முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா)[1], தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.[2]
ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.
அமைச்சரவை முதலமைச்சர்
மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.
முதலமைச்சர் நியமனம்
மாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கபப்டுகிறார். சட்டப்பேரவையில் எந்தக் கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அணியின் தலைவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிக்கிறார். எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப்பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் பதவியில் இருக்கலாம். முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும். பொதுவாக முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.
முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும்
மாநில நிருவாகத்தின் உண்மையான தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார். அவரின் பணிகள்
- அமைச்சரவையை அமைத்தல்
- அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது.
- கடமை தவறும் போது அமைச்சர்களைப் பதவி விலகக் கோருதல்
- ஆளுநர் அறிவிக்கையின் படி துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்தல்
- அமைச்சரவையின் தலைவராய் இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.
- ஆளுநர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே தொடர்பாளராக செயல்படுதல்
- பதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.
நாடுகள் சிலவற்றின் முதலமைச்சர்கள்
வெளியிணைப்புகள்
உசாத்துணை
- ↑ http://www.dcm.nt.gov.au/about_us/government_and_the_department
- ↑ "Malay Stats". Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2009-04-14.