கடாரம் அல்லது காழகம் (ஆங்கிலம்: Kaṭāram; Kataha; Kalahbar; மலாய்; Kadara; அரபு: قتح (qataḥa) அல்லது قلحبر (qalaḥbar); சயாமிய மொழி: ไทรบุรี; (Syburi); (Sai Buri); சீனம்: 卡达拉); என்பது கி.மு. 788-ஆம் ஆண்டில் மெர்போக் ஆற்றுப் படுகையின் வடக்குப் பகுதியில் உருவான ஒரு பெருநிலக் குடியேற்றப்பகுதி ஆகும். இந்தக் குடியேற்றப்பகுதி பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது.
மெர்போக் ஆறு மற்றும் மூடா ஆறு ஆகிய இரு ஆறுகளின் படுகைகள், சுமார் 1000 சதுர மைல் பரப்பளவு கொண்டவை. அந்த முதல் குடியேற்றத்தின் தலைநகரம் மெர்போக் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இந்தப் பகுதி இப்போது சுங்கை பத்து என்று அழைக்கப்படுகிறது.[1]
பொ.ஆ. 330-ஆம் ஆண்டில் இருந்து; 1136-ஆம் ஆண்டு வரையில் கெடா துவா (Old Kedah) எனும் பெயரிலும் அறியப்பட்ட ஒரு பெருநிலப் பகுதியாகும்.[2]
பொது
கடாரம் என்பது கெடா மாநிலத்தின் பழைய பெயராகும். பழங்காலத்தில் இருந்து, கெடாவை கடாரம் என்று தமிழர்கள் அழைத்து வருகிறார்கள். இருப்பினும் கெடா எனும் சொல்லே பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. கடாரத்தைச் சயாமியர்கள் ஆட்சி செய்த போது அதனைச் சியுபுரி (Syburi) என்று அழைத்தனர்.[3]
கடாரத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்று அழைக்கிறார்கள். கடாரம் எனும் ஒட்டுமொத்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. பொதுவாக, கடாரம் சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது.
தென்னிந்தியத் துறைமுகங்களான காவேரிப்பட்டினம் அல்லது மகாபலிபுரம் போன்ற பட்டினங்களை விட்டுப் புறப்பட்டு, வங்காள விரிகுடா வழியாக, கிழக்குத் திசையில் போகும் இந்திய வணிகர்கள், முதலில் காணக் கூடிய நிலம் ஜெராய் மலை எனும் கெடா சிகரமாகும்.
இந்த ஜெராய் மலை மாலுமிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் விளங்கியது. ஜெராய் மலையின் உயரம் 1217 மீட்டர் உயரம். கடலில் 100 மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து மலையைப் பார்க்க இயலும். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு வழிகாட்ட ஜெராய் மலையின் சிகரத்தில் நெருப்பு மூட்டப்படும். அந்த வழிகாட்டலில் கப்பல்கள் மெர்போக் முகத்துவாரத்தை அடையும்.[4]
பொ.ஊ. 170-ஆம் ஆண்டுகளில் தெற்காசியாவில் இருந்து இந்து மதக் குழுக்கள் கடாரத்தை வந்தடைந்தன. அதே காலக் கட்டத்தில், கடாரத்திற்கு அருகில் உள்ள தீவுகளில் வாழ்ந்த மக்களும்; மற்றும் வடக்கு வியட்நாம் (Mon-Khmer) பகுதியில் வாழ்ந்த மக்களும்; தீபகற்ப மலாயாக்கு வந்த இந்து மதக் குழுக்களுடன் இணைந்து கொண்டனர்.
அதே நேரத்தில் இந்தியா, பாரசீகம் மற்றும் அரேபியா நாடுகளின் வர்த்தகர்களும் மலாக்கா நீரிணைப் பகுதிகளுக்கு வந்தனர். அவர்கள் கெடா சிகரம் (Kedah Peak) என்று அழைக்கப்படும் ஜெராய் மலையை அடையாளப் புள்ளியாகப் பயன்படுத்தினர்.
பண்டைய கடாரம், கோலா கெடா, கோலா பாரா, கோலா பிலா மற்றும் மெர்பா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.[5]
மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் கடாரம் அமைந்து இருந்தது. கடாரத்தின் புவியல் அமைப்பினால் வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் தொலைந்து போகும் அபாயம் குறைவாக இருந்தது. அந்த வகையில் கடாரம் புகழ்பெறத் தொடங்கியது.
இந்திய இலக்கியத்தில் கடாரம்
கடாரம் எனும் பெயரைத் தவிர, கெடா எனும் பெயர் இந்திய இலக்கியத்தில் வெவ்வேறு பெயர்களால் அறியப் படுகிறது. கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3-ஆம் நூற்றாண்டு கௌமுதி மகோதுசுவ நாடகம் (Kaumudi-Mahotsava) எனும் கையெழுத்துப் பிரதியில், கடாகா-நகரா(Kataha-Nagara) என்று கெடாவைப் பற்றி சொல்லப் படுகிறது.
கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுபாரஜாதகம் (Subharajataka) என்னும் வடமொழி இலக்கியம் பூஜாங் பள்ளத்தாக்கில் லங்கா-ஷோபா மற்றும் கடக-திவிபா எனும் இரண்டு துறைமுகங்களைக் குறிப்பிடுகிறது.
11-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கதாசரிதசாகரம் எனும் இந்திய புராணக் கதைகளின் தொகுப்பில்; கெடாவை கடாகா என்று விவரிக்கிறது.
கதாசரித்திரசாகரம்
சமராயிச்சககா (Samarāiccakahā) எனும் 6-ஆம் நூற்றாண்டு இந்தியப் புராணத் தொகுப்பு; கெடாவை கடாகா-திவிபா என்று சொல்கிறது. தம்ரலிப்தி தொடங்கி கடக திவீபா வரையிலான கடற்பயணங்கள் பற்றியும்; ஸ்ரீ விஜயாபதி எனும் அரசர் கடகாவை ஆட்சி செய்த செய்தியையும் இந்த நூல் குறிப்பிடுகிறது.[6]
குணவதி எனும் இளவரசியார் கடகாவில் இருந்து இந்தியாவிற்குக் கடற்பயணம் மேற்கொண்டபோது அவளுடைய கப்பல் சுவர்ணதீபம் கடற்பகுதியில் உடைந்ததாகக் கதாசரித்திரசாகரம் எனும் இந்த நூல் குறிப்பிடுகிறது.[7]
அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்திப் பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும்(Kadaram) சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
“
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு
”
சீன இலக்கியத்தில் கடாரம்
கி.பி. 688 மற்றும் கி.பி. 695-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மலாய் தீவுக்கூட்டத்திற்குயி சிங்(Yijing) எனும் புகழ்பெற்ற தாங் வம்ச (Tang Dynasty) புத்த துறவி பயணம் செய்தார். அவர் தீபகற்ப மலாயாவின் வடக்குப் பகுதியில் காச்சா (Ka-Cha) என்று அழைக்கப்படும் ஓர் இராச்சியம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
அந்த இராச்சியம்; ஸ்ரீ விஜயப் பேரரசின் தலைநகரமான போகா (Bogha; Palembang) நகரில் இருந்து 30 நாட்கள் பயணத் தூரத்தில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.[8]
↑I-Tsing (2005). A Record of the Buddhist Religion As Practised in India and the Malay Archipelago (A.D. 671–695). Asian Educational Services. pp. xl–xli. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-81-206-1622-6.