மீசை (Moustache) என்பது மூக்குக்கு கீழாக முகத்தின் மேலுதட்டில் வளரக்கூடிய முடியை குறிக்கும். ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் போன்றவை கொள்ளப்படுகின்றன.
மீசை என்ற பொருள் கொண்ட ஆங்கிலச்சொல் ஒரு பிரஞ்சு மொழிச் சொல்லாகும். 14 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழியிலிருந்து இச்சொல் வருவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூற்றாண்டு கால கட்டங்களில் பயன்பாட்டில் இருந்த இச்சொல் மேல் உதடு அல்லது முகத்திலுள்ள முடி என்ற பொருளின் அடிப்படையில் மீசை என்ற இப்பெயர் தோன்றியிருக்கலாம்[1][2].
தாடியைப் போல எல்லா இனத்தினரும் மீசையை வளர்த்துக் கொள்ள முடியாது. காற்றை வடிகட்டுவது அல்லது நாசி குழியிலிருந்து சளியை உறிஞ்சுவது போன்ற செயல்பாட்டு நோக்கத்தை விட ஒரு சமூக அடையாளமாக இருக்கிறது. மீசை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் , திருமண சந்தையின் செறிவூட்டலுக்கு ஏற்ப மீசைகள் மற்றும் முக முடிகள் மீதான பார்வை பொதுவாக உயர்ந்தும் வீழ்ச்சியடைந்தும் மாறுபடுவதை அறியமுடிகிறது [3]. இதனால் மீசை அல்லது தாடியின் அடர்த்தி மற்றும் தடிமன் ஆகியவற்றின் நுணுக்கங்கள் பாலின நொதியான ஆண்ட்ரோசன் அளவு அல்லது ஆண்களின் வயதை வெளிப்படுத்த உதவும் ஒரு குறிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
மேற்கத்திய படைப்பிரிவுகளின் வீர்ர்கள் வைத்துக் கொள்ளும் மீசைகள் ஏற்படுத்தும் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அங்கேரிய நாட்டு குதிரைப்படையினரின் குதிரை வீர்ர்களிடமிருந்தே முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் வைத்திருந்த அம்மீசைகளும் அவ்வீர்ர்களின் சீருடையும் இணைந்து எதிரிகளுக்கு கூடுதலாக ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலிருக்கும். மீசை விரைவில் ஐரோப்பிய நாட்டு குதிரைப்படை உள்ளிட்ட பிற நாட்டு படைப்பிரிவுகளுக்கும் பரவியது, இது 1806 இல் பிரித்தானிய இராணுவ அலகுக்குரிய வேல்சு இளவரசருக்கு சொந்தமான 10 வது அரசு குதிரைப்படைகுதிரை வீர்ர்களுக்கும் மாறியது. 19 ஆம் நூற்றாண்டில் ஒரு மீசை என்பது சிப்பாய்க்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறித்தது. மேலும் பிரபுக்களிடையே அவர்கள் விரும்பும் பிரபலமான பாணியாகவும் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த மீசையின் புகழ் 1880 ஆம் ஆண்டுகள் மற்றும் 1890 ஆம் ஆண்டுகளில் மேலும் உயர்ந்தது. அன்றைய இராணுவ வீர்ர்களின் நற்பண்புகளாகவும் பிரபலமடைந்தது [4].
ஒரு பாரம்பரிய இந்திய நம்பிக்கை என்னவென்றால் ஒரு மனிதனின் மீசை அவனது வீரத்தின் அடையாளம் என நம்பப்பட்டது. இந்த நம்பிக்கை 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது, இதன் விளைவா இந்திய மீசைகள் பிரித்தானிய வீர்ர்கள் முகத்தில் இருக்கும் மீசைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவரை சுத்தமாக மீசையை சுத்தமாக மழித்துக் கொண்டிருந்த பிரிட்டிசு இராணுவம் மீசை வைத்துக் கொள்ளாமல் இந்திய வீரர்களிடையே அதிகாரத்தை பராமரிப்பதில் சிரமத்தை சந்தித்துக் கொண்டிருந்தது, தங்கள் அதிகாரிகளுக்கு மீசை, தாடி இல்லாவிட்டால் அவர்களை இந்தியர்கள் ஆண்மையற்றவர்கள் என்ற கோணத்தில் பார்க்க முற்பட்டனர். எனவே இந்தியப் படைவீர்ர்களின் நன்மதிப்பை பெறுவதற்காக ஆங்கிலேயப் படையினரும் மீசை, தாடி போன்ற முக அடையளாங்களை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினர். படையினரின் இத்தகைய மீசை நோக்கு விரைவில் அனைத்துப் படையினருக்குள்ளும் விரைந்து பரவியது. பின்னர் ஆங்கிலேயர்களின் நாடு வரைக்கும் மக்களிடையே ஊடுறுவியது [5][6].
பல்வேறு கலாச்சாரங்கள் மீசையுடன் வெவ்வேறு வகையான தொடர்புகளை உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக 20 ஆம் நூற்றாண்டின் பல அரபு நாடுகளில் மீசைகள் அதிகாரத்துடன் தொடர்புடையவையாக கருதப்பட்டன. இசுலாமிய பாரம்பரியத்துடன் தாடிகள் இணைக்கப்பட்டிருந்தன. முகத்தில் முடி இல்லாத நிலை அதிக தாராளவாத, மதச்சார்பற்ற போக்குகளைக் கொண்டவர் என்ற தோற்றத்தை தருவதாக கருதப்பட்டது [7]. இசுலாத்தில் மீசையை ஒழுங்கமைப்பது ஒரு சுன்னா அல்லது சுன்னத் என்று கருதப்படுகிறது, அதாவது, குறிப்பாக சன்னி முசுலீம்களிடையே பரிந்துரைக்கப்படும் நல்லொழுக்க முறை என்று நம்பப்படுகிறது. மீசை என்பது யர்சன் மதத்தைப் பின்பற்றும் ஆண்களுக்கு இதுவொரு மத அடையாளமாகும் [8].
கற்களை சவரகத்தியாக்கி மழித்துக் கொள்வது கற்காலத்திலிருந்தே தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது. கி.மூ 2550 இல் 4 ஆவது வம்சத்தின் எகிப்திய இளவரசர் ரகோடெப்பின் சிலை மீது மீசை சித்தரிக்கப்பட்டுள்ளது. மீசையுடன் மொட்டையடிக்கப்பட்ட மனிதனைக் காட்டும் மற்றொரு பழங்கால உருவப்படம் கிமு 300 இல் இருந்து வந்த ஒரு பண்டைய ஈரானிய குதிரை வீரர் வடிவில் கிடைக்கிறது.
.