ஜேம்ஸ் எட்வர்ட் சாள்ஸ் பிராங்ளின் (James Edward Charles Franklin, பிறப்பு: சனவரி 7, 1980), நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இடதுகை துடுப்பாளரும், இடதுகை விரைவு-மித விரைவு பந்துவீச்சாளருமாவார்.[1]
அக்டோபர் 20, 2004 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஹேட்ரிக் இலக்குகள் வீழ்த்திய இரண்டாவது நியூசிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.
சர்வதேச போட்டிகள்
2001 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச போட்டியை தனது 20 ஆவது வயதில் விளையாடினார்.ஓக்லாந்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] நியூசிலாந்து அணியின் முதன்மைப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் முஷ்தாக் அகமது மற்றும் முகமது யூசுப் ஆகியோரின் இலக்கினைக் கைப்பற்றினார்.
பின் நாட்வெஸ்ட்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதுபெற்றார். பின் 2004-2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் இவர் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். பின் மார்ச் 2005 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் 3 ஆவது போட்டியில் 119 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் வெலிங்டன் நகரில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 53 ஓட்டங்கள் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். 2006 ஆம் ஆண்டில் கிளாமோர்கன் அணிக்காக மாகாணப் போட்டிகளில் விளையாடினார்.
ஏப்ரல் 29, 2006 இல் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். இவர் முதல்தரத் துடுப்பாட்டங்களில் இருமுறை இருநூறுகள் அடித்துள்ளார். 2005-2006 ஆம் ஆண்டுகளில் ஓக்லாந்து மாகாண அணிக்கு எதிரான போட்டியில் 208 ஓட்டங்கள் எடுத்தார்.பின் இதே அணிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டில் 219 ஓட்டங்கள் எடுத்தார்.2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் முதல் பந்தில் இலக்கினை வீழ்த்தி சாதனை படைத்தார்.[2]
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை 100,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளிலிறுதிவரை ஆட்டமிழக்காமல் 45* ஓட்டக்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இறுதி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது லட்சுமிபதி பாலாஜி வீசிய ஓவரில் முதல் நான்கு பந்துகளில் 4 நான்குகளை எடுத்தார். பின் கடைசிப் பந்தில் அம்பாதி ராயுடு ஆறு ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.