மனித பெண்குறியின் உள்கட்ட உடற்கூற்றியல்; பெண்குறிக் காம்பின் மேற்கவிகையும் சிறிய இதழும் வரிக்கோடுகளாக காட்டப்பட்டுள்ளன. பெண்குறிக் காம்பு பார்வைப் பகுதியிலிருந்து பூப்பெலும்பு வரை உள்ளது.
பெண்குறிக் காம்பு (clitoris அல்லது மதன பீடம் ,பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு) பெண் பாலூட்டிகளில் மட்டுமே உள்ள ஓர் பாலுறவு உறுப்பாகும். மனிதர்களில் பருப்பு அல்லது மொட்டு போன்று காணப்படும் பகுதி சிறுநீர்க் குழாய் மற்றும் புணர்புழை துளைகளின் மேலே சிறிய இதழின் முன்பக்க சந்திப்புக்கு அண்மையில் உள்ளது. பெண்குறிக் காம்பிற்கு ஒத்தமைப்புடையஆண்குறி போலன்றி இதன் சேய்மையில் சிறுநீர்க்குழாய் கொண்டிருக்கவில்லை. இதற்கு ஒரே விலக்காக புள்ளியிட்ட கழுதைப்புலி உள்ளது. இத்தகைய இனங்களில் உள்ள சிறுநீர்பாலின உறுப்புக்கள் தனித்தன்மையோடு ஆண்குறிப்போலி எனப்படும் விரிந்த பெண்குறிக்காம்பு மூலமாக சிறுநீர் கழித்தல், புணர்ச்சி மற்றும் மகப்பேறு செயல்பாடுகளை ஆற்றுகின்றன.[1]
மனித இனத்தில் பெண்குறிக்காம்பு பெண்களுக்கு மிகவும் பாலுறவு உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஓர் உடற்பகுதியாகவும் பாலின்பத்திற்கான முதன்மைக் காரணியாகவும் விளங்குகிறது.[2][3][4][5] பாலுறவுத் தூண்டலால் ஏற்படும் பெண்குறிக் காம்பின் விறைப்பும் புணர்ச்சி பரவச நிலையும் இதன் அளவு மற்றும் உணர்ச்சித் திறனைப் பொறுத்துள்ளது; இவை பல சமூகவியலாளர்கள் மற்றும் பாலின மருத்துவ வல்லுனர்களால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.[3][6][7][8]
பாலுறவில் தூண்டப்படும்போது பெண்குறிக் காம்பின் இழையங்களில் பரவசநிலை அடையும் வரை குருதி நிரம்பி விறைப்பாக எழுகிறது. மேலும் இதனைத் தொடுவதால் பெண்ணின் புணர்புழை வடிவம் மாறுவதுடன் உயவுப்பொருளை சுரக்கிறது. இவற்றால் ஆண்குறி நுழைவது எளிதாகி பாலுறவு நடக்கிறது. பெரும்பகுதியான பெண்குறிக்காம்பு உள்ளே மறைந்து வெளியே சிறு பகுதி மட்டுமே காணக் கூடியதாக உள்ளது. எனவே உள் மற்றும் வெளிப்பகுதிகளை மொத்தமாகக் கருதினால் இதன் அளவு ஆண்குறியின் அளவை ஒத்ததே. இவை இரண்டுமே கருவில் ஒரே இழையவகையிலிருந்து உருவானவை.
பெண்குறிக் காம்பின் வெளியில் காணப்படும் பகுதிகள்
யோனி மேட்டின் அடியில் வெளிப்புற இதழ்கள் இணையும் பெண்குறிக் காம்பு சந்திப்பிலிருந்துபுணர்புழைத் துளைக்குக் கீழே உட்புற இதழ்கள் சந்திக்கும் பிரிவு வரை பெண்குறிக் காம்பின் வெளிப்பகுதிகளைக் காணலாம்.[9]
வெளிப்பகுதி உறுப்புக்களாவன:
மொட்டு: தலை அல்லது முனைப் பகுதி. நரம்பு முனைகளால் நிரப்பப்பட்டுள்ள இதன் ஒரே பயன்பாடு இன்ப உணர்ச்சியைத் தூண்டுவதும் பெண்ணின் பால்வினை செயலை கூட்டுவதுமாகும்.
மேற்கவிகை: உட்புற இதழ்களின் வெளியோரங்களால் உருவான மடிப்புத் தோல். இது ஆண்குறியின் முன்தோலைப் போலவே மொட்டை மூடுகிறது.
உட்புற இதழ்கள்: மயிர்களில்லாத தொடுதலுக்கு மிகவும் உணர்த்திறனுடைய பகுதி.
பெண்குறிக் காம்பின் மறைந்துள்ள பகுதிகள்
விறைப்பு இழையம், சுரப்பிகள், தசைகள், குருதிக் கலங்கள், நரம்புகள் ஆகியன பெண்குறிக்காம்பின் உடலின் உள்ளே மறைந்துள்ள பகுதிகளாகும். பெண்குறிக் காம்பு மற்றும் ஆண்குறி இரண்டிலும் இருவகை விறைப்பு இழையங்கள் இருக்கின்றன: குகைத் திசுக்கள் (corpus cavernosum) மற்றும் கடற்பஞ்சு போன்ற மென்திசுக்கள் (corpus spongiosum). இவை பால்வினையின்போது குருதியால் நிரப்பப்பட்டு எழும்பி நிற்கின்றன. தோலுக்குக் கீழே காம்புத் தண்டு மொட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. காம்புத் தண்டு உருளையான மென்திசுகளால் ஆன விறைப்புத் திசுவாகும். இது ஆண்குறியில் உள்ள மொட்டினைப் போன்றே மிகவும் உணர்திறனுடையது. அரை அங்குலத்திலிருந்து ஓரங்குலம் வரை நீளமுள்ள ஓர் கடினமான வரிமுகடு போன்று உணரப்படும் இது கூதிமேடு நோக்கி எழும்பி பின் நறுக்காக வளைந்து மென்திசுக்களால் ஆன இரு மெல்லிய கால்களாக இரண்டாகப் பிரிகிறது. இந்தக் கால்கள் ஓரு கோழி நெஞ்செலும்பு போல உள்ளது. ஆண்,பெண் இருபாலருக்கும் சிறுநீர்க் குழாயைச் சுற்றி மென்திசுக்கள் சூழ்ந்துள்ளன.
↑Shere Hite: "I was making the point that clitoral stimulation wasn't happening during coitus. That's why women 'have difficulty having orgasms' – they don't have difficulty when they stimulate themselves. Tracey Cox: "It's disappointing that one of Hite's main messages – that 70 per cent of women don't have orgasms through penetration – is not completely accepted today. Plenty of women don't feel comfortable admitting it, even to themselves, for fear their partners will love them less. But women are far more experimental now." "Shere Hite: On female sexuality in the 21st century". The Independent. 30 April 2006. பார்க்கப்பட்ட நாள் 10 April 2011.