இராணுவ அதிகாரிகள் கல்லூரி (The Defence Services Staff College (DSSC) இந்தியாவின் முப்படை அதிகாரிகளின் கூட்டுப் பயிற்சி நிறுவனம் ஆகும்.
இது இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் துணை இராணுவப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள்[2] மற்றும் இந்திய ஆட்சிப் பணி மற்றும் நட்பு வெளிநாடுகளில் இருந்து வரும் இராணுவ அதிகாரிகளுக்கு உயர் இராணுவக் கல்வி வழங்குகிறது. 1990 முதல் இக்கல்லூரி பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுநிலைப் பட்டம், முதுதத்துவமாணி மற்றும் முனைவர் பட்டங்கள் வழங்குவதற்காக, சென்னை பல்கலைகழகத்துடன் இணைந்துள்ளது.[3]
பிரித்தானிய இந்தியாவின் மிகப் பழமையான உயர் இராணுவப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான இது 1905-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணம், நாசிக் மாவட்டம், தியோலாலியில் துவக்கப்பட்டது. பின்னர் இக்கல்லூரியை 1907-இல் பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இக்கல்லூரி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், வெல்லிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் செயல்படுகிறது.[4]
இந்திய இராணுவத்தின் ஒரு லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரியே இக்கல்லூரியின் கட்டளை அதிகாரி ஆவார்.[5]