'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.[3]
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சிறப்புகள்
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.
திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,
“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே
என பாடியுள்ளார்.
இங்கு ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் பஜனை மடம் உள்ளது.ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமர் பட்டாபிசேகம் கொண்டாடப்படுகிறது.
இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887ல் பிறந்தார்.
பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.