உலக சதுரங்க வாகை 2013 (World Chess Championship 2013) என்பது 2012 ஆம் ஆண்டின் உலக வாகையாளர் விசுவநாதன் ஆனந்த்துக்கும், உலகத் தர வரிசையில் முதலாவதாக உள்ள மாக்னசு கார்ல்சனுக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டுக்கான உலக வாகையாளரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற போட்டித் தொடராகும். இப்போட்டித் தொடர் 2013 நவம்பர் 9 முதல் 28 வரை இந்தியாவில்சென்னை நகரில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஆதரவில் நடைபெற்றது. 12 சுற்றுகளைக் கொண்ட இத்தொடரில் கார்ல்சன் 6½–3½ என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று 16வது உலக சதுரங்க வாகையாளரானார்.[2]
2013 இறுதிப்போட்டி சென்னை நகர் நடத்தும் என 2013 ஏப்ரல் 8 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அத்துடன் இந்நிகழ்வுக்கு 290,000,000 இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்படும் என அவர் அறிவித்தார்.[3] இதனை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு 2013 மே 5 இல் உறுதிப்படுத்தியது.[4] இவ்விறுதிச் சுற்றின் தொடக்க விழாவை 2013 நவம்பர் 7 இல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.[5] இறுதிப் போட்டிகள் சென்னையில் உள்ள ரீஜன்சி விடுதியில் 2013 நவம்பர் 9 இல் ஆரம்பமாயின.[6]
போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் சுற்று
நடப்பு உலக சதுரங்க வாகையாளர் விசுவநாதன் ஆனந்துடன் இறுதிச் சுற்றில் போட்டியிடுபவரைத் தேர்தெடுப்பதற்கான சுற்றுப் போட்டி 2013 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இம்முறை 50 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக போட்டியாளர் இரட்டை தொடர் சுழல்முறைப் போட்டி மூலம் தேர்தெடுக்கப்பட்டார்.[7] இச்சுற்றுப் போட்டிகள் இலண்டனில் 2013 மார்ச் 15 முதல் ஏப்ரல் 1 வரை இடம்பெற்றது.[8]
முடிவுகள்
2013 உலக சதுரங்கப் போட்டிக்கான இறுதிப் போட்டியாளர்களின் இறுதிச் சுற்று வரிசை[9]
2013 இறுதிச் சுற்றுக்கு முன்னர் 2005 முதல் 18 சூன் 2013 வரை, ஆனந்த், கார்ல்சன் இருவரும் 29 (மரபார்ந்த) ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இவற்றில் ஆனந்த் ஆறு ஆட்டங்களிலும், கார்ல்சன் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். 20 ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்று முடிந்தன.[11]
ஆனந்த், கார்ல்சன் இருவருக்கும் இடையேயான ஆட்டங்கள் சென்னை ரீஜன்சி விடுதியில்,[13] 2013 நவம்பர் 9 முதல் 28 வரை இடம்பெற்றன.[14][15] 12 மரபார்ந்த ஆட்டங்களும் மாலை 3 மணிக்கு உள்ளூர் நேரம் (09:30 ஒசநே) ஆரம்பமாயின. 2, 4, 6, 8, 10 மற்றும் 11 ஆம் ஆட்டங்களின் பின்னர் ஓய்வு நாட்கள் தரப்பட்டன. 6.5 புள்ளிகள் முதலாவதாகப் பெறும் போட்டியாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். நவம்பர் 26 இல் நடைபெறும் 12வது ஆட்டத்தில் இருவரும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால், 28 ஆம் நாள் கூடுதல் ஆட்டம் (tie-break) நடைபெறும்.[16]
முதல் 40 நகர்வுகளுக்கு ஒருவர் 120 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம், தொடர்ந்து 41-60 வரையான நகர்வுகளுக்கு ஒருவர் 60 நிமிடங்கள் வரியும், ஆட்டத்தை முடிப்பதற்கு ஒருவர் மேலும் 15 நிமிடங்கள் வரை (ஒரு நகர்வுக்கு 30 செக்கன்கள்) எடுத்துக் கொள்ளலாம்.[16]
இவ்விறுதிச் சுற்றுப் போட்டியின் வெற்றியாளர் கார்ல்சன் 1.53 மில்லியன் டாலர் பணப்பரிசும், ஆனந்த் 1.02 மில்லியன் டாலர் பணப்பரிசும் பெற்றுக் கொண்டனர்.[17]
முதலாவது ஆட்டம் 2013 நவம்பர் 9 இல் நடைபெற்றது. கார்ல்சன் வெள்ளைக் காய்களுடன் ஆடத் தொடங்கினார். கார்ல்சன் ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க காய் நிலையை ஒரே இடத்தில் வருமாறு மூன்று முறை நகர்த்த ஆனந்துக்கு வாய்ப்பளித்தார். இந்த வாய்ப்பை ஆனந்த் பயன்படுத்தியதை அடுத்து, முதல் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.[18]
இரண்டாவது ஆட்டம் 2013 நவம்பர் 10 இல் நடைபெற்றது. ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் e4 என்ற நகர்வுடன் ஆட்டத்தைத் தொடக்கினார். ஆனந்த் தனது 14வது நகர்வில் கோட்டை கட்டினார். தொடர்ந்து நடுப்பகுதியில் குதிரைகள் மாற்றீடு செய்யப்பட்டன. கார்ல்சன் தனது அரசியை d5 நோக்கி முன்னேற்றினார். இதன் மூலம் அரசிகள் மாற்றீடு செய்யத்தக்க நிலைக்கு வந்தன. ஆச்சரியத்தக்க வகையில், 18.Qg4 இற்கு அரசியைக் கொண்டு செல்லாமல் மாற்றீட்டை ஆனந்த் ஏற்றார். இதன் மூலம் ஆட்டம் சமனாகியது.[19]
நான்காம் நாள் ஆட்டம் நவம்பர் 14 ஆம் நாடள் நடைபெற்றது. ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் ஆட ஆரம்பித்தார். கார்ல்சன் பெர்லின் தற்காப்பு வகையில் விளையாடினார். 18வது நகர்வில் கார்ல்சன் ஒரு காலாளை எடுத்துக் கொண்டு ஆட்டம் முழுவது ஒரு காலாளை மேலதிகமாக வைத்திருந்தார். ஆனாலும், ஆனந்த் சமமான நிலைக்கு ஆட்டத்தைக் கொன்டு வர முடிந்தது.[21]
இந்த வெற்றியுடன் கார்ல்சன் 3–2 என்ற வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். ஆனந்தின் 45...Rc1+ என்ற நகர்வு தோல்வியை நிர்ணயித்த தவறாகக் கருதப்படுகிறது.,[22] இந்த நகர்வின் பின்னர் வெள்ளைக் காய்கள், அமைச்சர்களை மாற்றீடு செய்து a3-காலாளைத் தக்க வைத்துக்கொண்டது.[23]
திடமாக ஓர் ஆரம்பத்தை அடுத்து, பல மாற்றீடுகள் இடம்பெற்றன. இது சமனான ஆட்ட நிலைக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். 38.Qg3 நகர்வில் ஆனந்த் கையாள் ஒன்றைக் கொடுத்து விளையாட முற்பட்டார். 44.h5 இல் கார்ல்சனின் அரசனைக் காக்கும் கையாள்களை விலக்க இன்னும் ஒரு கையாளைக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. கார்ல்சன் தொடர்ந்து விளையாடி தனது f-கையாளைக் காப்பதற்காக தனது மேலதிக இரண்டு கையாள்களையும் இழந்தார். 60.Ra4 மிகத்தவறான நகர்வாக சதுரங்க விற்பன்னர்களால் கணிக்கப்படுகிறது. (60.b4 நகர்வு ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம்).[24] மேலும் சில நகர்வுகளின் பின்னர் ஆனந்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்.[25]
ஆரம்பத்தில், ஆனந்த் தனது தேரை ஒரு குதிரைக்காக விட்டுக் கொடுத்தார். கார்ல்சன் திடமாக விளையாடி, 30வது நகர்வுகளில் இருவரும் மீள்நகர்வுகளை ஏற்படுத்தியதிம் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.[26]
இறுதி சுற்றில் முதற்தடவையாக ஆனந்த் 1.e4 உடன் ஆட ஆரம்பித்தார். பின்னர் ஆட்டம் பெர்லின் தற்காப்பாக உருவெடுத்தது. இதன் போது சில காய்களை அவரால் பரிமாற்றம் செய்ய முடிந்தது. 33வது நகர்வில் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.[27]
ஆனந்த் சிசிலியன் தற்காப்புடன் விளையாடினார். ஆனந்தின் 28...Qg5 வது தப்பான நகர்வு, கார்ல்சனை 29.e5 என்ற நகர்வின் மூலம் கறுப்பின் d6-காலாளுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. இந்த அழுத்தம் 30.Nc3, 30.Ng3,ஆல்லது 30.b4 மூலம் வெள்ளிக் காய்கள் வெற்றியடைந்திருக்க முடியும். ஆனால் கார்ல்சன் 30.exd6 என விளையாடியதில் கறுப்புக் காய்களுக்கு இந்த அழுத்தம் நீங்கியது.[28] ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இந்த சமனான ஆட்டத்தின் மூலம், கார்ல்சன் 6½–3½ என்ற புள்ளிக் கணக்கில் இறுதிச் சுற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, 16வது உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.[29]