துசுயந்த் சிங் (Dushyant Singh; பிறப்பு செப்டம்பர் 11,1973) ஓர் இந்திய அரசியல்வாதியும் தொழிலதிபரும் தோல்பூர் மாநிலத்தின் முன்னாள் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிங் தற்போது ஜாலாவார் பாரன் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றுகிறார். இவர் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார்.[2]
கல்வி
சிங் தேராதூனில் உள்ள கில்கிரேஞ்ச் ப்ரீபரேடரீ பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். துசுயந்த் சிங் தேராதூனில் உள்ள தூன் பள்ளிக் கல்வி பயின்றார். தில்லியில் உள்ள தூய இசுடீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவில் உள்ள ஜான்சன் & வேல்சு பல்கலைக்கழகத்தில் உணவக நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1][3]
தனிப்பட்ட வாழ்க்கை
தோல்பூர் சமசுதானத்தின் முன்னாள் ஆளும் குடும்பத்தின் தலைவராக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் வசுந்தரா ராஜே சிந்தியா இரண்டு முறை இராசத்தான் முதல்வராகவும், அடல் பிகாரி வாச்பாயின் மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் குவாலியர் மகாராஜா ஜீவாஜி ராவ் சிந்தியா மற்றும் ராஜமாதா விஜய ராஜே சிந்தியா ஆகியோரின் பேரனும், நாபாவின் கடைசி மகாராஜா பிரதாப் சிங் நாபா தந்தைவழி பேரனும் ஆவார்.
சிங், நேபாளத்தின் ராணா வம்சத்தைச் சேர்ந்த மகாராஜா ரஞ்சித் சிங் ஜூடோ மற்றும் கங்கா ராஜ்ய லட்சுமியின் மகளான சமந்தர் மாநிலத்தின் ஒரே இளவரசி நிகாரிகா ராஜேவை மணந்தார். நாய்களை நேசிப்பவர் என்று அறியப்படுகிறார். சதுரங்கத்திலும் ஆர்வம் கொண்ட இவர், பழங்காலப் புத்தகங்களைச் சேகரித்துவருகிறார். மேலும் நன்கு அறியப்பட்ட வனவிலங்கு ஆர்வலராகவும் உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
2003ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய பின்னர், சிங் தனது தாயார் மற்றும் பாட்டி விஜயராஜே சிந்தியா அடிச்சுவடுகளைப் பின்பற்றி பாஜகவில் சேர்ந்தார். இவர் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்று 2004ஆம் ஆண்டில் இராசத்தானில் உள்ள ஜாலாவார் பாரான் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009ஆம் ஆண்டில் காங்கிரசு அலை இருந்தபோதிலும், சிங் தனது இரண்டாவது மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இந்தக் காலகட்டத்தில், மேம்பட்ட சாலைகள், சிறந்த நகர அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் மூலம் தனது பிராந்தியத்திற்குச் செழிப்பைக் கொண்டுவர சிங் உதவினார்.
2014ஆம் ஆண்டில் சிங் தனது மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக மகத்தான வெற்றியைப் பெற்றார். 2019ஆம் ஆண்டில் சிங் தனது மக்களவை ஆசனத்தைத் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வென்றார். சிங் தனது பதவிக்காலத்தில் தொடருந்து மற்றும் ஜலாவரின் கோலானா வானூர்தி நிலையத்தை நிறுவ உதவியுள்ளார். மீண்டும் சிங் ஐந்தாவது முறையாக 2024 இந்தியப் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்