இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" (盆栽) எனப் பொருள்படும். சீனக் கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.[1][2][3]
வரலாறு
அழகுக்காக வளர்ப்பது போல் காணப்படும், சட்டிகளில் வளர்க்கப்பட்ட மரங்களின் உருவப் படங்கள், 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தியச் சமாதிகளில் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, நாடோடிகளின் வண்டிகள் விதவிதமான பாத்திரங்களில் மரங்களை ஆசியா முழுதும் காவிச் சென்றதாக அறியப்படுகின்றது. இந்த மரங்கள் மருத்துவத் தேவைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்களை வழங்கியதாகத் தெரிகிறது.
நவீன பொன்சாய்க் கலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இது 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் சீனாவுக்கான அரச தூதுவர்களால் ஜப்பானுக்குக் கொண்டுவரப்பட்டது.
வளர்ப்பு
போன்சாய் பரம்பரையியல் முறையில் குள்ளமான ஒரு தாவரமல்ல. இது முறியாக வளர்ந்துகொண்டிருக்கும் தாவரமொன்றைக் குருத்து மற்றும் வேர்களைக் கத்தரித்தல் போன்ற பல வகைச் செயற்கை முறைகள் மூலம் குள்ளமாக வளரவைக்கப் படுகின்றன. என்னகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை. உரிய முறையில் பராமரிக்கப்படும் பொன்சாய்கள் முழு அளவுக்கு வளரும் அவற்றைப் போன்ற தாவரங்களையொத்த ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க முடியும். எனினும் பொன்சாய்களுக்கு மிகுந்த பராமரிப்புத் தேவை. நன்றாகப் பராமரிக்கப்படாத பொன்சாய்கள் நீண்டகாலம் உயிர்வாழ மாட்டா.