பெருமுந்நூல் அல்லது பிரஸ்தான திரயம் (Prasthanatrayi) (சமக்கிருதம்: प्रस्थानत्रयी, IAST: Prasthānatrayī) எனப்படுவது உபநிடதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிய இந்து சமயத்தின் அடிப்படை நூல்கள் மூன்றையும் குறிக்கும் சொல்லாகும். இந்நூல்கள் சுருதி பிரஸ்தானம், ஸ்மிருதி பிரஸ்தானம், தர்க்கப் பிரஸ்தான அடிப்படையில் அமைந்துள்ளது.[1]
சுருதி பிரஸ்தானம்/உபதேச பிரஸ்தானம்
வேதங்களின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ள ஞான காண்டமே உத்தர மீமாம்சை என்பர். உத்தர மீமாம்சை அல்லது உபநிடதங்கள், சுருதியை அடிப்படையாகக் கொண்டது. உபநிடதங்கள் பிரம்மத்தை உபதேசிப்பதால், உபதேச பிரஸ்தானம் என்றும் அழைப்பர். (injunctive texts) (the starting point of revelation) வேதங்கள் மனிதர்களால் எழுதப்பட்டதல்ல. ரிஷிகள் தியான நிலைகளில் ஆழ்ந்திருந்தபோது, அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஆன்மீக உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். எனவே இதில் உள்ள செய்யுள்களை மந்திரங்கள் என உயர்வாக அழைக்கப்படும்.
சுமிருதி பிரஸ்தானம்/நடைமுறை பிரஸ்தானம்
சுமிருதியை அடிப்படையாகக் கொண்டது பகவத் கீதை. இதில் உள்ள செய்யுள்கள் சுலோகங்கள் எனப்படும். ஒரு ஆன்மீக சாதகன் இறைஞானம் பெற தேவையான சாதனைகளை கூறுவதாலும் இதனை நடைமுறை பிரஸ்தானம் (practical text) என்றும் அழைப்பர். ஸ்மிருதி பிரஸ்தானம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக்காட்டும் நூல்களே ஸ்மிருதிகள். இவை காலத்திற்கும், இடத்திற்கும் இடம் மாறுபடுகிற வாழ்க்கை நியதிகளைக் கருத்தில் கொண்டு எழுதப்படுபவை. புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாத்திரங்கள் போன்ற நூல்கள் ஸ்மிருதி பிரஸ்தான நூல்கள் ஆகும். ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்படும் ஸ்மிருதி நூலான மகாபாரதம், இந்து சமயத்தின் இரண்டாவது அடிப்படை நூலாகத் திகழ்கிறது.
தர்க்கப் பிரஸ்தானம் அல்லது யுக்தி பிரஸ்தானம்
பிரம்ம சூத்திரம், தர்க்கப்பிரஸ்தானம் அல்லது நியாயப் பிரஸ்தானத்தின் அடிப்படையில் அமைந்த நூல். இதனை யுக்தி பிரஸ்தானம் (Yukti prasthana) (logical text) என்றும் அழைப்பர். இது உபநிடதங்களுக்கிடையே வேறுபாடுகள் போல் இருப்பதாக தோன்றும் கருத்துக்களை யுக்தி பூர்வமாக சமன்படுத்தியும்; இறைவன், உலகம், மனிதன் போன்ற தத்துவங்களில் உபநிடதங்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டுள்ள சாங்கியம், வைசேடிகம், நியாயா, யோகா, பூர்வ மீமாம்சை தத்துவங்களை யுக்திப் பூர்வமான தர்க்கத்துடன் நீக்கி, வேதாந்த கருத்துக்களை நிலைநாட்டுவதே பிரம்ம சூத்திரத்தின் நோக்கம். பிரம்ம சூத்திரத்தில் உள்ள செய்யுட்களை சுலோகங்கள் என்பர்.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்