பகாங் மந்திரி பெசார், பகாங் மாநில சட்டமன்றத்தின் (Pahang State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
தற்போது பகாங் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் வான் ரொசிடி வான் இசுமாயில் (Wan Rosdy Wan Ismail). இவர் 22 நவம்பர் 2022 முதல் பகாங் மாநிலத்தின் மந்திரி பெசார் (முதல்வர்) பதவியை வகித்து வருகிறார்.[2]
நியமனம்
பகாங் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, பெர்லிஸ் இராஜா முதலில் மந்திரி பெசாரை மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.
பகாங் மந்திரி பெசார்இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் பகாங் சுல்தான் நியமிப்பார்.
மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் பகாங் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். பகாங் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
மாநில அரசாங்கம் தனது சட்டங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப் படுமானால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது பகாங் சுல்தானின் பொறுப்பு ஆகும். பகாங் சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருப்பார்.
ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராக பகாங் சுல்தான் நியமிப்பார்.
அதிகாரங்கள்
ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எடுக்கப்படுமானால், அரசாங்கப் பதவிகளில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.
தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்
மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்கப் பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.
பகாங் மந்திரி பெசார் பட்டியல்
1948-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான பகாங் மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[3][4]
↑இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.