தோமோயுகி யமாசிதா (ஆங்கிலம்: Tomoyuki Yamashita அல்லது Tomobumi Yamashita; சப்பானியம்: 山下 奉文); என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய இராணுவத்தில் (Imperial Japanese Army) தளபதியாக (General) பதவி வகித்தவர்.[2]
மலாயா படையெடுப்பு மற்றும் சிங்கப்பூர் போரின் போது சப்பானியப் படைகளை யமாசிதா வழிநடத்தினார். தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூரை 70 நாட்களில் கைப்பற்றினார். அதனால் தோமோயுகி யமாசிதாவுக்கு "மலாயாவின் புலி" (The Tiger of Malaya) எனும் அடைமொழிப் பெயர் பெயரிடப்பட்டது.[3]
பொது
பிலிப்பைன்சு போருக்குப் பின்னர் முன்னேறி வரும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்து பிலிப்பைன்சு நாட்டைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டார். நேச நாடுகளின் முன்னேற்றத்தை அவரால் தடுக்க முடியவில்லை.
ஆனாலும், ஆகஸ்டு 1945-இல் ஜப்பான் சரணடையும் வரையில் (Surrender of Japan) அவர், லூசோன்(Luzon) பகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்..
போர்க் குற்றங்கள்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1944-இல் ஆக்கிரமிக்கப்பட்ட பிலிப்பைன்சில், தோமோயுகி யமாசிதாவின் கட்டளையின் கீழ் துருப்புக்களால் செய்யப்பட்ட போர்க் குற்றங்களுக்காக யமாசிதா விசாரிக்கப்பட்டார்.
அந்தப் போர்க் குற்றங்களுக்கு உத்தரவிட யமாசிதா மறுத்தார் என்றும்; அவை நிகழ்ந்ததாக அவருக்குத் தெரியாது என்றும்; விசாரணையில் தோமோயுகி யமாசிதா கூறினார்.
முரண்பட்ட சான்றுகள்
இருப்பினும் அவரின் உத்தரவின் கீழ் இந்தக் குற்றங்களைச் செய்யப் பட்டதா என்பது குறித்தும்; குற்றங்கள் செய்யப்பட்டது பற்றி அவருக்குத் தெரியுமா என்பது குறித்தும் விசாரணையின் போது முரண்பட்ட சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இறுதியில் தோமோயுகி யமாசிதா ஒரு போர்க் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 1946-இல் அவர் தூக்கிலிடப்பட்டார்.[4]
வரலாறு
ஜப்பான், ஷிகோகு (Shikoku) மாநிலத்தில், ஒசுகி கிராமத்தில் ஓர் உள்ளூர் மருத்துவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தோமோயுகி யமாசிதா. அவர் தன் இளமை பருவத்தில் இராணுவத் தொடக்கப் பள்ளிகளில் பயின்றார்.
நவம்பர் 1905-இல், ஜப்பானிய அரச இராணுவக் கல்லூரியில் (Imperial Japanese Army Academy) வகுப்பில் பட்டம் பெற்றார். 920 மாணவர்களில் 16-ஆவது இடத்தைப் பெற்றார். டிசம்பர் 1908-இல் அவர் லெப்டினண்ட் பதவி உயர்வு பெற்றார்.
ஹிசாகோ நாகயாமா
1914-இல் முதலாம் உலகப் போரில் ஜெர்மன் அரசிற்கு எதிராகப் போராடினார். மே 1916 -இல் 'கேப்டன்' பதவிக்கு உயர்வு பெற்றார். அதே ஆண்டு, ஓய்வுபெற்ற தளபதி நாகயாமாவின் மகள் ஹிசாகோ நாகயாமாவை (Hisako Nagayama) மணந்தார்.
1919 முதல் 1922 வரை ஜெர்மனி, பெர்ன் மற்றும் பெர்லின் நகரங்களில் உதவி இராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார். பிப்ரவரி 1922-இல், மேஜர் பதவிக்கு உயர்வு பெற்றார்.[5]
மலாயா மீது படையெடுப்பு
1941-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி தோமோயுகி யமாசிதா, ஜப்பானிய இராணுவத்தின் 25-ஆவது பிரிவின் (Twenty-Fifth Army) தளபதியாக நியமிக்கப்பட்டார். மலாயாவில் தன் படைகள் கடல்வழியாகத் தரை இறங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரின் நம்பிக்கை.
1941 டிசம்பர் 8-ஆம் தேதி அவர் இந்தோசீனாவில் உள்ள தளங்களில் இருந்து மலாயா மீது படையெடுப்பைத் தொடங்கினார். உடனடித் தாக்குதல்கள் மட்டுமே மலாயாவில் வெற்றியை உறுதி செய்யும் என்று தோமோயுகி யமாசிதா உறுதியாக நம்பினார்.
பிரித்தானியர்களின் மிகப் பெரிய தோல்வி
ஏனென்றால், மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்த பிரித்தானியப் படைகளை விட மூன்றில் ஒரு பங்காக ஜப்பானியப் படை இருந்தது. அதனால் மலாயாவையும் சிங்கப்பூரையும் மிகக் குறுகிய காலத்தில் கைப்பற்றுவதுதான் தோமோயுகி யமாசிதாவின் முதல் இலக்கு.
1942 பிப்ரவரி 15-இல் சிங்கப்பூரின் வீழ்ச்சியுடன் மலாயாவில் ஜப்பானியரின் படையெடுப்பு ஒரு முடிவுக்கு வந்தது. 80,000 பிரித்தானிய, இந்திய மற்றும் ஆஸ்திரேலியத் துருப்புகள் சரண் அடைந்தார்கள். இது வரலாற்றில் பிரித்தானிய தலைமையிலான மிகப்பெரிய தோல்வியாகும். அதன் பின்னர் தோமோயுகி யமாசிதா "மலாயாவின் புலி" என்று அழைக்கப்பட்டார்.
போர்க் குற்றங்களுகாக விசாரணை
1945 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் 1945 டிசம்பர் 7-ஆம் தேதி வரை, மணிலாவில் உள்ள அமெரிக்க இராணுவ நீதிமன்றம், போர்க் குற்றங்களுகாக தோமோயுகி யமாசிதாவை விசாரணை செய்தது. இறுதியில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.[6]
23 பிப்ரவரி 1946-இல், மணிலாவிற்கு தெற்கே 30 மைல் (48 கி.மீ.) தொலைவில் உள்ள லாஸ் பானோஸ், லகுனா சிறை முகாமில் (Los Baños, Laguna Prison Camp) தூக்கிலிடப்பட்டார்.[7]
காட்சியகம்
சிங்கப்பூரில் பிரித்தானிய படைகள் சரண் அடைந்த போது
மலாயாவின் மீது தாக்குதல் நடத்த திட்டம்
பிலிப்பைன்சு போர் முனையில் தோமோயுகி யமாசிதா
தோமோயுகி யமாசிதா சரண் அடைதல்
போர்க் குற்றங்களுக்காக மணிலா நீதிமன்றத்தில்
தோமோயுகி யமாசிதா விசாரணை ஆணையம்
மேற்கோள்கள்
↑Marouf Hasian, In the Name of Necessity: Military Tribunals and the Loss of American Civil Liberties, University of Alabama Press, 2012, p. 286 (chapter 7, note 6).
"Contemporary writers sometimes called Yamashita the "Beast of Bataan." See "The Philippines: Quiet Room in Manila," Time, 12 November, 194.5, 21."