மார்க்கண்டேயர் (சமஸ்கிருதம்: मार्कण्डेय, ஆங்கிலம்: Mārkaṇḍeya) என்பவர் இந்து இலக்கியத்தில் கூறப்படும் ஒரு முனிவர் ஆவார். இவர் மிருகண்ட முனிவருக்கும் அவரது மனைவி மானஸ்வினிக்கும் மகனாகப் பிறந்தவர்.[1] இந்து மதத்தின் பதினெட்டு மகாபுராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணம் இவரைப் பற்றிக் கூறப்பட்டது ஆகும். இது மார்க்கண்டேயருக்கும் ஜைமினி என்ற முனிவருக்கும் இடையேயான உரையாடலைக் கொண்டது. பாகவத புராணத்தில் பல அத்தியாயங்களில் மார்க்கண்டேயரது உரையாடல்களும் பிரார்த்தனைகளும் காணப்படுகின்றன.[2]மகாபாரதத்திலும் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். மார்க்கண்டேயர் அனைத்து முக்கிய இந்து மரபுகளிலும் போற்றப்படுகிறார்.
தொன்மவியல்
மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.
பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.
பரவலர் பண்பாட்டில்
மார்கண்டேயரின் தொன்மத்தை அடிப்படையாக கொண்டு க. நா. சுப்ரமண்யம்ரயிலில் சிரஞ்சீவி என்ற சிறுகதையை எழுதியுள்ளார். சாகா வரம்பெற்ற மார்கண்டேயர் இப்போது வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அச்சிறுகதையை உருவாக்கியுள்ளார். கதையில் கதை சொல்லி பட்டினியால் நொடிந்துபோன மார்கண்டேயனை தொடருந்தில் சந்திக்கிறார். அந்தச் சிவபெருமானே உத்தரவிட்டாலொழிய எமன் என்னை அணுக மாட்டான் என்று தோன்றுகிறது. பழைய வரத்தை ரத்து செய்து என்னை அழைத்துப்போக எமனுக்கு உத்தரவிட வேண்டும் என்று சிவபெருமானை நோக்கித் தவம் புரியச் செல்லுகிறேன் என்று கூறி அவரிடம் காலணா பிட்சைக் கேட்கிறான். பிச்சைக்காக இந்தக் கதையைச் சொல்வதாக கதை சொல்லி நினைக்கிறார். ஆனால் திருக்கடையூர் வந்ததும் மார்கண்டேயன் இறங்கிச் செல்லுகிறான். சிவனிடம் மார்கண்டேயர் வாங்கிய வரம் ஒரு கட்டத்தில் அவருக்கு சாபமாக மாறிவிட்டது என்ற கோணத்தில் க. நா.சு இதை பார்க்கிறார்.[3] இந்த நிகழ்ச்சி திருக்கடவூரில் நிகழ்ந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது. [4]