வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014)[2] சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம்அரிமளம் என்ற ஊரில் அந்தணக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வாண்டுமாமா. இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கௌசிகன் என்ற புனைபெயரில் பெரியவர்களுக்கு எழுதி வந்தார். ஆனந்த விகடன் இதழின் ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகளை எழுதத் தூண்டினார். வாண்டுமாமா என்ற புனைபெயரை இவருக்கு சூட்டியவரும் இவர் தான். ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்னர் திருச்சியில் இருந்து வெளிவந்த சிவாஜி என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார். அவ்விதழின் சிறுவர் மலர் பகுதியில் சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.
பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள் இதழிலும் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் குழந்தைகளிடையே புகழ் பெறத் தொடங்கியது. கோகுலம் பத்திரிகை வெளியீடு நிறுத்தப்பட்ட பின்னர் 1984 ஆம் ஆண்டில் பூந்தளிர், "பூந்தளிர் அமர் சித்திரக் கதைகள்" ஆகிய குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. பூந்தளிர் மீண்டும் 1990 இல் வாண்டுமாமாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
வாண்டுமாமா 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ஓநாய்க்கோட்டை போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.