல் புற்றுநோயிலிருந்து இறப்பதைத் தவிர்ப்பதற்கு புற்றுநோய் மருத்துவ சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.[6]
கொலோனோஸ்கோபி செய்யும் பொழுது கட்டிகள் அகற்றப்படுகிறது. ஆஸ்ப்ரின் மற்றும் ஸ்டீரோய்ட் அல்லாத அழற்சி மருந்துகள் ஆபத்தை குறைக்கின்றன.[4][7] எனினும் பக்க விளைவுகள் காரணமாக இவை பொதுப் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கபடுவதில்லை.[8]
மேலாண்மை, முன்கணிப்பு, நோய்த்தொற்று அறிவியல்
மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, வேதிச்சிகிச்சைமற்றும் இலக்குச் சிகிச்சை என சில கூட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[1] பெருங்குடல் சுவற்றில் மட்டுமே காணப்படும் புற்று நோய்களை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும், ஆயினும் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கும் புற்றுநோயைப் பொதுவாகப் பெரும்பாலும் குணப்படுத்த இயலாது.[1] எனினும் இது புற்றுநோயின் முற்றிய நிலை, புற்றுநோய்க் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடிதல், நோயாளியின் ஒட்டுமொத்த உடல் நிலை இவைகளைப் பொறுத்து ஐந்து ஆண்டுகள்[9] வரை உயிர்வாழ முடியும்.[3]
உலகளவில் மலக்குடல் புற்று நோய், மொத்தப் புற்று நோயாளிகளிடயே 10 % ஆக, மூன்றாவது இடத்தில் உள்ளது.[10] 2012-ல் புதிதாக மொத்தம் 140 லட்சம் நபர்கள் குடல் புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்தார்கள், மேலும் 69400 நபர்கள் இந்த நோயினால் இறந்தார்கள்.[10] முன்னேறிய நாடுகளில் இந்நோய்ப் பரவலாகக் காணப்படுகிறது. அங்கு 65% வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.[4] இந்த நோய் ஆண்களைவிடப் பெண்களிடயே குறைவாகவே உள்ளது.[4]