வெர்சாய் ஒப்பந்தம்(Treaty of Versailles) முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் செருமனி மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணி சக்திகளுக்கு இடையேயான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆசுத்திரிய மன்னனின் மகனான பிரான்சு பேர்டினண்ட் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1919 ஆம் ஆண்டு சூன் 28 அன்று பிரான்சிலுள்ள வெர்சாயில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. முதலாம் உலகப் போரில் செருமனிக்கு ஆதரவாகப் போரிட்ட மற்ற மைய சக்திகள் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன [1].1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு சமரச ஒப்பந்தம் உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயினும், பாரிசு அமைதி மாநாட்டில் இடம்பெற்ற சமாதான பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தன. உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தால் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் இவ்வொப்பந்தம் பதிவு செய்யப்பட்டது.
செருமனியும் அதன் கூட்டணியிலிருந்த நாடுகளும் போர்காலத்தில் ஏற்படுத்திய அனைத்து நட்டம் மற்றும் இழப்புகளுக்கு செருமனி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல விதிமுறைகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான விதிமுறையாகும். மைய சக்தியில் இடம்பெற்றிருந்த பிற உறுப்பினர்கள் இதுபோன்ற விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தனர். விதிப்பிரிவு 231 என்ற இச்சட்டப்பிரிவு பின்னாளில் போர் குற்ற உட்பிரிவு என்று அழைக்கப்பட்டது. செருமனி ஆயுதங்களைக் களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு அவர்களுக்குரிய நிலப் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், நட்புறவு நாடுகளாக உருவான சில நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செருமனியை வலியுறுத்தியது. 1921 ஆம் ஆண்டில் இந்த இழப்புக்களின் மொத்த செலவினத் தொகை 132 பில்லியன் மார்க்குகளுக்கு (அப்போதைய அமெரிக்கமதிப்பு $ 31.4 பில்லியன் அல்லது 6.6 பில்லியன் பவுண்டுகள் ஆகும். தற்போதைய மதிப்பு அமெரிக்க டாலர் 442 பில்லியன் அல்லது 2017 இல் இங்கிலாந்தின் 284 பில்லியன்) சமமானதாகும். ஒப்பந்தம் மிகவும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறது என்று அந்த நேரத்தில் இருந்த பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக பாரிசு அமைதி மாநாட்டிற்காக நியமிக்கப்பட்ட பிரித்தானிய பிரதிநிதியான யான் மேனார்டு கெய்ன்சு கணித்துக் கூறினார். ஒப்பந்தம் வலியுறுத்தும் அமைதியை மிருகத்தனமான அமைதி என்று அவ்வல்லுநர்கள் கருதினர். மற்றும் கேட்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு மிகவும் அதிகமானது என்றும் எதிர்பார்த்த அமைதிக்கு நேரெதிரான விளைவுகளை அளிக்கிறது என்றும் கூறினர். பல நாடுகளிலிருந்தும் சரித்திராசிரியர்களும் பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டனர். மறுபுறம், பிரஞ்சு மார்சல் பெர்டினாண்ட் போச் போன்ற நேச நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் செர்மனியை மிகவும் மென்மையாக நடத்துவதாகக் கருதி உடன்படிக்கையை விமர்சித்தனர்.
இத்தகைய போட்டிகளின் முடிவில் சிலசமயங்களில் வெற்றி பெற்றவர்களிடையே காணப்படும் முரண்பாடான இலக்குகளால் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாத ஒரு சமரசம் தோன்றியிருக்கும்:செருமனி சமாதானத்தையோ நட்பையோ விரும்பவில்லை ஆனால் அது நிரந்தரமாக பலவீனமடைந்தது. ஒப்பந்தத்தினால் எழுந்த பிரச்சினைகள் சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட லொகார்னோ உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்தன. இது செருமனிக்கும் மற்ற ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவியது. இழப்பீடுகள் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய மறுபரிசீலனைக்காக டாவசு திட்டம் என்ற புதியதிட்டம் வகுக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற லொசான் மாநாட்டில் இழப்பீடுகளை அளித்தல் காலவரையற்று தள்ளிவைக்கப்பட்டது.
இது பெரும்பாலும் "வெர்சாயில் மாநாடு" என்று குறிப்பிடப்பட்டாலும், ஒப்பந்தத்தின் உண்மையான கையெழுத்திடல் மட்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் நடந்தது. பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் பாரிசில் அனைத்துலக மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பெரிய நான்கு கூட்டங்களாக நிகழ்ந்தன.
முதல் உலகப்போர்
1914 முதல் 1918 வரை முதல் உலகப்போர் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டப் பகுதிகளில் நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்சு, உருசியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆசுத்திரியா, அங்கேரி, செருமனி, இத்தாலி போன்ற நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று சண்டையிட்டன. போரின் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்த காரணத்தால் போர் வலயங்களுக்கு அப்பால் உள்ள நாடுகள் அனைத்துலக வர்த்தகம், நிதி மற்றும் இராசாங்க அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டன [2]. 1917 ஆம் ஆண்டு உருசிய பேரரசிற்குள் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. உயர் அதிகாரம் கொண்ட பேரரசின் நிலைகுலைவுக்கு வழிவகுத்தது, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்சிவிக் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்தது [3].
பதினான்கு அம்சங்கள்
பிரான்சு மற்றும் பிரிட்டனுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வியாபார கப்பல்களுக்கு எதிராக செருமன் நீர்மூழ்கிக் கப்பல் போரிட்டது. இதனால் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான ஆர்.எம்.எசு, லுசித்தானியாவும், 128 அமெரிக்கர்களும் நீரில் மூழ்கினர். அமெரிக்காவிற்கு எதிராக யுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செருமானியப் பேரரசில் இருந்து மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட இரகசிய செய்தியும் இடைமறிக்கப்பட்டது. இத்தகைய காரணங்களால் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று அமெரிக்கா மத்திய சக்திகளுக்கு எதிரான போரில் நுழைந்தது. கூட்டணி சக்திகளுக்கிடையே இருந்த இரகசிய உடன்படிக்கைகளை போல்செவிக் வெளியிட்டதற்குப் பின்னர், தேசியவாத முரண்பாடுகள் மற்றும் இலட்சியம் ஆகியவற்றிலிருந்து போரை அகற்றுவது அமெரிக்காவின் போருக்கான நோக்கமாக இருந்தது. இந்த உடன்படிக்கைகளின் இருப்பு நேச நாடுகளின் கோரிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கில் இருப்பதாக உணர்த்தியது. செருமனி இதே விருப்பத்துடன் செயல்படும் ஒரே சக்தியாக இருந்தது என்றும் கருதப்பட்டது [4].
1918 ஆம் ஆண்டு சனவர் 8 இல், அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் பதினான்கு அம்சங்கள் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். சுதந்திர வர்த்தகம், வெளிப்படையான ஒப்பந்தங்கள், மக்களாட்சி மற்றும் சுயநிர்ணய கொள்கை ஆகியவற்றை இச்சொற்பொழிவு கோடிட்டுக் காட்டியது. மேலும், இது போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் விடுத்தது. சர்வதேச அளவில் ஆயுதக் குறைப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலிருந்து மத்திய சக்திகளை வெளியேற்றுதல், போலந்து நாட்டுக்கு சுதந்திரம் அளிப்பது, இனவாத எல்லைகளையும் கருத்திற்கொண்டு ஐரோப்பாவின் எல்லைகளை மறுபரிசீலனை செய்தல், மற்றும் நாடுகளின் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அரசியல் சுதந்திரத்திற்கும் பிராந்திய ஒற்றுமைக்கும் பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கு ஒரே மாதிரியான உத்தரவாதம் அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தியது [5][6]. நவம்பர் 1917 இல் முன்வைக்கப்பட்ட அமைதிக்கான விளாடிமிர் லெனினின் கட்டளைக்கும் வில்சன் உரை பதிலளித்தது, போரில் இருந்து உருசியா உடனடியாக விலகவேண்டும் என முன்மொழிந்தது மற்றும் பிராந்திய இணைப்புகளால் சமரசமற்ற ஒரு நியாயமான மக்களாட்சிக்கும் அழைப்பு விடுத்தது. வெளிநாட்டு கொள்கை ஆலோசகரான எட்வர்ட் எம்.அவுசு தலைமையிலான 150 ஆலோசகர்களின் குழுவானது எதிர்பார்க்கப்பட்ட சமாதான மாநாட்டில் எழும் தலைப்புகள் பற்றிய புலனாய்வு ஆராய்ச்சியை பதினான்கு அம்சங்களும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஐரோப்பியர்கள் பொதுவாக வில்சனின் தலையீட்டை வரவேற்றனர், ஆனால் கூட்டணியின் கூட்டாளர்களான பிரான்சின் சியார்ச்சசு கிளெமெனுவோ, ஐக்கிய இராச்சியத்தின் டேவிட் லாய்டு சியார்ச்சு மற்றும் இத்தாலியின் விட்டோரியோ இமானுவேல் ஆர்லாண்டோ ஆகியோருக்கு வில்சனின் கருத்துகள் மீது சந்தேகம் ஏற்பட்டது [7].
1918 இல் ஏற்பட்ட பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம்
சோவியத் உருசியாவின் புதிய போல்செவிக் அரசாங்கத்திற்கும், செருமனி, ஆசுத்திரியா, அங்கேரி, பல்கேரியா மற்றும் ஓட்டோமான் பேரரசு போன்ற மைய சக்திகளுக்குமிடையே 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 அன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தமே பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம் எனப்படும். இதன்படி உருசியா முதலாம் உலகப் போரில் பங்கேற்பது முடிவுக்கு வந்தது [8]. 1,30,000 சதுரமைல் பரப்பளவுள்ள பிராந்தியங்களும் 62 மில்லியன் மக்களும் உருசியாவிலிருந்து பிரிந்தன [9]. உருசிய மக்களில் மூன்றில் ஒரு பங்கு, விளைச்சல் நிலப்பகுதியின் மூன்றில் ஒரு பகுதி, நாட்டின் நிலப்பரப்பில் கால்பகுதி, மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள், இரயில் பாதையில் கால் பகுதி. போன்றவற்றுக்கு இந்த இழப்பு சமமாகும் [9].
போர் ஓய்வு
1918 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், மைய சக்திகள் நிலைகுலைந்தன [10]. செருமானிய இராணுவத்தினுள் கைவிடுதல் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது, பொதுமக்களின் வேலைநிறுத்தங்கள் கடுமையாக யுத்ததளவாட உற்பத்தியை குறைத்தன [11][12]. மேற்கத்திய முன்னணியில், கூட்டணி படைகள் நூறு நாட்கள் தாக்குதலை ஆரம்பித்தன மற்றும் செருமானிய மேற்கத்திய படைகளை உறுதியாகத் தோற்கடித்தன [13].உயர் அதிகாரம் கொண்ட செருமன் கடற்படை மாலுமிகள் கி்ளர்ச்சிகளைத் தூண்டி செருமன் புரட்சிக்கு வித்திட்டனர் [14][15], பதினான்கு அம்சக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமாதானத் தீர்வு பெற செருமன் அரசாங்கம் முயன்றதுடன் சரணடைந்தது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி சக்திகளும் செருமனியும் நவம்பர் 11 ம் தேதி போர் ஓய்வுக்கு கையெழுத்திட்டன. செருமன் படைகள் பிரான்சிலும் பெல்கியத்திலும் நிலைத்திருந்தன [16][17][18].