சிலப்பதிகாரத்தில் அரசு முறை செய்திகள்

சிலப்பதிகாரம் முடியுடை மூவேந்தர்கள் பற்றிய பல அரசியல் செய்திகளைத் தன்னகத்தே கொண்ட காப்பியமாகும். இதன் மூலம் அக்கால ஆட்சிமுறை, அரசர்கள் பின்பற்றிய நெறி முறைகள் போன்ற பல செய்திகளை நாம் அறியலாம்

சிலம்பால் அறியலாகும் ஆட்சிக் குழாங்கள்

அரசாட்சியை மேற்கொண்ட அரசர்க்கு அமைச்சன், புரோஹிதன், படைத்தலைவன், தூதன், ஒற்றன் என்னும் ஐவரும் (ஐம்பெருங்குழு), கணக்கதிகாரி, நிறைவேற்றுத்தலைவன், பொருளறைத்தலைவன், கஞ்சுகிமாக்காள், பிரதிநிதிகள், படைத்தலைவன், யானைப்படைத்தலைவன், குதிரைப்படைத்தலைவன் என்னும் எண்மரும் (எண்பேராயம்) இன்றியமையாதவர். இவர் துணை கொண்டு அரசாங்கம் இனிதியங்கும். செங்குட்டுவனின் குதிரைப் படைத்தலைவனாகிய வில்லவன்கோதையும், கணக்கதிகாரியான அழும்பில்வேளும் ஆட்சித்துணையாய் இருந்தனர். சஞ்சயனும் நளனும் தூதர் தலைவர். சஞ்சயன் கஞ்சுகமாக்கட்குத் தலைவனாயிருந்தான். அரசர் ஆணையால் ஒற்றர்கள் வேற்று நாட்டுக்கு உருமாறிச் சென்றனர். அதுபோல வேற்று அரசர்தம் ஒற்றரும் வஞ்சி வந்து மறைந்து உறைந்தனர். செயல் தொடங்கும் முன் அரசன் தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல் வழக்கம். கோப்பெருந்தேவியும் இக்கூட்டத்தின்கண் இடம் பெற்றாள் என்பது பத்தினிக்கடவுட்கு கோயில் எடுக்க அரசன் தன்னதிகாரிகளுடன் சூழ்ந்த போது இளங்கோவேண்மாள் அங்கிருந்தமையால் அறியலாம். அரசியல் வினைகளில் நெடுநேரம் ஈடுபட்டதனால் உடல் உறுப்புகள் தளர்ந்தபோதும், வெறுத்த போதும் கூத்துட்படுவோனை தலைவனாகக் கொண்ட "சாக்கையர்" அங்கு ஆடலும் பாடலும் நிகழ்த்துவர். அரச பதவி வழிவழியாக வருவதே முறையாக இருந்தது.

கொடி முதலியன

தமிழகம் பல பிரிவுகளாக இருந்தமையால் ஒவ்வொரு பிரிவும் ஒரு தனிக்கொடியைக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் சேர ,பாண்டிய சோழராகிய மூவரும் முறையே வில், மீன், புலியென்னும் மூன்றனையும் கொடியாகக் கொண்டனர். அவர் தம் மாலை முறையே பனை, வேம்பு மற்றும் ஆத்தி ஆகும்.

அரச குமரர்கள்

நீதியோடு முரண்பட்ட போது அரசனின் புதல்வர்களாயினும் நன்கு தண்டிக்கப்பட்டனர்.இதற்கு மனு நீதி கண்ட சோழனும், கிள்ளிவளவனும் தக்க சான்றாவர். உரிமையால் தாயம் எய்த வேண்டியவன் அதனைத் தடையின்றிப் பெறுவதற்காக வேண்டி பிறிதொருவன் துறவினை மேற்கொண்டு அவ்வுரிமை பிழையாவண்ணமும், முறை தப்பாமலும் காத்தலுமுண்டு. சேரன் செங்குட்டுவனின் உடன் பிறந்தவரான இளங்கோவடிகள் செயலே இதற்கோர் சான்றாகும்.

ஆட்சி இல் காலம்

ஓர் அரசன் இறந்து பட்டால், அவருக்குப்பின் வேறோர் அரசன் அரசுக்கட்டில் ஏறுவதில் காலம் நீளும். கண்ணகியால் நெடுஞ்செழியன் இறக்க, அங்கு அரசுக்கட்டில் சிறிது காலம் ஆனது. கொற்கை வேந்தனான இளஞ்செழியன் அல்லது வெற்றிவேல் செழியன் மதுரைக்குச் சென்று அரசுக்கட்டில் ஏறும் வரையிலும், அரசாட்சி ஆயத்தார் வசம் இருந்தது என்பதும் அறியவருகிறது.

பொழுது போக்கு

அக்காலப் பொழுது போக்காக ஆடலும் பாடலும் இருந்தன. ஆடல் பாடல்களில் வல்லவர்களால் இவை நிகழ்த்தப்பட்டன. செங்குட்டுவன் அடிக்கடி இலவந்திகைப் பள்ளி சென்று கோப்பெருந்தேவி இளங்கோ வேண்மாளோடு பொழுது போக்கினான் எனபர்.

சிறைவீடு செய்தல்

அரசன் பிறந்த நாளிலே பெருவிழா செய்தல் வழக்கம். அவ்விழா 'பெருநாள்' எனவும் 'பெருமங்கலம்' எனவும் வழங்கப்பெறும். அப்போது குற்றவாளிகள் அனைவரும் சிறைவீடு பெறுவர். வேறு காலங்களிலும் இச்சிறைவீடு நிகழ்தல் உண்டு. பத்தினிக் கடவுட்குக் கோயிலெடுத்து விழாக்கொண்டாடிய நாளில் குற்றாவாளிகள் அனைவரும் சிறைவீடு பெற்றமை இதற்கொரு சான்றாகும்.

துலாபார தானம்

அரசர் கொண்ட்டாடும் விழா பலவற்றுள் 'துலாபாரதானம்' எனப்படும் கொடை நடை பெற்றது. இத்தானம் செய்கின்றவர் தன் எடையளவு பொன்னை கேள்வியாற் சிறப்பெய்திய மறையோனுக்கு அல்லது ச்ரோத்திரிய மறையோனுக்குக் கொடுப்பர். பத்தினிக் கடவுட்குப் படிமஞ்சமைக்கச் சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்கொண்டு, கொண்ட கல்லை நீர்ப்படை செய்த போது, அவ்வாற்றின் கரையிலே மாடல மறையோற்கு துலாபாரதானம் செய்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

அரசாங்கப் பொருட்பகுதி

பொருட்பகுதி காவிதிமாக்கள் என்னும் கூட்டத்தாரால் ஈட்டியும், வகுத்தும், காத்தும், மேற்பார்க்கப் பெற்று வந்தது. இறுக்கும் இறையினை( வரி) உரிய காலத்தே மக்களிடமிருந்து தொகுத்தல் இவற்குக் கடன் எனத்தெரிகிறது. பொருளாக்கம் பற்றிய ஆராய்ச்சி நிகழும் போதெல்லாம் அரசன் பொருளமைச்சனது சூழ்ச்சித்திறனை நாடியே நிற்பான். கண்ணகிக்குக் கோயில் கட்டிய போது ' வரி தவிர்க்க' என்ற வேந்தன் ஆணையை நிறைவேற்றிய 'ஆயக்கணக்கர்' என்பவர் இப்பொருளமைச்சனின் கீழுள்ள அதிகாரி ஆவார்.

வாணிகரே நாட்டிலுள்ள பெருஞ்செல்வர். அரசன் அவர் தம்மோடு நட்பு கொண்டு அளவளாவினான். உரியவர்க்குப் பட்டமளித்துச் சிறப்பு செய்தான். அப்பட்டங்களுள் ' எட்டி' என்பதும் ஒன்று. எட்டிசாயலன் எனப் பெயருடைய வாணிகன் ஒருவனைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது.

புதைப்பொருட்கலன்

பொதுவாகப் புதைப் பொருளனைத்தும் அரசாங்கத்தைச் சார்ந்தனவே. பாண்டியர் ஆட்சிகாலத்தே ஒருகால் நெடுஞ்செழியன் புதைபொருளெல்லாம் கண்டெடுத்தோர்க்கு உரியது என ஓர் ஆணை பிறப்பித்ததாக அறியலாம்.

போர்

பழந்தமிழரின் போர்ப்படைகள் தேர், கரி(யானை), பரி(குதிரை),காலாள் என நாற்பகுப்பினைக் கொண்டது. மிளையாலும் கிடங்காலும் காப்பமைந்த அரண்களின் மேலிருந்து பகைவர் உட்புகாவண்ணம் காத்துப் போர் புரிவர். மதில் தலைகளில் கணக்கற்ற மாந்தரை மிக விரைவாகத் தாக்கும் வேல்பொறிகள் பல நிறுவப்பட்டிருக்கும். அவை

  • கருவிரலூகம்
  • கல்லுமிழ்கவண்
  • தூண்டில்
  • தொடக்கு
  • சென்றெறி சிரல்
  • ஆண்டலையடுப்பு
  • கவைக்கோல்
  • புதை
  • புழை
  • ஐயவித்துலாம்
  • கைபெயரூசி
  • பனை
  • கனையம்
  • சதக்கினி
  • தள்ளிவெட்டி
  • களிற்றுப் பொறி
  • விழுங்குபாம்பு
  • கழுகுப்பொறி
  • புலிப்பொறி
  • குடப்பாம்பு
  • சகடப்பொறி
  • தகர்ப்பொறி
  • அரிநூற்பொறி

எனப் பலவாகும்.
அரசன் தலை நகர் விட்டுப் புறப்படுங்கால் படைஞர்க்குப் பெருஞ்சோறு நல்குவான்; வாளினையும் குடையினையும் நன்முழுத்தத்தில் யானையின் பிடர்த்தலையேற்றி முற்செல்ல விடுவான். தலை நகரிலுள்ள தனிக் கடவுளரையும், வேள்விச் சாலைக் கண்ணுள்ள முத்தீயையும் நகர் நீங்குமுன் வணங்குதல் வழக்கம். நடுகல் வணக்கமும் நடைபெறும். போர் தொடங்கும் முன் பகையரசர்க்கு " உய்தல் அரிது; அடிபணிந்துய்மின்; போரான் வருவன பொறுத்தற்கரிய " என அரசர் அறத்தாறு பற்றி எடுத்தியம்புவர். போர்க்களத்துப் பல்வகைத் துரியங்கள் முழங்கும். அவை

  • கொடும்பறை
  • செடுவயிர்
  • முரசம்
  • பாண்டில்

முதலாய பல்வகையாகும். போரில் தோற்ற வேந்தர் சிறை செறிக்கப்பெறுவர். வணங்கிய மன்னர் சிறைவீடு பெறுவர். போரின் கொடுமை பொறுத்தற்கரியதாகையால், எதிர்த்த படைவீரர் படைகளை எறிந்து துறவியராகவும், இசைவல்லோராகவும், கூத்தராகவும் அந்தணராகவும் உருமாறித் தப்புவர். இதனால் அக்காலத்துப் போர் வீரர் பின்பற்றி வந்த போர் நீதிகள் புலனாகும்.

முறைசெய்தல்

குறை வேண்டுநர்க்கு முறை செய்யும் இடம் அறக்களம் எனப்படும். இக்களத்தின் முன் முதல் நீதிபதிகளோடு, கல்வியும், கேள்வியும், ஒழுக்கமும், அறநூலறிவும், வல்ல அந்தணரும் கலந்து முறை செய்வர். சிற்சில அமையத்து அரசர் ஆய்வின்றி விரைந்து , கோல்கோடி, முறை செய்ததும் உண்டென்பது கோவலன் வழக்கால் அறியலாம். களவு போன்ற குற்றங்களுக்கு தலைத்தண்டம் விதிப்பது வழக்கமில்லை. பொய்க்கரிபுகுவோர், தவமறைந்தொழுகுவோர், கற்பில்லா மகளிர், கீழறையமைச்சர், புறங்கூறுவோர், பிறன்மனைநயவோர் என்னுமிவ்வைவரும் நாட்டு சட்ட திட்டங்களின் படி முதல் குற்றவாளிகளாவார்கள்.

உசாத்துணை

  1. ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
  2. வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
  3. எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!