எம். பி. சீனிவாசன் M. B. Sreenivasan |
---|
|
பிறப்பு | மானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீநிவாசன் (1925-09-19)செப்டம்பர் 19, 1925 சித்தூர், ஆந்திரப் பிரதேசம் |
---|
இறப்பு | மார்ச்சு 9, 1988(1988-03-09) (அகவை 62) இலட்சத்தீவுகள் |
---|
பணி | இசையமைப்பாளர் |
---|
வாழ்க்கைத் துணை | சாகிதா |
---|
வலைத்தளம் |
---|
[1] |
எம். பி. சீனிவாசன் (M. B. Sreenivasan, 19 செப்டம்பர் 1925 – 9 மார்ச் 1988), தமிழ், மற்றும் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர். பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஒரு மார்க்சியவாதி. திரையுலகிலும் கம்யூனிஸ்ட் இயக்க வட்டாரத்திலும் அவர் "எம்.பி.எஸ்" என்று பிரியத்துடன் அழைக்கப்பெற்றார். 1962இல் வெளிவந்த "கால்படுகள்" என்ற மலையாளப் படத்திற்காக இசையமைத்ததே இவரது முதல் பாடல்.
வாழ்க்கைக் குறிப்பு
எம்.பி.எஸ், 1925இல் பாலகிருஷ்ணன் என்ற என்பவருக்கு மகனாக பிறந்தார். சங்கீத வித்துவானாகிய தாயிடமிருந்து இசையைக் கற்றார். கம்யூனிஸ்ட் தலைவராகிய தன் சிறிய தந்தையிடமிருந்து அரசியல் கற்றார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர் சீனிவாசன். அப்போது விடுதலைப் போராட்டப் பொதுக் கூட்டங்களில் பாரதியார் பாடல்களைப் பாடி வந்தார். தமிழகத்தில் கம்யூனிச சார்புள்ள மதராஸ் மாணவர் அமைப்பு தோன்றியது. சீனிவாசன் இந்த அமைப்பில் இணைந்தார். மாணவர் இயக்கப் பணிகளுக்காக இந்தியா முழுக்க அலைந்து திரிந்த சீனிவாசன் அதே இலட்சியத்துக்காகக் கலைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சஹிதா என்ற முஸ்லிம் பெண்ணைச் சந்தித்துத் திருமணம் புரிந்தார். சில ஆண்டுகள் சீனிவாசன் முறையாக கருநாடக இசையும் பயின்றார். 1959 இல் முழு நேர இசை அமைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார்[1].
கலைப் பயணம்
கேரளா கய்யூர் தியாகிகளின் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத் தயாரித்த "மீனமாசத்திலெ சூரியன்" என்கிற திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைப்பதற்காகச் சென்று அவர் முதலில் கேட்டுக்கொண்டது தியாகப்பூமியான கய்யூரை நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்பது தான். பின் அங்கு சென்று மக்களைச் சந்தித்து, அந்தக் கிராமத்தின் கலாச்சாரச் சூழலைப் புரிந்து கொண்ட பிறகு தான் கய்யூர் தியாகிகளைப் பற்றிய திரைப்படதத்திற்கு இசை அமைத்தார். வங்காளத்தில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு பஞ்ச நிவாரண நிதி திரட்டுவதற்காக வந்ததிலிருந்து கலைக்குழு ஒன்று 1944இல் பம்பாய்க்கு அழைக்கப்பட்டது. அது பம்பாயில் இப்டா (IPTA) எனும் இந்திய மக்கள் நாடக மன்றம் கலைக்குழு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இப்டா கம்யூனிஸ்ட் தலைமையின் வழிகாட்டலில் செயல்பட்டது. இவர் இப்டாவில் தீவிரமாக ஈடுபட்டு சென்னையில் 'மதராஸ் இளைஞர் சேர்ந்திசைக் குழு' வை உருவாக்கினார்.
பல பொதுவுடமைத் தோழர்களைப் பங்குதாரர்களாக கொண்டு உருவாக்கப்பட்ட குமரி பிலிம்ஸ் தயாரித்த படம் பாதை தெரியுது பார். இத்திரைப்படத்துக்கு சீனிவாசன் இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம். இத்திரைப்படத்தின் மறக்க முடியாத பாடல்கள் ஜெயகாந்தன் எழுதிய தென்னங்கீற்று ஊஞ்சலிலே, மற்றும் சின்னச் சின்ன மூக்குத்தியாம் போன்ற பாடல்கள் சீனிவாசனின் இசையில் புகழ் பெற்றன. இத்திரைப்படம் 1960 இல் வெளி வந்தது[1].
இதன் பின்னர் மலையாளத் திரைப்படங்களில் சீனிவாசன் இசை அமைக்கத் தொடங்கினார். கேரள அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றார் சீனிவாசன்.
பிரபல எழுத்தாளர் ஜானகிராமன் எழுதித் தயாரித்த தாகம் திரைப்படத்துக்கு சீனிவாசன் இசையமைத்தார். 1974 இல் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன் நடித்திருந்தார். 1975 இல் கே. விஜயன் இயக்கிய புதுவெள்ளம் திரைப்படத்துக்கு இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற துளித் துளி மழைத் துளி என்ற பாடல் புகழ் பெற்றது. சீனிவாசன் தமிழில் ஐந்து அல்லது ஆறு படங்களுக்கே இசையமைத்திருந்தார்[1].
திருமணம்
இப்டாவில் (IPTA) உத்வேகத்துடன் செயல்படும் உறுப்பினராக இருந்த சாகித் கிச்சலுவைத் திருமணம் செய்து கொண்டார். சாகித் பிரித்தானிய அரசின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் டாக்டர் சைபுதின் கிச்சலுவின் மகள் ஆவார்.
விருதுகள்
கேரள திரைப்பட விருது:
- 1973 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்
- 1978 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர் ('பந்தனம்')
- 1979 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்
- 1981 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 மோனா, திரையிசை மேதைகள் - எம்.பி.சீனிவாசன், வீரகேசரி, சூன் 5, 2011
வெளி இணைப்புகள்