டேவிட் மிச்செல் |
---|
|
பிறப்பு | டேவிட் ஜேம்ஸ் ஸ்ருவர்ட் மிச்செல் 14 சூலை 1974 (1974-07-14) (அகவை 50) சலிஸ்பரி, வில்ட்சயர், இங்கிலாந்து |
---|
இருப்பிடம் | Belsize Park, லண்டன், இங்கிலாந்து |
---|
கல்வி | அபிங்டன் பாடசாலை |
---|
படித்த கல்வி நிறுவனங்கள் | பீட்டர்ஹவுஸ், கேம்பிரிட்ஜ் |
---|
பணி | |
---|
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது |
---|
வாழ்க்கைத் துணை | விக்டோரியா கொரென் மிச்செல் ( தி. 2012) |
---|
பிள்ளைகள் | 1 |
---|
|
டேவிட் ஜேம்ஸ் ஸ்ருவர்ட் மிச்செல் (பிறப்பு: 14 ஜூலை 1974)[2][3], ஓர் ஆங்கில நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் ரொபேட் வெப் உடன் இணைந்த மிச்செலும் வெப்பும் என்ற நகைச்சுவை இணையின் இருவரில் ஒருவராவார். இவர் 2009இல் பிரித்தானிய அகாதமியின் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார். சனல் 4 தொலைக்காட்சியில் 'பீப் ஷோ' என்ற நிகழ்ச்சியில் மார்க் கொரிகன் என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக இவ்விருது கிடைக்கப்பெற்றது. இந்த இணை 'புருய்சர்', 'த மிச்செல் அன்ட் வெப் சிற்றுவேசன்', 'தற் மிச்செல் அன்ட் வெப் சவுண்ட்' மற்றும் 'தற் மிச்செல் அன்ட் வெப் லுக்' போன்ற பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை எழுதி நடித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் 'கெற் எ மக்' என்ற விளம்பரத்தின் ஐக்கிய இராச்சியப் பதிப்பில் மிச்செலும் வெப்பும் நடித்துள்ளனர். இவர்களது முதலாவது திரைப்படமான 'மஜிசியன்ஸ்' 2007 இல் வெளிவந்தது.
ஆரம்ப கால வாழ்க்கை
இங்கிலாந்தின் வில்ற்சயரில் சலிஸ்பரி நகரில் இயன் டக்லஸ் மிச்செல் மற்றும் கதரீன் கிரே மிச்செல் (பிறப்பு: ஹியூஸ்) ஆகியோருக்கு மகனாக[2] டேவிட் மிச்செல் பிறந்தார். அப்போது அவர்கள் விடுதி முகாமையாளர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்தனர். 1977இல் டேவிட்டுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, விடுதி முகாமைத்துவத்தில் விரிவுரையாற்றவும் டேவிட்டைப் பார்த்துக்கொள்ளவுமாக அவர்கள் தமது பணியை விட்டுவிட்டனர்.[3] டேவிட் நேப்பியர் ஹவுஸ் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்றார்.[4]. டேவிட்டுக்கு ஏழரை வயதாக இருந்தபோது அவருக்கு டானியல் எனும் இளைய சகோதரன் பிறந்தார்.[4] பின்னர் அவர்களது குடும்பம் ஆக்சுபோர்டுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர் நியூ கொலிச் பாடசாலையில் கல்வி கற்றார். 13 வயதில் அவர் அபிங்டன் பாடசாலையில் சேர்ந்தார். ஆரம்பப் பாடசாலைகளில் முன்னணி மாணாக்கனாகத் திகழ்ந்த டேவிட் மிச்செல், இப்பாடசாலையில் பல புத்திசாலி மாணவர்கள் இருப்பதைக் கண்டு தனது கவனத்தை நாடகம் மற்றும் விவாதம் ஆகிய துறைகளில் செலுத்தினார்.[5] 1993இல் கேம்பிரிட்ஜில் உள்ள பீட்டர்ஹவுஸ் கல்லூரியில் இணைந்து நவீன வரலாறு கற்றார். அங்கு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புட்லைட்ஸ் நாடகக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் 1995-1996 கல்வியாண்டில் அதன் தலைவராகவும் ஆனார்.[6] 1993 இல் இந்த நாடகக் கழகத்தின் படைப்பான 'சிண்ட்ரெல்லா'வில் பணியாற்றிய போது அவர் ரொபேட் வெப்பைச் சந்தித்தார்.
தொழில் வாழ்க்கை
1995இல் டேவிட் மிச்செலும் வெப்பும் இணைந்து அணுவாயுதத்தால் உலகழிவு தொடர்பான ஒரு நாடகத்தில் பணியாற்றினர். கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அவர்கள் இருவருமாக, உலகின் மிகப்பெரிய காட்சிகள் விழாவான எடின்பரோ விழாவில் அளிக்கைகளை வழங்கத் தொடங்கினர். இதன் பயனாக புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர்களான அலெக்சாந்தர் ஆர்ம்ஸ்ட்ரோங் மற்றும் பென் மில்லர் ஆகியோருக்கு நகைச்சுவை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.[6] 2001இல் 'மிச்செல் அன்ட் வெப் சிற்றுவேசன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தனர். 2003இல் தொடர்மாடிக் குடியிருப்பில் நண்பர்களாக வாழும் மார்க் கொரிகன் என்ற பாத்திரத்தில் மிச்செலும் ஜெரமி உஸ்பேர்ண் என்ற பாத்திரத்தில் வெப்பும் நடிக்கும் 'பீப் ஷோ' தொடரில் நடித்தனர்.[7] இது சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2007இல் பிரித்தானிய நகைச்சுவை விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை இவர் பெற்றார். 2009இல் பிரித்தானிய அகாதமியின் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார்.[8]
மேற்கோள்கள்