செமினோலே

செமினோலே
ஒசியோலா
மொத்த மக்கள்தொகை
(10,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஐக்கிய அமெரிக்கா (ஒக்லஹோமா, புளோரிடா)
மொழி(கள்)
ஆங்கிலம், முஸ்கோஜியம், கிறீக்
சமயங்கள்
புரட்டஸ்தாந்தம், பிற
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்

செமினோலே என்பது, தொடக்கத்தில், புளோரிடாவிலும், தற்போது புளோரிடாவிலும், ஒக்லஹோமாவிலும் வாழும் தொல்குடி அமெரிக்க மக்களைக் குறிக்கும். செமினோலே தேசிய இனம் 18 ஆம் நூற்றாண்டளவில் உருவானது. இது, பல இனக்குழுக்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஜோர்ஜியா, மிஸ்சிசிப்பி, அலபாமா ஆகிய இடங்களைச் சேர்ந்த தொல்குடி அமெரிக்கர், முக்கியமாகக் கிறீக் தேசிய இனம்; தென் கரோலினா, ஜோர்ஜியா ஆகிய பகுதிகளில் அடிமைத் தளையில் இருந்து தப்பிய ஆபிரிக்க அமெரிக்கர் என்போர் இவ்வினத்தாருள் அடங்குவர். ஒக்லஹோமாத் தேசிய இனத்தவர் உட்பட ஏறத்தாழ 3,000 செமினோலேக்கள் மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் பக்கம் துரத்தப்பட்டபோது, பல புதிய உறுப்பினர்களையும் அவர்கள் வழியில் இணைத்துக் கொண்டனர். சுமார் 300 - 500 செமினோலேக்கள், புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில் தங்கி இடப்பெயர்வுக்கு எதிராகப் போராடிவந்தனர். இப் போரில் சுமார் 1,500 வரையான அமெரிக்கப் படையினர் இறந்து போனதாகச் சொல்லப்படுகின்றது. செமினோலேக்கள் என்றும் ஐக்கிய அமெரிக்க அரசிடம் சரணடையவில்லை. இதனால் புளோரிடாவின் செமினோலேக்கள் தங்களை அடங்கா மக்கள் (Unconquered People) எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். புளோரிடா செமினோலேக்கள் மட்டுமே ஐக்கிய அமெரிக்க அரசுடன் முறையான ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளாத அமெரிக்க இந்தியப் பழங்குடியாகும்.

இன்று அவர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது தன்னாதிக்கம் உண்டு. அவர்களுடைய பொருளாதாரம், புகையிலை வணிகம், சுற்றுலா, சூதாட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வரலாறு

புளோரிடாவை எசுப்பானியர்கள் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த தொல்குடியினர் பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். பிரித்தானியர், 1763 ஆம் ஆண்டில் புளோரிடாவைக் கைப்பற்றியபோது, தப்பிய சிலரையும் எசுப்பானியர் கியூபாவுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகின்றது.

18 ஆம் நூற்றாண்டில், கீழ் கிறீக் தேசிய இன மக்கள், மேல் கிறீக் மக்களின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்காக புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அங்கு ஏற்கெனவே இருந்த தொல்குடிகளுடன் கலந்தனர். அங்கிருந்த தொல்குடிகளுள், யமாசிப் போரில் அகதிகளாக இடம்பெயர்ந்த யூச்சி, யமாசி போன்ற பிற குடிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் செமினோலேக்கள் என அழைக்கப்பட்டனர். செமினோலே எனும் சொல், ஓடியவர்கள் எனப்பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லிலிருந்து வந்த, கிறீக் மொழிச் சொல்லான சிமானோ-லி என்பதிலிருந்து உருவானது.

செமினோலேக்கள் ஒரு கலப்பு இனத்தவராவர். ஜார்ஜியாவிலிருந்து வந்த கீழ் கிறீக் இனத்தவர், மிக்காசுக்கி மொழி பேசும் முஸ்கோஜிகள், தப்பிய ஆபிரிக்க அமெரிக்க அடிமைகள், குறைந்த அளவில் பிற அமெரிக்க இந்தியப் பழங்குடி இனத்தவர் மற்றும் ஐரோப்பியர் என்போர் இக் கலவையில் அடங்குவர். இணைந்த செமினோலேக்கள் இரண்டு மொழிகளைப் பேசினர். அவை தொல்குடி அமெரிக்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பு மொழிகளான கிறீக், மிக்காசுக்கி என்பனவாகும். மொழி அடிப்படையில் மட்டுமே தற்கால புளோரிடாவின் மிக்கோசுக்கி பழங்குடிகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!