சோடியம் பைசல்பைட்டு(Sodium bisulfite) என்பது NaHSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். சோடியம் ஐதரசன் சல்பைட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உண்மையில் சோடியம் பைசல்பைட்டு ஒரு சேர்மமாக கருதப்படுவதில்லை[2]. மாறாக, நீரில் கரைத்தால் சோடியம் அயனி, பைசல்பைட்டு அயனி போன்றவற்றை கொடுக்கும் உப்புக்களின் கலவையாக இது பார்க்கப்படுகிறது. வெண்மை நிறத்தையும் கந்தக டை ஆக்சைடின் நெடியையும் சோடியம் பைசல்பைட்டு பெற்றுள்ளது. முழுமையாக வரையறுக்கப்படாவிட்டாலும் கூட இதற்கு ஐரோப்பிய எண் 222 என்ற அடையாளம் வழங்கப்பட்டு உணவு கூட்டுசேர் பொருளாக வகைப்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
சோடியம் ஐதராக்சைடு அல்லது சோடியம் பைகார்பனேட்டு போன்ற ஒரு பொருத்தமான காரத்துடன் கந்தக டை ஆக்சைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் சோடியம் பைசல்பைட்டு கரைசலைத் தயாரிக்கலாம்.
SO2 + NaOH → NaHSO3
SO2 + NaHCO3 → NaHSO3 + CO2
உருவாகும் கரைசலை படிகமாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் சோடியம் டைசல்பைட்டு (Na2S2O5) மட்டுமே கிடைக்கிறது.[3].
வினை மற்றும் பயன்கள்
கரைந்துள்ள ஆக்சிசனில் சோடியம் பைசல்பைட்டு நன்கு வினைபுரியுமென்பதால் தொழிற்சாலைகளில் இதை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்துகிறார்கள்.
2 NaHSO3 + O2 → 2 NaHSO4
ஆக்சினேற்ற அரிப்பைத் தடுப்பதற்காக பொதுவாக பெரிய குழாய் அமைப்புகளில் இது சேர்க்கப்படுகிறது. உயிர்வேதியியல் பொறியியல் பயன்பாடுகளில் ஓர் அணு உலையில் காற்றில்லா நிலைமைகளைப் பராமரிப்பதற்கு இச்சேர்மம் உதவியாக இருக்கும்.
சல்பைட்டு உணவு மற்றும் பானங்கள் பாதுகாப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.