கேப்டன் அமரிந்தர் சிங் (பிறப்பு: மார்ச்சு 11, 1942) பஞ்சாபைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். முன்னாள் பாட்டியாலா இராச்சியத்தைச் சேர்ந்த இவர் பஞ்சாபின் முதலமைச்சராகப் பணிபுரிந்துள்ளார்.[1] 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் பெருந்தலைவரான அருண் ஜெட்லியைத் தோற்கடித்து அமிர்தசரசு இல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் 2002 முதல் 2007 முடிய பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் இரண்டாம் முறையாக 16 மார்ச் 2017 அன்று மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-இல் காங்கிரசு கட்சி மேலிடத்தில் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவி விலகல் கடிதத்தை, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் 18 செப்டம்பர் 2021 அன்று கொடுத்தார்.[2][3]
பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி நிறுவுதல்
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக, அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[4] பின் 2 நவம்பர் 2021 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி 2 நவம்பர் 2021 அன்று பஞ்சாப் லோக் காங்கிரஸ் அரசியல் கட்சியை நிறுவினார்.[5][6]
தனி வாழ்க்கை
அமரிந்தர் சிங் புலிகான் மரபுவழிவந்த பாட்டியாலா அரசப் பரம்பரையில் மகாராசா யாதவேந்திர சிங்கிற்கும் மகாராணி மொகீந்தர் கவுருக்கும் மகனாகப் பிறந்தார்.[7] தேராதூனில் உள்ள தூன் பள்ளியில் சேர்வதற்கு[8] முன்னதாக வெல்காம் பாய்சுப் பள்ளியிலும் சனாவர் இலாரன்சு பள்ளியிலும் கல்வியைத் துவக்கினார்.[9] இவருக்கு ரனீந்தர் சிங் என்ற மகனும் ஜெய் இந்தர் கவுர் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி பிரீநீத் கவுர் 2009-14 காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பாற்றி உள்ளார்.
இவரது அக்காள் எமீந்தர் கவுர் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கே. நட்வர் சிங்கைத் திருமணம் செய்துள்ளார். முன்னாள் நடுவண் காவல்பணி அலுவலரும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சிம்ரன்ஜித் சிங் மான் இவருக்கு உறவினர் ஆவார்.
மேற்சான்றுகள்